Monday, 4 December 2017

உலகை உலுக்கிய உப்பு சத்தியாக்கிரகம்


உலகை உலுக்கிய உப்பு சத்தியாக்கிரகம்
எடுத்த உப்போ கையளவு. ஏற்பட்ட தாக்கமோ உலகளவு. இதுதான் காந்திஜி நடத்திய உப்பு சத்தியாக்கிரகத்தின் ரத்னச் சுருக்க வரலாறு.
காந்திஜி தலைமை ஏற்று நடத்திய போராட்டங்களில் இது ஒரு மாஸ்டர்-ஸ்ட்ரோக். ஏழை எளிய மக்களின் தோள்களைச் சுமையாய் அழுத்திய பிரச்சினை பற்றியது. முழுக்க முழுக்க ஆன்ம சக்தியை அடிப்படையாய்க் கொண்டு சத்தியத்திலிருந்தும் அகிம்சையிலிருந்தும் பிறழாது நடத்திய போர் இது.
பிரிட்டிஷாரிடத்திலே  மனமாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமானால், நமது பிரச்சினைகள் குறித்து உலகத்தின் ஒட்டுமொத்த நல்லெண்ணத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுமென்று காந்திஜி நினைத்தார். உப்பு சத்தியாக்கிரகத்தின் மையப் பிரச்சினையும்,அதன் செயல்பாடும் இதற்கு நல்லதொரு வாய்ப்பாக அமையும் என்று அவர் நம்பினார். இந்த நோக்கில் போராட்டத்தின் நுட்பமான அம்சங்களில் கூட ஆழ்ந்த கவனம் செலுத்தினார். தொண்டர்களுக்குத் தீவிரப் பயிற்சி அளித்தார். மேனாட்டுப் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களுடன் நட்புப்பாலம் அமைத்துக் கொண்டார்.
ஏப்ரல் 5ம்தேதி,1930. தண்டியில் உப்பெடுத்த புனிதப் பொன்னாளுக்கு முன் தினம். அவர் உலகுக்கு விடுத்த ஒற்றை வரிச் செய்தி இதுதான்:
“வலிமைக்கு எதிராக நியாயம் தொடுத்துள்ள இந்தப் போரில் நான் உலகத்தின் அனுதாபத்தை நாடுகிறேன்”
அதே தினம், அமெரிக்க மக்களூக்கு, இந்திய மக்களுடைய சுதந்திரத்துக்கு ஆதரவாக, நீங்கள் திட்டவட்டமாக ஒட்டுமொத்தமாகக் குரல் எழுப்ப வேண்டும் முழுக்க முழுக்க அகிம்சை முறையில் இந்தப் போராட்டம் நடக்கிறது என்பதற்கு உங்கள் ஒப்புதல் வேண்டும். இந்தப் போராட்டம் வெற்றி பெறுமானால், இந்தியா உலகத்துக்கே ஒரு நற்செய்தியை வழங்கியிருக்கம்  என்பதை அடக்கத்துடன், ஆனால் ஆணித்தர உண்மையாகச்  சொல்லிக்கொள்வேன்”
உலக நாடுகளின் கவன வெளிச்சம் இந்த அமைதிப் போரின் மீது படிய வேண்டுமென்ற காந்திஜியின் நோக்கம் வெற்றிகரமாக நிறைவேறியது.
யாத்திரை தொடங்கிய நேரத்தில் சபர்மதியில், அவரைச் சுற்றிலும் நோட்டுப் புத்தகமும் பென்சிலுமாக,அடுத்து என்ன சொல்லப்போகிறார், என்ன செய்யப்போகிறார், என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் முண்டியடித்துக்கொண்டு,உள்நாட்டு வெளிநாட்டு நிருபர்கள் கூட்டம். விர் ரிடும் சினிமாடொக்ராஃப் இயந்திரங்கள். க்ளிக்கிடும் காமிராக்கள். அஹமதாபாத் அஞ்சல் இயந்திரம் அயல்நாட்டுத் தந்திகளால் மூழ்கிக் கிடந்தது. நியூயார்க் நகரத்திலிருந்து ஜான் ஹேய்ன் ஹோம்ஸ் என்ற பாதிரியார், ”கடவுள் உங்களைப் பாதுகாக்கட்டும்” என்று தந்தி கொடுத்திருந்தார்.
தர்ஸானா என்று ஓர் இடம்  அங்கு ஓர் உப்புக் கிடங்கு. அங்கு அமைதியான முற்றுகைப் போராட்டத்துக்காக காந்திஜியின் தொண்டர்கள் கூடியிருந்தார்கள். இந்தப் போராட்டம் குறித்து  வைஸ்ராய் இர்வின் பிரபு ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கு  அனுப்பிய தகவலின்படி-’போலீசார் அமைதி காத்தார்கள். நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே ,இலேசான வன்முறையைக் கையாள வேண்டியதாயிற்று. அதனால் பலருக்கு சிராய்ப்புகள் ஏர்பட்டன. ஆனால் அவர்கள் கீழே விழுந்து, குப்புறப் டுத்துக்கொண்டு,மயங்கி விழுந்தது போலவும், செத்து விடப் போவது போலவும், பண்ணிய பாசாங்கு, வேடிக்கையாக இருந்தது.”
இதுதான் வேதவாக்காக இருந்திருக்கும். சரித்திர உண்மையாக வரலாற்றுப் புத்தகங்களில் இடம் பெற்ரிருக்கும்----
வெப் மில்லர் என்ற அமெரிக்க நிருபர் அங்கு இல்லாதிருந்தால்-
நெஞ்சம் பதைக்காமல் இருந்திருந்தால்-.
யுனைடெட் பிரஸ் என்ற செய்திஸ்தாபனத்தின்  மூலம் சொற்சித்திரமாக அவர் அனுப்பிய செய்தி அறிக்கை பல்வேறு நாடுகளில் ஏறத்தாழ 1500 பத்திரிகைகளில் வெளிவராமல் இருந்திருந்தால்!
அவர் போலீஸாரின் காட்டு தர்பாரைத் தத்ரூபமாக விவரிக்கிறார். இன்னும் ஒரு வினாடியில் தங்கள் மீது இரும்புத்தடி இறங்கும், மரணம் கூட நேரலாம் என்று தெரிந்து கொண்டும் கூட,சிறிதும் சலனமோ அச்சமோ இல்லாமல் அணி அணியாகத் தொண்டர்கள் முன்னேறியதைச் சொல்கிறார். தற்காத்துக் கொள்ளக்கூட தங்கள் கையை உயர்த்தாதது பற்றிப் பேசுகிறார். அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பயிற்சி பற்றி வியக்கிறார். முத்தாய்ப்பாக,”18 ஆண்டுகளாக 22 நாடுகளில் செய்தி சேகரிக்கச் சென்றிருக்கிறேன். புரட்சிகள், கிளர்ச்சிகள், உள்நாட்டுக் கலகங்கள், வீதிப் போர்கள் பலவற்றைக் கண்டிருக்கிறேன்.ஆனால் இது போல நெஞ்சுருக்கும் நிகழ்ச்சிகளை எங்கும் கண்டதில்லை” என்று எழுதுகிறார். மான்செஸ்டர் கார்டியன் வெளியிட்ட தாகூரின் அறிக்கை:” ஐரோப்பா உலக அரங்குகளில் நியாயமான நடத்தைக்குப் பாதுகாவலனாக, தார்மிக நெறிகளைப்பற்றி உபதேசம் செய்து கொண்டிருந்த காலம்  ஓய்ந்து  விட்டது.”
உலகின் பல நாடுகளில் இந்தப் போராட்டத்தின் எதிரொலி கேட்டது. விரிவான செய்திகள், கேலிச்சித்திரங்கள், அனுதாபப் போராட்டங்கள் பற்பல நாடுகளில் வெடித்தன.  கொலம்பியா பிராட்கேஸ்டிங் கார்ப்பொரேஷன் காந்திஜியின் பிரத்தியேகச் செய்தியை வெளியிட்டது.. பிரிட்டிஷ் சிங்கத்தின் வாலில் காந்திஜி உப்பைத் தேய்ப்பது போன்ற ஒர் கார்ட்டூனை பிரபல கார்ட்டூனிஸ்ட் டேவிட் லோ வரைந்திருந்தார். அது பெரும் பரபரப்பை ஏர்படுத்தியது
“சமீப காலத்தில் எழுந்த அற்புதமான மந்திர சக்தி வாய்ந்த சவால் இது” என்றார்-ஜியாஃப்ரே ஆஷ்.
”அகிம்சை எனப்து கோழைத்தனத்தின் வெளிப்பாடு என்று எள்ளி நகையாடிய உலக நாடுகள் இந்தப் போராட்டம் எவ்வளவு கட்டுக்கோப்பாக நடந்தது என்று தெரிந்து கொண்டால் ஏளனமெல்லாம் பொடிப்பொடியாகி விடும்” என்றார்-ரீச்சேர்டு க்ரேக்..
ஸ்லோகோம்ப் என்ற டெய்லி ஹெரால்டு நிருபர் சொல்லுவது: இந்த ரத்தமில்லாத ,வெற்றிகரமான புரட்சியை நோக்கி உலக நாடுகளின் கவனம் திரும்பியிருக்கிறதில் ஆச்சரியமில்லை” என்கிறார். காந்திஜி சிறைப்பட்டது குறித்து அவர் சொலவது ,”இந்தியாவின் ஆன்மா சிறைப்பட்டுக் கிடக்கிறது”:
இந்தப்  போராட்டம் உலகநாடுகளின் கவனத்தை கவர்ந்ததன்.. விளைவுதான் என்ன?
கைதானவர்கள் விடுதலையானார்கள். அரை நிர்வாணப் பக்கிரியாக, முன்னாள் இன்னர் டெம்பிள் வக்கீல் ,ராஜப்பிரதிநிதியுடன்யுடன் சரிசமமாக விவாதிக்க  வைஸ்ராய் மாளிகையின் படிக்கட்டுகளில் ஏறி வருவதைப் பார்க்க வின்ஸ்டன் சர்ச்சிலுக்க்கு ”குமட்டிக்கொண்டு” வந்ததாம்! ” இந்தியாவில் பிரிட்டிஷார் காலடி எடுத்து வைத்த நாளிலிருந்து இத்தகைய அவமானத்தைச் சந்தித்ததில்லை” என்று அவர் குமுறுகிறார்.
அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட், ராம்ஸே மாக்டொனால்டுக்கு இந்திய விடுதலை பற்றிப் பரிந்துரைக்கிறார். காந்திஜிக்கும் வைஸ்ராய் லின்லித்கோவுக்கும் இடையே சமரசம் பேச ஒரு பிரதிநிதியையும் அனுப்பி வைக்கிறார்.
லூயி ஃபிஷர் “தலையை நிமிர்த்திக் கொண்டு,முதுகுத் தண்டை விறைப்பாக வைத்துக்கொண்டால் கழுத்தில் உள்ள நுகத்தடியை உதறித் தள்ளி விடலாம் என்று இந்தப் போராட்டம் இந்தியர்களுக்குச் சொல்லிக் கொடுத்தது” என்கிறார்.
காந்திஜியைத் தமது வழிகாட்டியாகக் கொண்ட மார்ட்டின் லூதர் கிங் (இளையர்)  சொன்னது. நீக்ரோக்கள் இப்படிச் சொல்லும் நிலை வரவேண்டும்.
“துன்பத்தைதரும் உங்கள் வல்லமைக்கு எதிராக அதைத் தாங்கி கொள்ளும் வல்லமை எங்களுக்கு இருக்கிறது..
உங்களை நாங்கள் வெறுக்க மாட்டோம்-ஆனால் உங்கள் கேடான ஆணைகளுக்குகீழ்ப்படிய மாட்டோம்.,
இதுவே சத்தியாக்கிரக தத்துவத்தின் சாரம்



No comments:

Post a Comment