Thursday, 21 December 2017

தெய்வத்தின் குரல்

தெய்வத்தின் குரல்
கஷ்டம் வந்தது; இறைவனிடத்தில்
கண்ணீர் விட்டுக் கதறி அழுதேன்.
துன்பம் தீர்ந்தது; எனினும் அந்தோ!
தொடர்கதையாகப் புதுப்புதுத் துன்பம்!
தொழுதேன்;அழுதேன்: துடைத்தனன் இறைவன்!
சொல்லி அழுது சலித்துப்போச்சு!
தெளிவு பிறந்தது; எதிர்மறைப் பிரார்த்தனை
தேவை இல்லாதது; சுருங்கச் சொன்னால்
சந்தோஷம்தான் தேவை; அதற்குத்
திட்டம் தீட்டினேன்,இதுஇது வேண்டும்
பட்டியலிட்டுப் பிரார்த்தனை புரிந்தேன்
சட்டென அனைத்தும் தந்தான் இறைவன்
எனினும் ஏதோ நிம்மதி இல்லை
என்ன்ன செய்வது நிம்மதி பெற்றிட?
இப்படி இப்படி நடந்துகொள் என்று
இறைவன் எனக்குக் குருமுகம் சொன்னான்.
சத்சங் பிரார்த்தனை தியானம் நற்செயல்
புத்தகம் மூலம்,பிரவசனமாக
பஜனை என்று பலப்பல சொன்னான்.
அட்டவணைபோல் அடுக்கி எழுதினேன்
இதுவே எனக்கொரு தளை என ஆச்சு!
இறைவன்கூட மீட்பதற்கில்லை!
என்னை உன்னிடம் ஒப்படைத்திட்டேன்!
எதுவும் நானினி முயலவே மாட்டேன்!
சொன்னது நாவு; நெஞ்சம் மட்டும்
என்னவோ இதனை ஏற்றிடவில்லை.
அவன்பாடென்று அக்கடாவென்று
சிவனே என்று சோம்பலே மிச்சம்!
’தெய்வத்தின் குரல்’  திருவாசகமாய்த்
தெளிவைத் தந்தது!நச்சென ஒருசொல்!
பக்தி வேணுமெனப் பிரார்த்தித்துக்கொள்;
மத்தவை எல்லாம் அவன் பொறுப்பாகும்!





No comments:

Post a Comment