Monday, 11 December 2017

காந்திஜியின் உண்ணாவிரதங்கள்-தன்னைத்தான் கட்டுதல்

காந்திஜியின் உண்ணாவிரதங்கள்-
தன்னைத்தான் கட்டுதல்.
காந்திஜி உண்ணாவிரதங்களை ஓர் அறிவியல் தத்துவமாக வகுத்ததை முன்னொரு பதிவில் பார்த்தோம். அந்த வெளிச்சத்தில் அவரது உண்ணாவிரதங்களை நிகழ்வு -ஆய்வு செய்வோம். அறிவுபூர்வமான ஆய்விலிருந்து அவருக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டாம்.
காந்திஜியின் உண்ணாவிரதங்கள், சத்தியாக்கிரக வரலாற்றுக் காலத்துக்கு முன்பே துவங்கிவிட்டன.. சின்ன வயதில் அன்னை புத்லிபாயுடன் சேர்ந்து ஏகாதசி மற்றும் சமயரீதியான உண்ணாவிரதங்கள் இருந்திருக்கிறார். டால்ஸ்டாய் பண்ணை  காலத்தில், ரம்ஜான் நோன்பின்போது இஸ்லாமியருடன் சேர்ந்து இந்து, கிறிஸ்துவ, பார்சி நண்பர்களும் நோன்பு இருந்திருக்கிறார்கள்.  இது பண்ணையில் வசித்த அனைத்துச்  சமயத்தினரிடமும் தோழமை உணர்வை உருவாக்கியது..
சரியான புரிதலுடனும், அந்தரங்க சுத்தியுடனும் இருக்கும் உண்ணாவிரதம், புலனடக்கத்துக்குத் துணை நிற்கும் என்பது காந்திஜியின் கருத்து.. பாரதி சொன்ன ”தன்னைத்தான் கட்டுத”லுக்கு உண்ணாவிரதம் ஒரு சாதனம்.
1913 முதல் 1948 வரை காந்திஜி 17 உண்ணாவிரதங்கள்-140 நாட்கள் இருந்திருக்கிறார். 10 நாட்கள் இருந்த 8 உண்ணாவிரதங்கள் குறித்து சரியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

அவர் மேற்கொண்ட உண்ணாவிரதங்கள் பெரும்பாலும்-அன்பு கொண்டவர்களின் மன மாற்றத்துக்காக, செய்த தவற்றுக்கு பிராயச்சித்தமாக, வன்முறைக்கு எதிராக, ,கோரிக்கைகளை முன்வைத்து, அமைந்தவை. அவற்றைக் கால வரிசைப்படி தொடர்ந்து பார்ப்போம்

No comments:

Post a Comment