Sunday 3 December 2017

போபால் பேரிடர்-விதியின் பிழையன்று!

போபால் பேரிடர் –விதியின் பிழையன்று1
அமெரிக்க யூனியன் கார்பைடு கம்பெனி வேளாண்மைக்குப் பயன்படும் பூச்சி கொல்லி மருந்து ”செவி”னை 1957ம் ஆண்டு வாக்கில் உருவாக்கியது. பாஸ்ஜீன் என்ற வாயுவையும் மோனோமெதிலமின் என்ற வாயுவையும் இணைத்து ஒரு புதிய மாலிக்யூலை உருவாக்கினார்கள். அதுதான் நமது வில்லன். செவினில் முக்கியப் பங்கு இதற்குத்தான். ஆராய்ச்சி செய்ததில் இது பயங்கரமான விளைவுகளைக் கொண்டது என்று முடிவு வந்தது. இந்த வாயுவை நுகரும் விலங்குகளுக்கு நொடியில் சிவலோகப் ப்ராப்தி நிச்சயம் மின்னல் வேகத்தில் சுவாச உறுப்புகளைத் தாக்கும். முழுமையாகக் கண்பார்வை  போய்விடும். தோலின் நிறமிகள் பொசுங்கிப் போகும். இதற்கு Tolerance Limit  என்று ஒன்றைச் சொல்லி சான்று “வாங்கி” வைத்து விட்டார்கள்.
“வையத் தலைமை கொள்”வதில் தீவிரமாக இருந்த யூனியன் கார்பைடு உலகச் சந்தையை நோட்டம் விட்டது. இந்த சந்தர்ப்பத்தில் இந்தியா தனது பசுமைப் புரட்சிக்குத் துணையாக ஒரு பூச்சி கொல்லி மருந்தைத் தேடிக் கொண்டிருந்தது. அந்நிய நாட்டு கம்பெனி ஏதும் கிடைக்காதா என்று பார்த்துக் கொண்டிருந்த தருணத்தில்தான் யூனியன் கார்பைடு நுழைந்தது. மேள தாளத்துடன் அவர்களை வரவேற்று, உடனடியாக 1200 டன் செவினுக்கு ஆர்டர் கொடுத்தது இந்தியா. யூனியன் கார்பைடும் ஆண்டுக்கு 5000 டன்னை இந்தியாவிலேயே உற்பத்தி செய்து தருவதற்கு ஒரு தொழிற்சாலை அமைக்க ஒத்துக்கொண்டது. உடனடியாக 1200 டன் செவின் தர வேண்டுமே? அதற்கு என்ன வழி?  கெடுபிடி காரணமாக அலெக்ஸாண்ட்ரியா துறைமுகத்தில் நிறுத்தி வைத்திருந்த செவினை இந்தியாவுக்குத் தள்ளி விட்டார்கள். அது வந்த பிறகுதான் தெரிந்தது; வந்த செவின் அப்படியே பயன்படுத்தக் கூடியதல்ல. MIC சேர்த்துக் கலக்கியாக வேண்டும்.இப்படிப்பட்ட தயாரிப்பைச் செய்வதற்கு பெரிய கம்பெனிகளுக்கு உரிமை கிடையாது மத்தியதரத் தயாரிப்பாளர்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த துறை அது. என்றாலும், ஒரு பினாமி பேரில் உரிமை வாங்கி விட்டார்கள். இந்திய அரசாங்கத்துக்கோ, நகராட்சிக்கோ இவர்கள் மூலப்பொருள் அபாயகரமான நச்சுத்தன்மை வாய்ந்தது என்று சொன்னார்களா? ஊஹூம்…மூச்! சரி. MIC  எப்படிக் கிடைக்கும்? அமெரிக்காவிலிருந்து பம்பாய்த் துறைமுகத்துக்கு வந்து அங்கிருந்து இரண்டு லொட லொட லாரிகளில் 530 மைல் தூரம் ஒவ்வொன்றும் 44 கேலன் கொண்ட 16 டிரம்களில் கொண்டு வந்தார்கள். இது 0 டிகிரி செல்ஷியசிலேயே இருக்க வேண்டும் என்பதையும்,கொடும் நச்சுத்தன்மை வாய்ந்தது என்பதையும் கணக்கில் கொண்டால்,தாக்குப்பிடித்தது ஓர் அற்புதம்தான் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
அடுத்தபடி, போபால் மன்னருக்குக் கிடுக்கிப்பிடி போட்டு அடிமாட்டு விலைக்கு அவரது அரண்மணை நிலத்தை வாங்கி விட்டார்கள். முதல் அமைச்சர் அர்ஜுன் சிங்குக்கு அங்கே ஒரு உல்லாச விருந்தினர் மாளிகையையும் ஒதுக்கி விட்டார்கள். அரசியல்வாதிகள், அமைச்சர்கள், அதிகாரிகளின்  கேளிக்கை மண்டபமாக அது பயன்பட்டது என்பது தனிக் கதை.
இந்த, ஆண்டுக்கு 5000 டன் சமாச்சாரம் இங்கு அமெரிக்கக் கம்பெனியின் மார்க்கெட்டிங் அதிகாரியாக வந்த முனோஸ்  என்பவருக்கு குலை நடுக்கத்தை ஏற்படுத்தியது. ஆண்டுக்கு 2000 டன்னுக்கு மேல் இந்தியாவில் விற்பதற்கு சாத்தியமே இல்லை. இதை அமெரிக்கத் தலைமையிடம் சொன்னால்,’காரியத்தை கெடுத்து விடாதே, பாவீ! விற்பதற்கு 2000 டன் தயாரித்து விட்டு  பாக்கிக்கான MIC ஐ டாங்க்குகளில் சேமித்து வைத்துக் கொள்ளலாம் என்றார்கள்,கூலாக. முனோஸுக்கு இதைக் கேட்டதுமே குளிர்ஜுரம்போல் வந்து விட்டது! தமக்குத் தெரிந்த ஜெர்மனி இஞ்சினீயர்களிடம் விசாரித்தார். அவர்கள் சொன்னது: “உங்க இஞ்சினீயர்கள் எல்லாம் என்ன கிறுக்குப் பிடிச்ச பயலுவளா? ஃபாக்டரிக்கு நடுவிலே அணு ஆலையை வெக்கச் சொல்றாங்க? அத்தனை பேரும் வெடிச்சு செத்துடுவீங்கடா!” முனோஸ் இதை “மென்மையாக” எடுத்துச் சொன்னதற்கு, இஞ்சினீயர்களின் பதில் : கவலையே படாதெ! இது ஒரு சாக்கலேட் தயாரிக்கற மாதிரிதான்! ஆபத்தே கிடையாது!
4.5.1980ல் தொழிற்சாலை தனது இயக்கத்தைத் தொடங்கியது, அப்போது கமல் பாரிக் என்ற ஒரு மூத்த இஞ்சினீயருக்கு ஒரு சந்தேகம் வந்தது. “திடீரென்று ஒரு வால்வு உடைந்து போய் வாயுக் கசிவு ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த சமயம் ஒரு ரயில் வண்டி போகிறது. ரயில் பயணிகளுக்கு ஆபத்து ஏற்படாதா?” புகைக்குழாயின் உயரம், வாயு செல்லக்கூடிய திசை,வேகம் எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு ஓர் ஆவணம் தயாரித்து அமெரிக்க நிபுணர்களுக்கு அனுப்பி வைத்தார். அவர்கள் கம்ப்யூட்டரில் எல்லாம் போட்டுப் பார்த்து விட்டு,” கவலையே வேண்டாம். ரயில் உயரத்தைத் தாண்டி புகை சென்று விடும்” என்று பதில் அனுப்பினார்கள். ‘திக்’கென்றது பாரிக்குக்கு. அட பாவிகளா! ரயில் பாதைக்கு அன்னண்டைப் பக்கம் குடிசைப் பகுதிகள் அல்லவா? ஆயிரக்கணக்கான ஏழை மக்கள் வசிக்கிறார்களே? குடிசைப் பகுதிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று தலைமை அதிகாரிகள் மூலம் அரசாங்கத்தை வேண்டிக்கொண்டார் அர்ஜுன் சிங் இசையவில்லை. மாறாக தேர்தலுக்கு முன்னால் அத்தனை பேருக்கும் பட்டா வழங்கி விட்டார் அத்தனை பேரும் ஏழைபங்காளன் அர்ஜுன்சிங் வாழ்க என்று கோஷித்தபடியே வாக்குச்சாவடிக்குப் போனார்கள்!
இந்த தொழிற்சாலை தொடங்கிய சில வாரங்களிலேயே,அருகிலுள்ள குடிசைப்பகுதிகளில் கிணற்று நீர் துர்நாற்றம் வீசத் தொடங்கியது; வெள்ளை நிறமாக மாறியது; பசுமாடுகள் செத்துப் போயின. அவற்றைக் கொத்தித் தின்ற காக்கைகளும் கழுகுகளும் செத்துப் போயின. ஒவ்வொருவருக்கும் 5000 ரூபாய் கொடுத்துச் சமாளித்து விட்டார்கள். “நீரைச் சோதனை செய்து பார்க்கிறோம்; ஏதாவது கோளாறு இருந்தால் சரி செய்து விடுகிறோம்” என்றார்கள். சோதனை செய்தார்கள். “நச்சுத்தன்மை கலந்துதான் இருக்கிறது” என்று முடிவு வந்தது. என்ன செய்தார்கள்? கிடப்பில் போட்டு விட்டார்கள்!
1978ல் ஒரு பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. போபால் நகரம் முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்து கொண்டது. ராஜ்குமார் கேஸ்வானி என்ற பத்திரிகையாளர் தொழிற்சாலைக்கு விரைந்தார். நூறூ போலீஸ்காரர்கள் சுற்றி அரண் அமைத்திருந்தார்கள்.யாரையும் தொழிற்சாலைக்குள் வரவிடவில்லை.
23.12.1981ல் அஷ்ரஃப் என்ற ஊழியர் விஷவாயு தாக்கி உயிரிழந்தார். அவரது அஜாக்கிரதையினால் ஏற்பட்ட மரணம் என்று விட்டது நிர்வாகம்.
10.2.1982ல் 25 ஊழியர்கள் பாஸ்ஜீன் வாயு தாக்கி உயிரிழந்தார்கள். நிர்வாகம் இயந்திரக் கோளாறினால் ஏற்பட்ட வாயுக்கசிவு அபாய எல்லையைத் தாண்டவே இல்லை என்றுய் சாதித்து விட்டது.
தொழிற்சங்கத்தினர் 6000 நோட்டீஸ்களை அச்சிட்டு வினியோகித்தார்கள்: “ஜாக்கிரதை! ஜாக்கிரதை! ஜாக்கிரதை!! விபத்துகள்! விபத்துகள்! விபத்துகள்!!” என்று.
மாளவியா என்ற தொழிற்சங்கத் தலைவர் நிர்வாகத்தின் மெத்தனப் போக்கைக் கண்டித்து உண்ணாவிரதம் தொடங்கினார். தினம் ஐந்து பேராக தொழிலாளர்கள் அவருடன் கூட உண்ணாவிரதம் இருந்தார்கள். தொழிற்சாலை வாயிலில்  மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. நிர்வாகம் இந்த காந்தியப் போராட்டத்தை பிரிட்டிஷாரினும் மோசமாகக் கையாண்டது. உண்ணாவிரதப் பந்தல் தீக்கிரையாக்கப் பட்டது. தொழிற்சங்கங்களைத் தடை செய்து விட்டார்கள். நிறையப் பேரை டிஸ்மிஸ் செய்து விட்டார்கள். தாக்குப் பிடிக்க முடியாமல் போராட்டம் ‘பிசுபிசுத்தது!’
ராஜ்குமார் கேஸ்வானி பத்திரிகைகளில் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துக் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தார். “நகரத்தைக் காப்பாற்றுங்கள்! பின்னாலெங்களுக்குத் தெரியாமல் போய்விட்டது என்று சொல்லாதீர்கள்! போபால் ஓர் எரிமலையின்மேல் உட்கார்ந்து கொண்டிருக்கிறது!” என்றெல்லாம் எழுதினார். அவர் மேலும் எழுதியது : இப்போது புரிந்துகொள்ள மறுத்திர்களானால் சாம்பலாய்த்தான் போவீர்கள்!
அமெரிக்காவிலிருந்து இஞ்சினீயர்கள் வந்து சோதனை செய்து 51 பக்க அறிக்கை கொடுத்து விட்டுப் போனார்கள். “தொழிற்சாலை கேவலமான நிலையில் இருக்கிறது; பாதுகாப்பு என்பது எள்ளளவும் கிடையாது.” என்றெல்லாம் சான்றுகளுடன் குறிப்பிட்டார்கள். முடிவாக அவர்கள் சொன்னது: ஒரு நாள் மாபெரும் துன்பியல் நிகழ்வு நடக்கத்தான் போகிறது!” உள்ளூர் நிர்வாகம் அனுப்பிய பதில்,All defects will be rectified.” அப்புறம் என்ன ஆச்சு? இப்பல்லாம் கோர்ட் உத்தரவுகளுக்கு என்ன ஆகிறதோ, அதே கதிதான்!
மத்தியப் பிரதேச தொழில் மந்திரி சட்டசபையில் முழங்கினர்
: :கார்பைடு தொழிற்சாலையைப் பற்றி யாரும் கவலைப்படத் தேவையே இல்லை. அங்கு பயன்படுத்தப்படும் பாஸ்ஜீன் வாயு நச்சுத்தன்மை கொண்டதல்ல!”
தொடர்ந்து தொழிற்சாலை நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்ததால் செவின் உற்பத்தியை முடக்கினார்கள். உற்பத்திதான் இல்லையே என்று பாதுகாப்புச் செயல்பாடுகள் அத்தனையையும் முடக்கிவிட்டார்கள். முக்கிய ஊழியர்களை ஆயிரக்கணக்கில் வேலையை விட்டு நீக்கினார்கள். MIC டிரம் டிரம்மாக இருக்கிறது அது 0 டிகிரீயில் இருப்பதற்கு கண்ட்ரோல் தேவை என்பதையெல்லாம் புறக்கணித்து விட்டார்கள். இந்த நிலையில் அங்கு வேலை செய்யப் பிடிக்காமல் பல இஞ்சினீயர்கள் வேலையை விட்டு  விலகி விட்டார்கள். அவர்களில் மிக சீனியரான கமல் பாரிக்  போகுமுன், ஏணி வழியாகத் தொட்டி மீது ஏறி,ஏதாவது ஆபத்து வந்தால் எப்படி MIC ஐ 0 டெகிரிக்குக் கொண்டு வரவேண்டும் என்று ஒரு வால்வைத் திருகிக் காட்டி விட்டு ,நண்பர்களிடம் விடைபெற்றுக்கொண்டார் ,”பார்த்துக்கொள்ளுங்கள்! இப்போது 0 டிகிரி; இனி உங்கள் பாடு! டாட்டா!”
மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படவில்தாக தெரியவில்லை. விரக்தியில் கேஸ்வானி வேறு வேலை பார்த்துக்கொண்டு, கடை விரித்தேன் ,கொள்வாரில்லை என்று புலம்பியபடியே இந்தூருக்குப் போய்விட்டார் அத்தனை ஆபத்துகளையும் விலாவாரியாக  குறிப்பிட்டு. முதல் அமைச்சர் அர்ஜுன் சிங்குக்கு ஒரு கடிதமும், தொழிற்சாலையை உடனடியாக மூடக்கோரி உச்ச நீதி மன்றத் தலைமை நீதிபதிக்கு ஒரு மனுவும் அனுப்பி விட்டுப் போய்ச் சேர்ந்தார். இரண்டு பேரும் கப்சிப்!
1984 விபத்து நடந்ததற்குச் சில வாரங்களுக்கு முன்னல்தான் மனசு கேட்காமல் கேஸ்வானி போபாலுக்கு வந்தார். மீண்டும் இந்தியன் எக்ஸ்ப்ரெஸ்ஸில் எழுதினர். “ பொது நன்மையை எடுத்துச் சொல்கிறவர்களை மக்கள் நம்பவில்லையா? நான் கார்பைடு கம்பெனியிடம் பணம் பறிப்பதற்காக இப்படி எல்லாம் எழுதுகிறேன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களா?”
பிறகு டிசம்பர் 2ம் தேதி,1984 நடந்ததெல்லாம் ஊரறிந்த சங்கதி. ரயில்வே அதிகாரிகள்,கடைநிலை ஊழியர்கள், ஆஸ்பத்திரி டாக்டர்கள், ஜூனியர்கள் ,இணைந்து பணியாற்றிய இந்து முஸ்லிம் இளைஞர்கள்,கமிஷனர் ரஞ்சித் சிங், சில வாரங்களுக்கு முன்பே இந்திரா காந்தி கொலையை ஒட்டி நடந்திருந்த கலவரத்தில் குடும்ப உறுப்பினர்கள் ஆறு பேரை இழந்திருந்த சீக்கிய அதிகாரி கனூஜா ஆகியவர்கள் ஆற்றிய சேவையை மறக்க முடியாது.
இந்த நிலையில் முதலமைச்சர் அர்ஜுன்சிங் என்ன செய்தார்? ஊருக்கு வெளியில் இருந்துகொண்டு,போலீஸ் அதிகாரிகளுக்கு  போன் செய்திருக்கிறார்: “ஊரை விட்டு யாரும் போகக்கூடாது. ஊரைச் சுற்றித் தடுப்பு வையுங்கள்! அவரவர்களை வீட்டுக்குத் திருப்பி அனுப்புங்கள்!” போலீஸ் அதிகாரியிடம் போனை வாங்கிப் பேசினார் கமிஷனர்: “ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள், முதலமைச்சர் அவர்களே! இங்கே அவரவர் பாட்டை அவரவர் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது! ஆபத்திலிருந்து தப்பி ஓடுகிறவர்களை எந்த அதிகாரத்தை வைத்துக்கொண்டு நிறுத்தப் பார்க்கிறிர்கள்?” ’என்று. இரைந்து விட்டு டக்கென்று போனை வைத்து விட்டார்!
இறுதியாக ஒரு தகவல். யூனியன் கார்பைடு தலைமை அதிகாரி வாரன் ஆண்டர்சன் கைது செய்யப்பட்டபோது முதல் தகவல் அறிக்கைப்படி  உரிய தண்டனை-ஆயுள் சிறை!
25000 ரூபாய் ஜாமீனில்  சட்டம் எப்ப அழைத்தாலும் இந்தியாவுக்கு நான் வரத் தயார், நீதிக்குத் தலை வணங்குவேனாக்கும்” என்றெல்லாம் டயலாக் பேசியவர். போனவன் போனாண்டீதான்!  காலம் வந்து மரித்துப் போனார். இறைவனாவது நீதி காத்திருந்தால் இந்நேரம் கருடபுராண தண்டனை கிடைத்திருக்கும்!
இத்தனை அவலங்களும் நிகழ்ந்தது யார் பிழையால்? நிச்சயமாக விதியின் பிழையன்று!
(நன்றி:Donique Lapierre and Javier Moro-Five past Midnight in BHOPAL


No comments:

Post a Comment