Friday 8 December 2017

ஒரு நம்ப முடியாத கதை

ஒரு நம்ப முடியாத கதை
தென் ஆப்பிரிக்காவில் பார்ஸி ருஸ்தம்ஜி என்று ஒரு தொழிலதிபர். காந்திஜிக்கு நெருங்கிய நண்பர். காந்திஜிக்கு இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்பட்டபோது உதவியிருக்கிறார். அவரது போராட்டங்களில் முக்கிய பங்கு வகித்திருக்கிறார். அவர் சட்டத்தின் பிடியில் மாட்டிக்கொண்டு விட்டார். காந்திஜிதான் பிரபல வக்கீல் ஆயிற்றே , அவர் காப்பாற்றுவார் என்று ஒடோடி வந்தார். காந்திஜி முன்னுரிமை தந்தது நட்புக்கா? நீதிக்கா?  ஒரு சுவையான நிகழ்வாய்வு.
தமது விவகாரங்கள் அத்தனையையும் காந்திஜியிடம் பகிர்ந்துகொள்வார் ருஸ்தம்ஜி. ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் மறைத்து விட்டார். ரொம்ப நாளாகவே அவர் கடத்தல் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார். இது பற்றி காந்திஜியிடம் சொல்லவே இல்லை. ஏன் சொல்லவில்லை? ”வியாபார தந்திரங்களையெல்லாம் சொல்லி உங்களைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை” என்பது அவர் சொன்ன சாக்கு. இப்போது சட்டத்தின் பிடியில் மாட்டிக்கொண்டதும் காந்திஜியிடம் ஓடோடி வந்து விட்டார்: காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்! எப்படியாவது காப்பாற்றுங்கள்! என்று மன்றாடினார்.
காந்திஜியின் மறுமொழி: உங்களைக் காப்பாற்றுவதும் காப்பாற்றாததும் கடவுள் கையில் இருக்கிறது. நீங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு ஒரு வாக்குமூலம் கொடுத்துவிடுங்கள். நான் என்னால் இயன்றதைச் செய்கிறேன்!” இந்த அரிச்சந்திரர்  இப்படிச் சொல்வாரென்று ருஸ்தம்ஜி எதிர்பார்க்கவில்லை. பேயறைந்தது போலானார். “ ஒப்புதல் வாக்குமூலம் தருகிறேன். உங்களிடம் ஒப்புக்கொண்டு சொல்வது போதாதா?” பிடிவாதக்கார காந்திஜி சொன்னார்: நீங்கள் தவறு இழைத்தது எனக்கு எதிராக இல்லையே? அரசாங்கத்துக்கு எதிராகத்தானே?”
தீர விசாரித்ததில் போலீஸார் பிடித்தது இக்குணியூண்டுதான். ருஸ்தம்ஜி மலைமுழுங்கியாக இருந்திருக்கிறார்.    காந்திஜி அவருக்கு எடுத்துச் சொன்னார்: உங்கள் மீது நடவடிக்கை எடுப்பதும் மன்னித்து விடுவதும் சுங்க அதிகாரியின்  கையில் இருக்கிறது. அவருக்கு அறிவுறுத்த வேண்டியவர் அட்டார்னி ஜெனரல். நான் இருவரையும் சந்தித்துப் பேசுகிறேன். ஆனால் நீங்கள் அவர்கள் விதிக்கும் அபராதத் தொகையை சுணங்காமல் கட்டிவிட வேண்டும். அப்படியும் அவர்கள் உங்களை ஜெயிலுக்கு அனுப்பினால் போகத்தான் வேண்டும். வேறு வழியில்லை.” காந்திஜி தொடர்ந்தார்:” வெட்கப்பட வேண்டிய விஷயம் ஜெயிலுக்குப் போவது இல்லை. குற்றம் பண்ணியதுதான்;. ஜெயிலுக்குப் போவது அதற்கான பரிகாரம் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். ருஸ்தம்ஜி நிலகுலைந்து போனார்.  அவருக்கு சமுதாயத்தில் இருந்த மதிப்பு, மரியாதை எல்லாம் என்னாவது? என்றாலும் வேறு வழி இல்லாமல் காந்திஜி சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டார்.
காந்திஜி சுங்க அதிகாரியைச் சந்தித்து ஆதியோடந்தமாக அத்தனை விஷயத்தையும் சொன்னார். அவர் ஏமாற்றியுள்ள முழுத்தொகை பற்றிய விவரத்தையும் அவர் மனம் திருந்தி வருந்துவதையும் எடுத்துச் சொன்னார். காந்திஜியின் அணுகுமுறை அதிகாரிக்கு மிகவும் பிடித்துப்போயிற்று. அவரது அறிவுரையின்  பேரில் அட்டார்னி ஜெனரலுடனும் தொடர்புகொண்டு விலாவாரியாக அத்தனையையும் எடுத்துச் சொன்னார். அவருக்கும் காந்திஜி நேர்மையானவர் என்பதும் துளிக்கூட மறைக்காமல் அத்தனை விவரங்களையும் சொல்லிவிட்டார் என்பதும் புரிந்து போயிற்று. ருஸ்தம்ஜியின் வழக்கு சமரசத்தில் முடிந்தது. அவர் மறைத்த மொத்தத் தொகையைப்போல இரண்டு மடங்கு அபராதமாக விதிக்கப்பட்டது. சிறை செல்வதினின்றும் அவர் தப்பினார்.
இத்தனையையும் விவரமாக எழுதி சட்டம்போட்டு தமது அறையில் பளிச்சென்று தெரியும் வகையில் மாட்டி வைத்தார் ருஸ்தம்ஜி... “இது என் சக வணிகர்களுக்கும், என் வருங்கால சந்ததியினருக்கும் மறக்கமுடியாத பாடமாக இருக்கட்டும்.”

நமப் முடியவில்லை அல்லவா? அதனால்தான் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் காந்திஜியைப்பற்றி இப்படிச் சொன்னார்: ”இப்படி ஒரு மனிதர் ரத்தமும் சதையுமாக இந்த பூமியில் உலவினார் என்பதை வரவிருக்கும் சந்ததியினர் நம்ப மாட்டார்கள்.”

No comments:

Post a Comment