Sunday, 3 December 2017

காந்தி சொன்ன மார்க்கமன்றிக் கதி நமக்கு வேறில்லை!

காந்தி சொன்ன மார்க்கமன்றிக் கதி நமக்கு வேறில்லை!
சாணக்யம், சாதுர்யம் ராஜதந்திரம் என்னும் பெயரால் பொய்ம்மையும் சூழ்ச்சியும் அரங்கேறுகின்றன. பரஸ்பரம் வெறுப்பையும் அவநம்பிக்கையையும் தூண்டிவிடும் பிரசாரங்கள் நடைபெறுகின்றன. வன்முறையினால், போரினால், படுகொலைகளினால், வெறுப்பும் எண்ணிறந்த பொருட்சேதமும் உயிர்ச்சேதமும் ஏற்படுகின்றனவே தவிர முரண்பாடுகள் தீர்ந்தபாடில்லை. நம் கண்ணெதிரே காண்பது இது. இதை விளக்கச் சான்றுகளும் விவாதங்களும் தேவையில்லை. ”கண்ணுக்குப் பதில் கண் என்பதே உலக நியதியானால் அனைவருமே குருடர்களாகத்தான் இருப்பார்கள்” என்ற காந்திஜியின் வாக்கு இங்கு நினைவுகூரத்தக்கது.
இதற்கு மாற்றே உண்மையையும் அன்பையும் அடிப்படையாகக் கொண்ட சத்தியாக்கிரகப் போர்முறை.
சத்தியாக்கிரகி தான் உண்மை என்று கருதுவதை நிலைநாட்ட உறுதியோடு நிற்கிறான். தான் அநீதி என்று கருதுவதை ஏற்று அடிபணிய மறுக்கிறான். அதனால் விளையும் தண்டனையைத் தயக்கமின்றி ஏற்றுக் கொள்கிறான். அவனது அகிம்சை முடங்கிக் கிடக்கும் ஜடத்தன்மை அல்ல. வீறுகொண்டு எழும் செயல்திறம். பீரங்கிக்குப் பின்னால் இருந்து கொண்டு பிறரைத் துண்டுதுண்டாகச் சிதைப்பது; அல்லது, பீரங்கிக் குண்டுக்கு முன் மார்பைத் திறந்து காட்டி முன்செல்வது- இதில் எது வீரம்? எது கோழைத்தனம்? பிரகலாதனும் பக்த மீராவும், கொண்ட கருத்தில் உறுதியுடன், எந்த எதிர்ப்புக்கும் வன்முறைக்கும் அஞ்சாமல் செயல்பட்டார்களே, அது கோழைத்தனமா, அல்லது வீரமா? அவர்களன்றோ நமது வரலாற்றில் இடம் பெற்றுள்ள பூர்வகால சத்தியாக்கிரகிகள்?
இப்போது ஒரு கேள்வி எழுகிறது. எது நீதி, எது அநீதி என்பது அவ்வளவு திட்டவட்டமாகத் தீர்த்துக்கொள்ளக்கூடிய விஷயமல்லவே? எது உண்மை  என்பதும் அவரவர் பார்வையின் கோணத்துக்கேற்ப மாறுபடலாமே? உண்மைதான். இதனால்தான் சத்தியாக்கிரகி எதிராளி மீது தன் கருத்தைத் திணிப்பதில்லை..கருத்தோடு கருத்தை எதிர்வைத்து, தன் நியாயத்தை எடுத்துரைத்து, மறுதரப்பு நியாயத்தைப் புரிந்துகொள்ள முயல்கிறான். நடுநிலையாளர் துணையையும் நாடுகிறான். அனைத்து முயற்சிகளும் பயனளிக்காமல் போகும் இறுதிக் கட்டத்திலேயே சத்தியாக்கிரகப் போர்முறையை மேற்கொள்ள்கிறான். அதிலும் துன்பத்தைத் தானே வலிந்தேற்றுக் கொள்கிறானே தவிர எதிராளி மீது வன்முறையைப் பிரயோகிப்பதில்லை.
சத்தியாக்கிரகப் போர்முறையில் சூழ்ச்சிகளுக்கோ,ஒளிவுமறைவுக்கோ இடம் கிடையாது. சத்தியாக்கிரகியின் கோரிக்கையில்  அதிக பட்சம், குறைந்த பட்சம் என்று எதுவும் கிடையாது. மறைத்து வைத்த நிகழ்ச்சிநிரல் என்று எதுவும் கிடையாது. எது நியாயமோ அதுவே அவன் கோரிக்கையாகும், விட்டுக் கொடுப்பதற்கென்றே அதிக பட்சக் கோரிக்கையை முன் வைப்பதோ, வெற்றி கிட்டுவது எளிதென்று கருதினால், மேலும் மேலும் புதுக் கோரிக்கைகளை வைப்பதோ அவனிடம் இல்லை. அவன் விழையும் வெற்றி, கோரிக்கையின் நியாயத்தின் அடிப்படையில் அமைய வேண்டுமே தவிர, எதிராளியின் இக்கட்டினால் கிடைப்பதில்லை. அத்தகைய இக்கட்டுகள் எதிராளிக்கு ஏற்படும் தருணத்தில்,அல்லது தனது போராட்டத்தில் வன்முறை போன்ற  களங்கங்கள்  ஏற்படுமானால், வேற்றிக்கு எவ்வளவு நெருங்கி வந்திருந்தபோதிலும் அவன் போராட்டத்தை விலக்கிக் கொள்வதற்குக் கூடத் தயங்குவதில்லை. அவனது போராட்டம் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டதே தவிர, தனி மனித வெறுப்பு என்பது சத்தியாக்கிரகியிடம் ஒருபோதும் கிடையாது. தீங்கு செய்பவனையும் தீங்கினையும் பிரித்துப் பார்க்கும் பக்குவம் அவனிடத்தில் உண்டு. இன்னா செய்தார்க்கும் இனியவே செய்வது அவன் பண்பு.
சில நிகழ்வுகளைக் காண்போம். அவமானப்படுத்தும் அடக்குமுறைச் சட்டங்களை எதிர்த்து காந்திஜியின் தலைமையில் மாபெரும் போராட்டம் நடக்கிறது. போராட்டம் ஒருமித்த உணர்வோடு ந்டக்கிறது. வெற்றிக்கான அலம் கனிந்து வந்திருக்கிறது. இந்தக் கால கட்டத்தில் ஐக்கிய ஐரோப்பிய ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடங்குகிறார்கள். “இது அதிர்ஷ்ட வசம்! எதிராளியை நெருக்கிப் பிடிக்க இதுவே தருணம்!” என்று பலரும் கூறுகையில், காந்திஜி தன் போராட்டத்தை ஒத்தி வைத்து விடுகிறார். எதிராளியின் இக்கட்டான நிலைமையை சாதகமாகப் பயன் படுத்திக் கொள்ளக்கூடாது இது சத்தியாக்கிரகப் போர்முறைக்கு முரணானது, இதுவே ஜெனரல் ஸ்மட்ஸை வியக்க வைக்கிறது. “இந்த இந்தியர்களுடன் என்ன செய்வதென்றே புரியவில்லை. ஆபத்துக் காலத்தில் உதவுகிறார்கள். வன்முறையில் ஈடுபட்டார்களானால் எப்படி அடக்குவது என்று எங்களுக்குத் தெரியும். இவர்கள் பகைவர்களுக்குக் கூடத் துன்பம் விளைப்பதில்லை. துன்பத்தைத் தாங்களே வலிந்தேற்றுக் கொள்கிறார்கள்.!” என்று அவரது செயலாளர்களைப் போலவே அவரையும் ஆதங்கப் பட வைக்கிறது. காந்திஜி, தம்மைச் சிறையில் அடைத்துப் பல தொல்லைகளுக்கு ஆளாக்கிய ஸ்மட்ஸ் துரைக்கு செருப்புத் தைத்துத் தந்ததும்  அந்த ஜோடியை ஸ்மட்ஸ் பூஜைக்கு உரியதாகக் கருதியதும் அதிசயம், ஆனால் உண்மை!
உப்பு சத்தியாக்கிரகத்தின்போது, காந்திஜியின் ஆணையைச் சிரமேற்கொண்டு கை முட்டியே பிளந்தாலும் பிடியிலுள்ள உப்பை விடேன் என்று தொண்டர்கள் நின்றார்களே, தர்ஸானா உப்பள முற்றுகையில், மண்டை பிளக்க ,ரத்தம் ஆறாகப் பெருக, கையால்கூடத் தடுக்காமல்,சாரிசாரியாகச் சென்று தொண்டர் படை வன்முறைத் தாக்குதலை வலிந்தேற்றுக் கொண்டதே இவைதாம் அகிம்சாவாதியின் வீரம்.
அகிம்சையினால் எதையாவது சாதிக்கமுடியுமா என்ற சந்தேகக் குரல்கள் நம் செவிகளில் விழாமல் இல்லை. அகிம்சையை நம்மால் கடைப்பிடிக்க முடியுமா என்ற கேள்விகள் எழுவதும் நாம் அறிவோம்.
எனினும் நம் முன் உள்ள பிரச்சினையைத் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால்,மார்ட்டின் லூதர் கிங் (இளையர்) சொன்னதையே மேற்கோள் காட்ட வேண்டும், நம் முன் உள்ள கேள்வி வன்முறையா, அகிம்சையா என்பதல்ல. அகிம்சையா, அழிவா (Non-vilolence or Non –existence) என்பதே.
ஆற அமர்ந்து சிந்தித்துப் பார்த்தோமானால் நாம் வரக்கூடிய முடிவு-

காந்தி சொன்ன மார்க்கமன்றிக் கதி நமக்கு வேறில்லை என்பதே ஆகும்!

No comments:

Post a Comment