மன்னார்குடியில் சுந்தரராமையர்.
வ.வே.சு.ஐயர் இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்குத்
திரும்பி விட்டார். தலைமறைவு வாழ்க்கைக்காக புதுச்சேரியை நோக்கி ரயிலில் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறார்.
அவருடன் அதே பெட்டியில் சில துப்பறியும் அதிகாரிகள் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள்.
சீக்கியத் தலைப்பாகையுடனும் தாடியுடனும் கறுப்புக்கண்ணாடியுடனும் இருக்கும் வ.வே.சு.
மீது அவர்களுக்கு ஒரு கண். பெட்டியில் இருக்கும்
V.V.S என்ற முன்னெழுத்துகளைப் பார்த்து விட்டார்கள். அவரும் இதைக் கவனித்து
விட்டார். யதேச்சையாய்க் கேட்பது போல் “உங்கள் பெயர் என்ன சார்?” என்று கேட்டார்கள்,
சமயோசிதமாக Vir Vikram Singh என்று சொல்லித் தப்பித்துக்கொண்டு புதுச்சேரி வந்தடைந்து
விட்டார் ஐயர்.
இது
குறித்து கொடியாலம் ரங்கசாமி ஐயங்காருக்கு அவர் மீது அபார மரியாதை. ஐயங்கார் புதுச்செரியில்
வசித்து வந்தார். . சிறந்த தேச பக்தர்.. பாரதியாரிடம்
அவருக்கு நிறைந்த அன்பு உண்டு. ஆனால் கவிதை கிவிதை சமாசாரம் எல்லாம் அவருக்கு விளங்காத
விஷயங்கள். தவிரவும் அவருக்கு பாரதியார், வ,வே.சு போல சாமர்த்தியமும் துணிச்சலும் உடையவரில்லை
என்று ஓர் அபிப்பிராயம் இருந்தது.
அவருக்கு
மன்னார்குடியில் ஒரு பெரிய வீடு இருந்தது. அங்கு அடிக்கடி சென்று ஓய்வெடுத்துக் கொண்டு
விடுவார். அப்படித்தான் ஒருநாள். மன்னார்குடியில் வெற்றிலை பாக்கு குதப்பியபடி திண்ணையில்
உட்கார்ந்து நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார். பகல் 11 மணி. அப்போது ஜல் ஜல் என்று
ஒரு குதிரை வண்டி அவர் வீட்டு வாசலில் வந்து நிற்கிறது. அப்போது, கோட்டும் பஞ்சகச்சமும்,
தலைப்பாகையும் மழுங்கச் சிரைத்த பளபள முகமுமாக
ஒருவர் வந்து இறங்குகிறார். ”யாரது?” என்று பார்க்க, திண்ணையிலிருந்து இறங்கி,
வண்டியை நெருங்கி விட்டார், உற்றுப் பார்த்தபோதுதான் தெரிந்தது-அடட! நம்ம பாரதி!. தனியாக அழைத்துச் சென்று விளக்கினார்
பாரதி. ”புதுச்சேரியில் கூட்டுக்குள் அடைபட்டதுபோல் இருந்து சலித்து விட்டது. வெளிக்காற்றை
சுவாசிக்க விரும்பினேன்! உங்களோடு கொஞ்ச நாள் இருக்கப்போகிறேன்”. கொடியாலம் ரங்கசாமி
ஐயங்காருக்கு ரொம்ப சந்தோஷம். தம் நண்பர்களுக்கெல்லாம், ”இவர் என் நெடுநாள் சிநேகிதர்.
சுந்தரராமையர் என்று பேர். ஒரு வாரம் என்னோடு தங்கியிருப்பதற்காக வந்திருக்கிறார்.”
என்று அறிமுகம் செய்து வைத்தார். ஒரு வாரம் வேகமாகக் கழிந்து விட்டது. பாட்டும் கூத்தும்
அரட்டையும்தான். கடைசிவரை யாராலும் அவர் பாரதியார் என்று கண்டு பிடிக்க முடியவே இல்லை.
பிரியாவிடை பெற்று புதுச்சேரி சென்றார் பாரதி.
கொடியாலம்
ஐயங்கார் தம் கருத்தை மாற்றிக்கொண்டார். வ.வே.சு ஐயரை விடக்கூட சாமர்த்தியமும் துணிச்சலும்
உடையவர்தான் பாரதியார் என்று ஏற்றுக்கொண்டார்.
(ஆதாரம்:
வ.ரா.எழுதிய “மகாகவி பாரதியார்”)
டிசம்பர்
11 பாரதி பிறந்ததினம்
No comments:
Post a Comment