Saturday 2 December 2017

சத்தியாக்கிரகம்-பெயர்க்காரணம்

சத்தியாக்கிரகம்-பெயர்க்காரணம்
சத்தியாக்கிரகம் பிறந்த கதையைப் பார்த்தோம். அதன் பெயர்க்காரணத்தை இப்போது பார்ப்போம்.
புதுமையான இந்த இயக்கத்துக்கு இதுவரை வேறு எந்தப் பெயரும் இல்லாததால் இதனை ‘சாத்வீக மறுப்பு (Passive Resistence) என்றே குறிப்பிட்டனர். இந்த இயக்கத்தின்பால் பரிவு கொண்டிருந்த சில ஐரோப்பியரிடம் கூட இதைப்பற்றி ஒரு தவறான கருத்து இருந்தது. “பலவீனர்கள்; நிராயுதபாணிகள்; எண்ணிக்கையில் குறைந்தவர்கள். எனவேதான், வேறு வழி இல்லாமல் சாத்வீக எதிர்ப்பை மேற்கொண்டுள்ளார்கள்” என்ற கருத்து அவர்களிடம் நிலவியது. இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. இங்கிலாந்தில்,  வன்முறையில் நம்பிக்கை குன்றாமல்,ஆனால் வேறு வழி இல்லாமல் சாத்வீக எதிர்ப்பை மேற்கொண்ட சில இயக்கங்கள் இருந்தன.
இந்த சூழ்நிலையில் அன்பையும் அகிம்சையையுமே அடிப்படைக் கொள்கைகளாகக் கொண்டு காந்திஜியின் தலைமையில் இயங்கிய இயக்கத்துக்கு வேறு பெயர் தேவைப்பட்டது. இந்தப் பெயர், இயக்கத்தின் அடிப்படை நோக்கத்தை விளக்குவதாக இருக்க வேண்டும். ஆங்கிலமறியாத,பல இந்திய மொழிகள் பேசுகிற மக்கள் எளிதில் புழங்கத் தக்கதாக இருக்க வேண்டும். இத்தகைய பெயர் ஒன்றுக்கான கருத்துகளைக் கேட்டு ,”இந்தியன் ஒப்பினியன்” பத்திரிகையில் ஒரு போட்டி அறிவிக்கப் பட்டது. அதன் அடிப்படையில் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர்,”சதாக்கிரகம்” என்பது. மகன்லால் காந்தி பரிந்துரைத்தது. இதுவே சற்று மாற்றி “சத்தியாக்கிரகம்” என்று கொள்ளப்பட்டது. இதன் பொருள் சத்தியத்தில் உறுதி என்பதாகும். இது சத்தியத்தையும் அகிம்சையையும் அடிப்படையாகக் கொண்டு, ஆன்மபலத்தால் நடத்தும் போர்முறையைக் குறிப்பதாயிற்று.


No comments:

Post a Comment