குறையொன்றுமில்லை!
அவர்
கோவிந்தன் மீது மாறாக் காதல் கொண்டவர். வாழ்நாளில்
ஒருமுறையாவது திருமாலைத் தரிசித்துவிட வேண்டுமென்பது அவரது வாழ்வின் குறிக்கோள். அதற்குத்
தடையாக நின்றது ஆங்கில அரசின் சட்டம். அவர் ஆலயத்துக்குள் நுழைந்தால் புனிதத்தன்மை கெட்டு விட்டதென்று சொல்லி கைது செய்து சிறையில்
அடைத்து விடுவார்கள். என்ன ஆனாலும் சரி, ஒருமுறை இறைவனைத் தரிசித்து விடுவது என்று
தீர்மானித்து விட்டார். புலால் உணவை விலக்கினார். தூய நீரில் முழுக்காடினார். திருமண்
தரித்துக்கொண்டார். நன்கு துவைத்த ஆடையை உடுத்திக்கொண்டார். கோவிலுக்குள் நுழைந்து
இறைவனைக் கண்குளிரத் தரிசித்துக்கொண்டிருந்தார். அவரது யோக நிலையைக் கலைப்பதுபோல் ஓர்
இரும்புக்கரம் அவர் கழுத்தைப் பற்றியது. ”நடடா, ஸ்டேஷனுக்கு!” என்று அங்கிருந்த பக்தி
அலையை மிஞ்சி நாராசமாக ஒலித்தது.
அவரது
நண்பர்கள் .”சட்டம் அப்படி இருக்கிறது. நல்ல வக்கீலை வைத்து வாதாடினால் நீ விடுவிக்கப்படலாம்”
என்றார்கள். அங்கேதான் சிக்கல். அந்த ஊரில் இருந்தவர்கள் பெரும்பாலானவர்கள் சாதிப்பற்றாளர்கள்.
”தீண்டாதவனுக்கு வாதாடினால் தெய்வ குத்தம் ஆகாதோ?”” எஞ்சியிருந்தவர்கள் காங்கிரஸ்காரர்கள்.
காந்திஜியின் ஆணைக்குக் கட்டுப்பட்டு நீதிமன்றப் புறக்கணிப்பில் இருந்தார்கள்.
இந்த
நிலையில் ஒரு வக்கீல் அவருக்காக இலவசமாக வாதாட முன்வந்தார். இதில் வேடிக்கை என்ன என்றால்,
அவர் பழுத்த ஆசாரசீலர். தீவிர காங்கிரஸ்காரரும் கூட..
நீதிமன்றம்.
அன்பர் நடுங்கி விதிர்விதிர்த்துக் கொண்டிருந்தார். வக்கீல் கேள்விகளைத் தொடுத்தார்.
“நீ
கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டது உண்மையா?”
“ஆமாம்.”
“என்ன
உணவு உட்கொண்டாய்?”
“கொஞ்சம்
கஞ்சி மட்டுமே குடித்தேன், அரிசிக்கஞ்சி.”
கோவிலுக்குப்
போகுமுன் என்னவெல்லாம் செய்தாய்?”
”நீரில்
முழுகிக் குளித்தேன். துவைத்து வைத்திருந்த உடைகளைப் போட்டுக் கொண்டேன். நெற்றியில்
திருமண் தரித்துக்கொண்டேன்.”
சரி.
எவ்வாறு சாமி கும்பிட்டாய்? உனக்கு திவ்யப் பிரபந்தம் தெரியுமா? வேறு ஏதாவது பாசுரங்கள்
தெரியுமா?’
“அதெல்லாம்
தெரியாதுங்க!.. கோவிந்தா1கோவிந்தா!” என்று சொல்லியபடியே சாமியைப் பார்த்துக்கொண்டிருந்தேன்”
வக்கீல்
நீதிபதியின் பக்கம் திரும்பினார். “கனம் கோர்ட்டார் அவர்களே! கைது செய்யப்பட்டவரின்
வாக்குமூலத்தின்படி எந்த வகையிலும் அவர் கோவிலின் புனிதத்துவத்தைக் கெடுக்கவில்லை”
என்று சொல்லி முடித்தார். நீதிபதி வக்கீலின் வாதத்தை ஏற்று கட்சிக்காரரை விடுதலை செய்தார்.
அப்படி
வாதாடிய வக்கீல் வேறு யாரும் இல்லை. ராஜாஜி அவர்கள். இன்று, டிசம்பர் 10 அவரது பிறந்தநாளாகக்
கொண்டாடப்படுகிறது.
கதை
இதோடு முடியவில்லை. உள்ளூர் காங்கிரஸ்காரர்களுக்குப் படுகோபம். கட்சிக்கட்டுப்பாட்டை
மீறிவிட்டாரே இந்த வக்கீல்? விஷயம் காந்திஜியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
காந்திஜி ராஜாஜியின் செயலைப் பராட்டினார்.
எந்த விஷயத்தையும் வார்த்தை அளவில் எடுத்துக்கொள்ளாமல், அதனது உட்கருத்தைப் புரிந்து
கொண்டு செயல்படவேண்டும். ராஜாஜி அந்த அன்பருக்காக வாதாடாமல் இருந்திருந்தால் அவர் சிறைக்குப்
போயிருப்பார். அப்போது நாம் ஆங்கிலேயரின் அக்கிரம சட்டத்துக்கு ஒத்துழைப்புக் கொடுத்ததாக
ஆகும். ஒத்துழையாமை இயக்கத்துடன் அது எப்படிப் பொருந்தும்?
ராஜாஜி
“குறையொன்றுமில்லை’ என்று ஒரு பாட்டு எழுதினார். எம்.எஸ். அம்மாவால் பிரபலமானது அது.
“திரைக்குப்பின்
நிற்கின்றாய் கண்ணா. மறையோதும் ஞானியர்கள் மட்டுமே காண்பார்கள் என்றாலும்.. குறையொன்றும்
இல்லை கண்ணா” என்று வரும். ராஜாஜி இந்த நிகழ்வை மனத்தில் வைத்துக்கொண்டுதான் அந்தப்
பாட்டை எழுதினார் என்கிறார்கள். நமக்குத் தெரியவில்லை.. நாமென்ன, ராஜாஜியின் ஆன்மாவிடமா
சென்று விளக்கம் கேட்க முடியும்?
(இந்த
நிகழ்ச்சியை விரிவாக எழுத எனக்கு விளக்கம் தந்து உதவியவர் நண்பர்-ராஜாஜியின் அன்புக்குப்
பாத்திரமான கே.வேதமூர்த்தி.) :‘
No comments:
Post a Comment