Sunday, 30 July 2017

பணியின் மூலம் பேரானந்தம் (11)

பணியின் மூலம் பேரானந்தம் (11)
மனம் குவிந்து செயல் புரிக!
கடமையில் திறமை என்பதைப் பற்றிச் சிந்தித்து வருகிறோம்.. சுவாமிஜி செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம் என்று பேசுபவர் அல்லர், அன்றாட வாழ்வில் செய்ய வேண்டியது எது செய்யக்கூடாதது எது, செயலாற்றுவது எப்படி என்பது பற்றிய செய்திகள் அவர்கள் வாக்கில்: நிறையவே உள்ளன.
குறிக்கோளைப் பற்றியும் அடைய வேண்டிய வழிமுறைகளைப் பற்றியும் சென்ற இயலில் பார்த்தோம்.
சிறப்பாகப் பணி ஆற்றுவதற்கு முக்கியத் தேவை மனம் குவிந்து செயலில் ஈடுபடுவது.( Concentration) இப்படி மனம் ஒன்றிச் செயல்படும்போது தன்னைப்பற்றிய உணர்வே இருக்காது. பலருக்கு ,தன்னைப் பற்றிய உணர்வே இல்லாதபோது  எப்படி வேலை செய்ய முடியும் என்ற சந்தேகம் எழலாம் .நம்மை முற்றிலும் மறந்து வேலை செய்யும்போது  அந்தப்பணி சிறப்பாக அமைகிறது. ஓவியக்கலைஞனோ சமையற்கலைஞனோ கவிஞனோ, யாராக இருக்கட்டும்,மெய்ம்மறந்து மனம் குவிந்து தங்கள் பணியில் ஈடுபடும்போது அவர்கள் கைவண்ணம்,கற்பனை வளம்,பல மடங்கு மெருகுடன் மிளிர்கிறது.
கலை ,கற்பனை எல்லாம் இருக்கட்டும்,நம்மைப்போல “சாதாரணர்கள்” கூட “சாதாரணமான” காரியங்களில் ஈடுபடும்போது, இந்த நிலையை அனுபவித்திருப்போம். சிக்கலான அக்கவுண்ட்ஸ் பிரச்சினை. நேரம் போவது தெரிய மாட்டேன் என்கிறது. குளிக்க, சாப்பிட, வீட்டில் கத்திக் கத்தி அழைத்துக் கொண்டிருந்தாலும் காதில் கூட விழ மாட்டேன் என்கிறது. கணக்கு சரியாக வந்தவுடன் வருவது நிம்மதிப் பெருமூச்சு மட்டுமல்ல. அந்த நிமிஷத்துப் பேரானந்தம்!

யோகம் என்பதெல்லாம் மிகப் பெரிய சமாச்சாரம் இல்லை. மனம் குவிந்து பணி புரிவதே யோகம்தான்!

Friday, 28 July 2017

பணியின் மூலம் பேரானந்தம்- (10).


திறமைதான் நமக்குச் செல்வம்!

. சோர்வின்றிச் செயல் புரிய வேண்டும்.இயல்பாய் அமைந்த கடமைகளைச் செய்ய வேண்டும் .தன்னலம் இன்றிச் செயல் புரிய வேண்டும். எல்லாம் சரி. நாம் சிந்திக்க வேண்டிய முக்கிய விஷயம் ஒன்று உண்டு..திறம்படச் செயல் புரிவது..எவ்வளவுதான் நல்ல நோக்கங்கள் இருந்தாலும்,செயலாற்றும் திறமை  இல்லையென்றால் நமது அத்தனை பிரயத்தனங்களும் வீணாவது மட்டுமல்லாமல் ,வேண்டாத விளைவுகளும்  ஏற்படக்கூடும். செயலில் திறமையையே ஓர் அறிவியலாக கீதை சொல்கிறது. அதனால்தான் தெருப் பெருக்குவதைக்கூட ஒரு சாத்திரமாக பாரதியார் கூறினார்.
திறமையாகச் செயல் படுவது எப்படி என்பதை விவேகானந்தப் பலகணியின் மூலம் காண முயல்வோம்.
இலக்கு நிர்ணயம் பற்றி ஏற்கெனவே பார்த்தோம். நவீன நிர்வாக இயல் கண்ணோட்டத்தில் சுவாமிஜியின் சிந்தனையைப் பொருத்திப் பார்த்தோம். இலக்கை நிர்ணயித்த பிறகு அதை அடையும் வழிகளையும் பற்றி சுவாமிஜி சொல்கிறார்.
இலக்கு எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதனை அடையும் வழிகள் சின்ன சின்ன அடிகளாகவே அமைகின்றன.. அந்த சின்ன சின்ன அடிகளை கவனத்துடனும் கருத்துடனும் எடுத்து வைக்க வேண்டும். ஒரு குதிரைக்கு லாடம் அடிக்காததால் ஒரு ராஜ்யமே பறிபோனதாகச் சொல்லும் வழக்கு உண்டு.
நம்மில் பெரும்பாலோரிடம் இருக்கும் கோளாறு, மகத்தான இலட்சியக் கனவின் பரவசத்தில் ஆழ்ந்து போய் அதை அடைவதற்கான சின்ன சின்ன வழிமுறைகளில் கவனம் செலுத்தத் தவறி விடுகிறோம். 99 விழுக்காடு  இலட்சியத் தோல்விகளுக்கான காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் வழிகளைக் கோடை விட்டிருப்பது தெரிய வரும். இலக்கை நிர்ணயித்தவுடன் அதை அடைவதற்கான படிக்கட்டுகளையும் நடவடிக்கைகளையும் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். அவ்வப்போது அவை சரியாக நடைபெறுகின்றனவா என்று சரிபார்த்துக்கொள்ள வேண்டும். சந்தர்ப்பத்துக்கு ஏற்றபடி, அனுபவத்தின் அடிப்படையில் மாற்றங்களைச் செய்து கொள்ளத் தயங்கக் கூடாது. செயல்தான் விளைவை உருவாக்குகிறது  என்பதை மறந்து விடக்கூடாது. விளைவு எங்கிருந்தோ தானாக வந்து குதிப்பதில்லை. செய்யும் காரியம் ஒழுங்காகவும் ஆற்றலுடனும் அமைந்தாலொழிய ஏற்ற முடிவை அடைய முடியாது .சின்ன சின்ன அடிகளை எடுத்து வைக்கும் நேரத்தில் அவற்றில் கவனமாக இருக்க வேண்டும். இறுதி இலக்கைப் பற்றி-வெற்றி தோல்வியைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை. பந்தை எதிர்கொள்ளும்போது கண் ஸ்கோர்போர்டுக்குப் போகக்கூடாது.
பகவத்கீதை இதைதான் சொல்கிறது. செய்யும் காரியத்தில் மனம் முழுமையையும் ஈடுபடுத்திச் செய்ய வேண்டும் முழுத் திறமையையும் பயன்படுத்திச் செய்ய வேண்டும். வேறு எந்த விஷயமும் நாம் கையில் எடுத்துக்கொண்டுள்ள வேலையில் இருந்து திசை திருப்பக்கூடாது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இருக்கிறது. . ஒட்டுமொத்தக் குறிக்கோளையும் அதற்கு இந்த அடிகளின் முக்கியத்தின் அளவையும்  சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். அடிக்கடி சரிபார்த்துக் கொள்ள வேண்டும். குறிக்கோளை மறந்து விடக்கூடாது.
 அதே நேரம்  Process என்பது நமக்கு ஒரு obsession ஆகிவிடக்கூடாது.
 “உலகை அளக்கப் புறப்பட்ட பூதம்
 அடிக்குச்சியைச் செப்பனிட்டுச் செப்பனிட்டு
 ஓய்ந்தது”
என்பார் கவிஞர் விக்கிரமாதித்யன்.
இதைவிட விசித்திரமாக ஒன்றைச் சொல்வார் சுவாமிஜி. அவர் சொல்கிறார், நாம் ஒரு காரியத்தை எடுத்துச் செய்கிறோம். முழுத்திறமையையும் பயன்படுத்தியே செய்கிறோம். என்றாலும் ஒரு சிக்கல் ஏற்பட்டு அந்தக் காரியம் துன்பத்தையே விளைவிக்கிறது. ஆனால், நம்மால் அதை விட முடிவதில்லை. காரணம் அந்த வேலையில் நாம் சிக்கிக்கொண்டு விட்டோம்.தேன்குடிக்க மலருக்குச் செல்லும் தேனீ பிசுக்கு ஒட்டிக்கொண்டு வெளியேற முடியாமல் இருப்பது போன்ற ஒரு நிலை.  சுவாமிஜி சொல்ல வருவது, ஈடுபாட்டுடன் வேலை செய்ய வேண்டும்தான். ஆனால் அந்த வேலையே நம்மை அடிமைப்படுத்தி விடக்கூடாது.

இதைச் சரியாகப் புரிந்து கொள்வோம்.வேலையில் சின்னப் பிரச்சினை ஏற்படும்போது சுவாமிஜி சொன்னதை  வைத்துக்கொண்டு ”ஒரு தொப்பி கீழே விழுந்த சாக்கில்” வேலையை விட்டு ஓட்டம் பிடிக்கக்கூடாது! “பொய்மையும் வாய்மை இடத்த” என்பது தவறாகப் பயன்படுத்தப் படுவது போல ஆகிவிடும் அது..

Wednesday, 26 July 2017

மென்மலரே! தூது சொல்! (உமா-அறுபதுகள் ஆரம்பத்தில்)

மென்மலரே! தூது சொல்!
(உமா-அறுபதுகள் ஆரம்பத்தில்)
மாலை இருளினில் மாய்கிறது-வட்ட
     வெண்ணில வின்னமும் தோன்றவிலை!
பாலைவன மனம் காய்கிறது!-அவள்
     பார்வையின் வெம்மையும் மாறவிலை!

மொட்டவிழ்ந்தே இதழ் வாசம் பரப்பியோர்
     மோகமெழுப்பிடும் மென்மலர் நீ!
கட்டவிழ்ந்தே மனம் காதல்வெறி கொளும்
     காவனச் சூழலில் தோன்றியவள்!

ஆவியொடே உடல் ஊடலுற்றே அந்த
     ஆவியை வாட்டிச் சுவைக்கிறதாம்!
பாவம்,அவன் உன்னில் பாதி என்றே அந்தப்
     பாவையிடம் சென்று தூது சொலு!

சுற்றிச் சுழல்கின்ற வட்டவிழிகளின்
     தண்மையை மாற்றிடும் சீற்றம் விட்டுச்
சற்றெனைக் கண்டிடும் ஓரத்து நோக்கினில்
     தெய்விகக் காதல் கனியவிடு!

அன்பெனும் ஓர் அமுதூற்றெடுத்தே வரும்
     ஆசை இதயத்தில் வற்றியதால்
தென்றலொடே சென்று தேனைப் பொழிந்தந்தத்

     தோகையைக் காதல் பேச விடு!

Monday, 24 July 2017

பணியின் மூலம் பேரானந்தம் (9)


கோடீஸ்வரருக்கு ஒரு குட்டு.

ஜான் ராக்ஃபெல்லர் என்பவர் உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவர் என்பதை நாம் அறிவோம். சுவாமிஜி சிக்காகோவில் இருந்தபோது பரஸ்பர நண்பர் ஒருவர் சுவாமிஜியைச் சந்திக்க வருமாறு ராக்ஃபெல்லரை வற்புறுத்திக் கொண்டிருந்தார். ராக்ஃபெல்லருக்கு அந்த ஹிந்து சன்னியாசியைச் சந்திக்க வேண்டுமென்று அப்படி ஒன்றும் பெரிய நாட்டமில்லை. நண்பர் விடுத்த அழைப்புகளை எல்லாம் புறக்கணித்துக் கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் அவர் செல்வச் சிகரத்தில் இல்லை என்றாலும் செல்வாக்கு மிக்கவர். தீர்மானமான கருத்துகள் உள்ளவர். அவரை இணங்க வைப்பது என்பது சுலபமில்லை.
ஒரு நாள், ஏதோ ஒரு வேகத்தில் அவர் சுவாமிஜி இருந்த இல்லத்துக்குள் கிடுகிடுவென நுழைந்தார்.. அங்கிருந்த பணியாளரை உரசித் தள்ளி விட்டு உள் அறைக்குள் நேரே பிரவேசித்து விட்டார். சுவாமிஜி ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். ராக்ஃபெல்லரை நிமிர்ந்துகூடப் பார்க்கவில்லை.
சிறிது நேரத்துக்குப்பின் அவருடன் உரையாடத் தொடங்கிய சுவாமிஜி அவருக்குச் சில அறிவுரைகள் சொன்னார் .சேமித்து வைத்துள்ள அத்தனை சொத்தும் ராக்ஃபெல்லருக்கே சொந்தமானதில்லை. அவர் ஒரு கருவி மாத்திரமே. இறைவன் அவருக்கு அத்தனை செல்வமும் கொடுத்திருப்பது பிறருக்கு உதவுவதற்காகவே. அவருக்கு அது ஒரு வாய்ப்பு.
“எனக்கு ஒருவர் புத்தி சொல்வதா? நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதற்கு இவர் யார்?”” என்றெல்லாம் குமுறியவாறே போனார் ராக்ஃபெல்லர். ”போய் வருகிறேன்” என்று சொல்லிக் கொள்ளக்கூட இல்லை.
என்றாலும் ஒரு வாரம் கழித்து மீண்டும் அவர்  சுவாமிஜியின் அறைக்குள் திடும்பிரவேசம் செய்தர். சுவாமிஜி அப்பொழுதும் தலை நிமிராமல் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். ராக்ஃபெல்லர் அவரது மேசை மீது ஓர் ஆவணத்தை விசிறி எறிந்தார். மிகப் பெரிய தொகை ஒன்றை ஓர் அற நிறுவனத்துக்கு நன்கொடையாகக் கொடுப்பதைப் பற்றிய விரிவான திட்டம் அது. “பார்த்துக் கொள்ளுங்கள்! இப்போது திருப்திதானே? நீங்கள் நன்றி சொல்ல வேண்டும்.” என்று முழங்கினார் அவர்.
சுவாமிஜி விழிகளை உயர்த்தக்கூட இல்லை. அந்த ஆவணத்தை எடுத்துப் படித்தார். நிதானமாகச் சொன்னார்,” நீங்கள் அல்லவா எனக்கு நன்றி சொல்ல வேண்டும்?”

பொது நலத்துக்காக அவர் வழங்கிய முதல் நன்கொடை அது. அதற்குப் பிறகு அவர் மாபெரும் கொடை வள்ளலாகப் பெயர் பெற்றது  நமக்கெல்லாம் தெரிந்ததே.

Saturday, 22 July 2017

பணியின் மூலம் பேரானந்தம் (8)


நன்றி சொல்ல வேண்டும் இறைவனுக்கு!

கைம்மாறு வேண்டா கடப்பாடு; மாரிமாட்டு
என்னாற்றும் கொல்லோ உலகு.
                     திருக்குறள்.
கடமை,கைம்மாறு (பிரதி உதவி) விரும்பாது. மழைக்கு உலகம் என்ன பிரதி உதவி செய்ய முடியும்?
பிறர்க்கு உதவி செய்தல் தம் கடமை என்று கருதுவோர் எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்ப்பதில்லை .உலகைக் காக்கும் மழைக்கு உலகத்தார் என்ன கைம்மாறு செய்ய முடியும்?
எடுத்துக்காட்டு:
ஆரியன் அவனை நோக்கி ஆருயிர் உதவி யாதும்
காரியம் இல்லான் போனான் கருணையோர் கடன்மை யீதால்
பேரிய லாளர் செய்கை ஊதியம் பிடித்தும் என்னார்
மாரியை நோக்கிக் கைம்மாறு இயற்றுமோ வையம் என்றான்
(கம்ப ராமாயணம்-8403)
                     ஸ்ரீசந்திரன் உரை.

,நாம் ஏன் பிறருக்கு நல்லது செய்ய வேண்டும்?-இது ஒரு கோடிரூபாய்க் கேள்வி..
அறம் செய்ய விரும்புவது நல்லது. செய்ய விழைவது ,நமக்குள்ள சிறந்த ஊக்க சக்தி. எப்போது? பிறருக்கு உதவுவது நமக்குக் கிடைத்த பிரத்யேக சிறப்புரிமை என்பதை உணரும்போது. தந்தக் கோபுரத்தில் ஏறி நின்று கொண்டு, ”ஏய்! பரதேசி! இந்தா, எடுத்துக்கொள் பிச்சை!” என்று காசை வீசி எறிவது அல்ல அறம். வறுமை இல்லையேல் வண்மை இல்லாததாகி விடும் .இரப்பார் இல்லாவிட்டால் ஈவதற்கு எங்கே வாய்ப்பு? நம்மிடம் உதவி பெறுவதற்கு அந்த வறியவன் இருக்கிறானே என்று நன்றி செலுத்துவோம். நம்மை உயர்த்திக் கொள்வதற்கு அவன் ஒரு வாய்ப்பு தருகிறான் என்பதே உண்மை. ஆசீர்வதிக்கப்பட்டவன் ஏற்பவன் அல்லன். இடுபவனே! நம்மிடம் உள்ள தயாள குணத்தை-கருணையை- வெளிப்படுத்துவதற்கு, அவன் மூலம் தூய்மையும் செம்மையும் அடைவதற்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறதே என்று நாம் மகிழ்ச்சி அடைய வேண்டும்.. நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல காரியமும் நம்மைத் தூய்மைப் படுத்துகிறது; செம்மைப் படுத்துகிறது.
நாம் இடைவிடாது நல்ல காரியங்கள் செய்து கொண்டே இருக்க வேண்டும் .ஏனெனில், நன்மை செய்வது ஓர் ஆன்மிகப் பயிற்சி.
நாம் உதவி புரிந்த எந்தப் பிச்சைக்காரனும் ,நமக்கு ஒரு பைசா கூடக் கடன்பட்டவனே இல்லை. நாம்தான் அவனுக்குக் கடன் பட்டிருக்கிறோம். நமது தயாளகுணத்தைப் பயன்படுத்த அவன் வாய்ப்பளித்தான் என்ற வகையில். நாம் உலகுக்கு நன்மை செய்திருக்கிறோம் என்றோ,அல்லது நம்மால் செய்ய முடியும் என்றோ, நாம் இன்னின்னாருக்கு உதவி செய்திருக்கிறோம் என்றோ எண்ணிப் பார்த்துக் கொள்வது தவறான சிந்தனையாகும். அப்படி நினைப்பது மூடத்தனம். மூடத்தனமான சிந்தனைகள் நமக்குத் துன்பமே விளைவிக்கும். ஒருவருக்கு உதவி செய்து விட்டு அவர் நன்றி சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அவர் நன்றி சொல்லவில்லை என்றால் மன வருத்தம் ஏற்படுகிறது.  நாம் செய்யும் காரியத்துக்குப் பிரதியாக ஏன் ஒன்றை எதிர்பார்க்க வேண்டும்? நாம் உதவி செய்யும் மனிதனுக்கு நாம் நன்றி செலுத்துவோம். அவனைக் கடவுளாகப் பாவிப்போம். சக மனிதனுக்கு உதவுவதன் மூலம் கடவுளை வழிபடும் வாய்ப்புக் கிடைத்திருப்பது எவ்வளவு பெரிய சிறப்புரிமை! உண்மையிலேயே பற்றற்று இருந்தோமானால், வீண் எதிர்பார்ப்புகள் வேதனைகள் அத்தனையிலிருந்தும் நாம் தப்பிவிடுவோம். உற்சாகமாக நல்ல காரியங்கள் செய்து கொண்டே போகலாம். எதிர்பார்ப்பின்றிப் பணி புரிபவனைத் துன்பமோ வேதனையோ அணுகாது.

சுவாமிஜியின் இந்த சிந்தனையை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்ச்சி அவரது வரலாற்றில் வருகிறது. அதை அடுத்த இயலில் பார்ப்போம். 

Wednesday, 19 July 2017

பணியின்மூலம் பேரானந்தம் (7)


அதுவுமற்றவர் வாய்ச்சொல் அருளீர்!

……அன்ன யாவினும் புண்ணியம் கோடி
     ஆங்கோர் ஏழைக்கெழுத்தறிவித்தல்.
                     பாரதியார்.
    
பிறர் துயர் தீர்த்தலைக் கடமையாகச் சொல்வார் பாரதியார். பணத்தினால் மட்டும்தான் இந்தக் கடமையை ஆற்ற முடியும் என்பதில்லை. வாய்ச்சொல்லாலும் உபகாரம் செய்யலாம். வார்த்தையின் மகிமை பற்றி சுவாமி விவேகானந்தர் நிறையவே பேசுவார். சிந்தனைக்கும் சொல்லுக்கும் உள்ள தொடர்பைப் புரிந்துகொண்டால் அரும்பெரும் சாதனைகள் புரியலாம் என்பார்.. அன்றாட வாழ்க்கையில் நாம் வார்த்தையின் சக்தியைப் பார்க்கிறோம். சுவாமிஜி சொல்லுவார்:” என் சொல்லின் அலைகள் காற்றின் வழியே உங்கள் செவிகளில் புகுந்து உங்கள் நாடி நரம்புகளைத் தொட்டு உங்கள் மனங்களில் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. முட்டாள் என்று ஒருவனிடம் சென்று சொல்லிப்பாருங்கள்! அவன் முஷ்டியை ஓங்கி ஒரு குத்து விடுவது நிச்சயம். இதோ ஒரு காட்சி. துன்பவசப்பட்டு ஒரு பெண்மணி அழுது கொண்டிருக்கிறாள். மற்றொரு மாது அவள் அருகில் வந்து கனிவாகச் சில வார்த்தைகள் பேசுகிறாள். முதல் பெண்ணின் அழுகை நிற்கிறது. துக்கம் சந்தோஷமாக மாறுகிறது.”
இது சுவாமிஜி பேச்சுக்காகச் சொன்னதில்லை.
 நெருங்கிய உறவினரின் மரணத்தால் தாங்க முடியாத துக்கத்துடன் ஒரு பெண்மணி, சுவாமிஜியிடம் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தபின் ஏதோ மந்திர சக்தி போல உற்சாகம் பெற்றுத் திரும்பிய நிகழ்ச்சி பதிவாகியிருக்கிறது.
அமெரிக்காவில் பயங்கரப் பொருளாதார நெருக்கடி. வங்கிகள் வீழ்ந்துவிட்டன. பங்குகள் சரிந்துவிட்டன. அத்தனையையும் இழந்து துன்பத்தின் எல்லை கண்ட ஒருவன், சுவாமிஜியின் உரையைக் கேட்டதும்,’”போனால் போகட்டும் போடா! நான் போய் உற்சாகமாக ஆக வேண்டிய காரியங்களைப் பார்ப்பேன்!” என்று கூறிப் புதுத் தென்புடன் சென்ற வரலாறும் உண்டு.
இதுதான் சொல்லின் ஆற்றல். வில்லின் ஆற்றலுக்கும் மேலானது!
இந்த ஆற்றலைப் புரிந்துகொண்டு, அதனை ஊருக்கு உதவியாக நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என்பது சுவாமிஜியின் கருத்து.
இந்த ஆற்றலைக் கல்விப்பணிக்கு,”ஆங்கோர் ஏழைக்கெழுத்தறிவித்த”லுக்குப் பயன்படுத்தலாமே?
அவ்வப்போதைய தேவைக்கு உதவுவது நல்லதே. நீடித்து நிற்கிறாற்போல் உதவுவது அதைவிடச் சாலச் சிறந்தது. ஒருமணி நேரத் தேவையைப் பூர்த்தி செய்வதை விட ஓராண்டுத் தேவையைப் பூர்த்தி செய்வது நல்லது. துன்பத்தை அடியோடு நீக்குவது அதனினும் உயரிய செயல். வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்..சரி. பசி மீண்டும் திரும்புமே? அதனால்தான் சொன்னார்கள் பசித்தவனுக்கு மீனைக் கொடுப்பதைவிட மீன்பிடிக்கக் கற்றுக்கொடுப்பது சிறந்தது. .சுவாமிஜியும் கல்வி புகட்டுவதையே  அனைத்தினும் மிக உயர்ந்த பணியாகச் சொல்கிறார்.
சுவாமிஜியின் வாழ்க்கையையும் பாரதத்தின் வரலாற்றையும் புரட்டிப்போட்ட கன்யாகுமரித் தவத்தை ஒட்டி சுவாமிஜி வெளியிட்ட சில கருத்துகள்:
”பிறருக்கு நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் படைத்த பற்றற்ற துறவிகள் கிராமம் கிராமமாகச் சென்று கல்வியைப் பரப்ப வேண்டும். வாய்மொழிக் கல்வி மூலம் மிகவும் தாழ்த்தப்பட்டோர் உட்பட அனைவரின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த வேண்டும்.. .ஏழைகள் பள்ளிக்கூடம் செல்லக்கூட வசதியில்லாத பரம ஏழைகளாக இருக்கிறார்கள். முகமது மலையை நோக்கி வராதபோது மலைதான் முகமதை நோக்கி வரவேண்டும்..”
முக்கியமாக தரமான கல்வியை ஏழை எளியவர்களுக்கு இலவசமாக வழங்கும் தலையாய பணியில் சேவாலயா தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.


Saturday, 15 July 2017

பணியின் மூலம் பேரானந்தம்(6)


செய்க பொருளை !
ஊருணி நீர்நிறைந் தற்றே-உலகுஅவாம்
பேரறி வாளன் திரு.
                     திருக்குறள்.
உலகமெல்லாம் வழ வேண்டும் என்ற ஒப்புரவு மிக்க பேரறிவாளனின் செல்வம் ஊரில் உள்ளார் நீர் உண்ணும் குளம் ,நீரால் நிறைந்து அனைவருக்கும் பயன்படும் தன்மைத்து.
                     ஸ்ரீசந்திரன் உரை.

பலருக்கும் ஒரு சந்தேகம். இலக்கு பற்றிச் சொல்கிறீர்கள். பணம் சம்பாதிப்பதை இலக்காக வைத்துக்கொள்ளலாமா,கூடாதா? பனம் சேர்ப்பது பாவச்செயல் என்றுகூட ஒரு கருத்து சொல்லப்படுகிறதே?
இது சம்பந்தமாக சுவாமி விவேகானந்தரின் கருத்தைத் தெரிந்து கொள்வோம்.
இல்லறத்தில் உள்ளவன் சமுதாயத்தைத் தாங்கிப் பிடிக்கும் கடமை படைத்தவன். .ஏழை எளியவர்கள், குழந்தைகள், முதியவர்கள், பொருளீட்டாத பெண்கள் எல்லாரும் அவனை நம்பித்தான் இருக்கிறார்கள். தனது இத்தகைய பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக அவனுக்கென்று ஒரு கடமை இருக்கிறது. இதற்காக அவன் பொருள் ஈட்ட வேண்டும். அதுமட்டுமில்லாமல், பொருள் ஈட்டுவது ஏதோ பாவம் என்பது போலத் தவறான எண்ணங்கள் காரணமாக, , கடமைகளை நிறைவேற்றுவதன் நிமித்தம் பொருளீட்டாவிட்டால் அவன் வாழ்வதில் பொருளே இல்லை. சுருங்கச் சொல்லப்போனால், சுற்றத்தார், தான் சார்ந்துள்ள சமுதாயம் இவர்களின் நலனுக்காகப் பணம் சம்பாதிக்கப் பாடுபடாதவன் கடமையிலிருந்து வழுவியவனே ஆவான்.
ஆயிரக்கணக்கானவர்கள் பொருள் சேர்க்காவிட்டால் நமது சமுதாயம் எப்படி இருக்கும் எப்படி இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கலாம். ஆதரவற்றவர் இல்லங்கள், அறச்சாலைகள், இவை எல்லாம் எப்படி உருவாகியிருக்கும்? எத்தனை வேலைவாய்ப்புகள் உருவாகாமல் போயிருக்கும்?
தக்காருக்கு உதவுவதற்காக, பிறர் நலம் பேண, சிரமப்பட்டு பணம் ஈட்டுவது ஒரு தவம் என்றே சொல்ல வேண்டும்.
செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல்; நச்சப்படாதவன் செல்வம் நடுவூருள் நச்சுமரம் பழுத்தற்று என்ற மூதுரைகள் நினைவில் கொள்ளத்தக்கன.

இலக்கு நிர்ணயம் பற்றிப் பேசினோம். இந்த ஆண்டு இவ்வளவு பொருள் ஈட்டவேண்டும் என்று இலக்கு வைத்துக்கொள்ளலாமா?  கொள்ளலாம்.
இதற்கான உத்தியை ஒரு அறச் சிந்தனையாளர் கடைப்பிடிப்பதாக  ஒரு சொற்பொழிவாளர் சொல்லக்கேட்டேன். அவரது இலக்கு இந்த ஆண்டு எவ்வளவு தொகை தர்மத்துக்காக செலவிடவேண்டும் என்பது. மொத்த வருமானத்தில் 10% அறத்துக்காக செலவிட வேண்டும் என்று அவர் ஒரு கொள்கை வகுத்துக்கொண்டுள்ளார் .தர்ம காரியத்துக்காக 10% என்பதை வைத்து அவர் ஆண்டு வருமான இலக்கை வைத்துக் கொள்கிறாராம். ஆண்டுக்கு ஆண்டு, அறச்செயலுக்கான இலக்குத் தொகையும், வருமான இலக்குத்தொகையும் அதிகரித்துக்கொண்டே போகும் என்பதைச் சொல்லத்தேவையில்லை.

நல்ல வழியில் பணம் சேர்ப்பதும், அதை நல்ல வகையில் செலவிடுவதும் நமது கடமையின்பாற்படுவதே. 

Sunday, 9 July 2017

பணியின்மூலம் பேரானந்தம் (5)

  


 5. புல்லியர் கூட்டத்தைப் பூழ்தி செய்திடடா!


செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கிலென் காவாக்கால் என்..
                     திருக்குறள்.
தன் சினம் வெற்றி கொள்ளும் இடத்தில் அஃது உண்டாகாமல் தடுப்பவன் சினம் தடுப்பவன் ஆவான். மற்ற இடத்தில் அதைத் தடுத்தால் என்ன? தடுக்காவிட்டால்தான் என்ன?
                     ஸ்ரீசந்திரன் உரை.

அறம் என்பதிலும், கடமை என்பதிலும் படிநிலைகள் உள்ளன. வாழ்க்கையின் ஒரு படிநிலையிலும் சூழ்நிலையிலும் கடமை ,அறம் எனப்படும் ஒன்று, மற்றொரு படிநிலையில் செய்யத்தகாததாகிவிடும்.
உதாரணத்துக்கு “Resist not Evil” என்று சான்றோர் உபதேசங்கள் கேட்டிருக்கிறோம். தீமையை எதிர்க்காதே. இதை நம் வாழ்க்கையில் கடைப்பிடிப்போமானால், நாம் வீடு வாசல் சொத்து சுகம் எல்லாவற்றையும் இழந்து ஓட்டாண்டியாய் நிற்கக்கூடிய அபாயம் இருக்கிறது. சமூக விரோதிகள் கோலோச்சுவர். நாட்டில் பலரும் இதே கொள்கையைப் பின்பற்றுவார்களே ஆனால் சமுதாயம் சீர்குலைந்து அராஜகவாதிகளின் வேட்டைக்காடாக ஆகிவிடும்.
தீமையை எதிர்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. நடைமுறையில் எதிர்க்கவும் செய்கிறோம். இப்போது ஒரு சங்கடம். தீமையை எதிர்க்கக்கூடாது என்ற கொள்கையை வைத்துள்ள ’நா’னுக்கும், நடைமுறையில் தீமையை எதிர்த்து நிற்கும் ‘நா’னுக்கும் இடையே முரண்பாடு. விளைவாக நமக்குள் ஒரு குற்ற உணர்வு. மனப்போராட்டம். நம் மீதே நமக்குக் கழிவிரக்கம், ஏற்படுகிறது. தன்னம்பிக்கை குறைகிறது. நம் மீதே நமக்கு வெறுப்பு ஏற்படுகிறது. நல்ல வண்ணம் வாழ்வதற்குத் தன்னம்பிக்கையும், நம்மை நாமே நேசிப்பதும் அவசியம். தன்னைத் தானே வெறுப்பதை விடக் கொடுமை எதுவும் கிடையாது.
இந்த முரண்பாட்டைத் தீர்க்க என்ன வழி? தீமையை எதிர்க்கத்தான் வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். காண்டீபத்தைக் கீழே எறிந்துவிட்டுப் போரிடமாட்டேன் என்று வாளாயிருந்த அர்ச்சுனனைக் கண்ணபிரான் கோழை என்றும் பொய்யொழுக்கவாதி என்றும் கடிந்துகொண்டார்.
வில்லினை எடடா-கையில்
வில்லினை எடடா-அந்தப்
புல்லியர் கூட்டத்தைப்
பூழ்தி செய்திடடா!
என்று உசுப்பி எழுப்பினார்.
அர்ச்சுனன் அரச குலத்தைச் சேர்ந்தவன். அவன் கடமை நீதிக்காகப் போர் புரிவது. இதில் தவறினால் அவன் தன் மன்னருக்கும் ராஜ்யத்துக்குமான கடமையிலிருந்து வழுவியவனாவான். தீவிர ஆலோசனைக்குப்பின் எண்ணித் துணிந்து இறங்கியபின் போர்க்களத்தில் தனது மூத்தவர்களையும் உறவினர்களையும் கண்டு அவன் மனம் சஞ்சலிக்கிறது. தனது மனத் தளர்ச்சிக்கு அன்பு என்று பெயர் கொடுத்து அறநூல்களை எல்லாம் எடுத்துச் சொல்லி நியாயப்படுத்துகிறான். அவன் குழப்பத்தைப் புரிந்துகொண்ட கண்ணனின் அறிவுரையே கீதை மலராகப் பூத்தது.
இப்போது நம் முன் உள்ள கேள்வி தீமையை எதிர்க்காதே என்ற அறவுரை சரியா? அல்லது போரிடத் தூண்டிய கண்ணனின் கீதை சரியா?
 இரண்டும் சரிதான்.
எதிர் எதிர்த் துருவமாய் உள்ள உச்ச நிலைகள் இரண்டும் ஒன்று போலவே இருக்கும். நேர்மறையின் இறுதி எல்லையும் எதிர்மறையின் இறுதி எல்லையும் ஒரே இடத்தில் சங்கமிக்கும். ஒளி அலையின் அதிர்வுகள் அதிவேகமாய் இருந்தாலும், மிகக் குறைச்சலாய் இருந்தாலும் ஒளி கட்புலனுக்குப் புலப்படாது. அது போலவே, மிக ஓங்கி உயர்ந்த ஒலியும் அலவுக்குக் குறைந்த சன்ன ஒலியும் இரண்டுமே செவிப்புலனுக்கு எட்டாது. அதே போலத்தான் பேராற்றலுக்கும் பேடிமைக்கும் உள்ள உறவு. பலவீனன், கோழை,திராணியில்லாதவன்,எதிர்க்கமுடியாமல் கோழைத்தனமாக ஓடிப்போகிறான். மற்றொருவன் தான் மரண அடி கொடுக்க முடியும் என்று தெரிந்தும் கருணை காரணமாகப் பகைவனுக்கும் ஆசி கூறுகிறான். பயந்தவனொதுங்கி நிற்பதும், வல்லவன் தண்டிப்பதும் பாவம். புத்தபிரான் தன் ராஜ்யத்தை துறந்து திருவோடு ஏந்தியது தியாகம். அன்றாடக் கஞ்சிக்கே இல்லதவன் திருவோடு ஏந்துவதில் சிலாக்கியம் ஏதும் இல்லை. காந்திஜி சொல்லுவார்-எறும்பு யானையை மன்னிக்கமுடியாது!
மையக்கருத்து இதுதான்..எதிர்த்து நில்லாமை அதி உன்னத லட்சியம் என்பதைப் புரிந்து கொண்டவன் கர்மயோகி. அதே நேரத்தில் எதிர்த்து நில்லாமை ஆற்றலின் உச்சகட்ட வெளிப்பாடு என்பதையும் அந்த உயரிய லட்சியத்தை  நோக்கிய பயணத்தின் ஒரு படியே எதிர்த்துப் போரிடுவது என்பதையும் கர்மயோகி உணர வேண்டும் .பயந்து ஒதுங்குவது பேடிமை. இன்றுபோய் நாளை வா என்றது பேராண்மை.
இந்த உயரிய லட்சியத்தை அடைவதன் முன்னம் நம் கடமை தீமையை எதிர்த்து நிற்பதே. தொடர்ந்து செயலாற்றுவோம். போரிடுவோம். தீமையைப் போட்டுத் தாக்குவோம். அப்போதுதன்,எதிர்த்து நிற்கும் பேராற்றலைப் பெற்ற பின்புதான் எதிர்த்து நில்லாமை போற்றாத்தக்க பண்பாகும்.
இதனால்தான் “பகைவனுக்கருள்வாய்” என்று தன் நெஞ்சுக்குச் சொன்ன மகாகவி,
பாதகம் செபவரைக் கண்டால்-நாம்
     பயம்கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா-அவர்
     முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா! –என்று பாடினார்.
.
. ,



Saturday, 8 July 2017

பணியின் மூலம் பேரானந்தம் (4

பணியின் மூலம் பேரானந்தம் (4)

 .இயல்புக்கு இயைந்த இலக்கு.

ஒவ்வொருவனும் தனக்கென்று ஒரு இலட்சியத்தை வகுத்துக்கொண்டு அதனை அடைவதற்கு முனைய வேண்டும். மற்றொருவனது இலட்சியத்தை எடுத்துக்கொண்டு,தொடர்வதை விட, இதுவே வெற்றிக்கு நிச்சயமான வழியாகும்.
சுவாமி விவேகானந்தர்.
ஒரு இலட்சியத்தை முன்னிறுத்திப் பணியாற்ற வேண்டும் என்கிறார் சுவாமிஜி. இலக்கு நிர்ணயம் பற்றிப் பயிற்சி வகுப்புகளில் குறிப்பிடும்போது SMART  என்ற தொடரைப் பயன்படுத்துவார்கள்.. Simple, Measurable, Attainable, Realistic,Time-bound என்பதன் சுருக்கம் இது. மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காகவோ, ,மற்றவர்கள் செய்து வெற்றி கண்டுள்ளார்களே  என்பதற்காகவோ, அந்த இலக்கு எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும் அதைக் காப்பியடித்து முட்டி மோதிக்கொள்வதில் ஒரு பயனும் இல்லை..நமது இலக்கு நம்முடையதாக இருக்க வேண்டும். நமது இயல்புக்கு இசைந்ததாக இருக்க வேண்டும்.
என் நண்பர் ஒரு பாட்டுக் கச்சேரிக்குப் போய்விட்டு வந்து சொன்னார். “ அந்த வித்வான் மூன்று மணி நேரக் கச்சேரிக்கு ஒரு லட்சம் வாங்குகிறாராமே? நானும் பாட்டுக் கற்றுக்கொண்டு கச்சேரி செய்யலாமென்று நினைக்கிறேன்.” நண்பர் இதை நகைச்சுவையாகத்தான் சொல்லியிருக்கவேண்டும். ஏனென்றால் அவர் குரல் கர்த்தபக்குரல். இத்தகைய “இலக்கு”  சிறுபிள்ளைத்தனமானது.. “நான் கண்டக்டராவேன், டிரைவராவேன், பலூன் விற்பவராவேன்” என்று சின்னக் குழந்தைகள் அவ்வப்போது சொல்லுமே அது போல. வயது முதிர்ந்த நமக்கு இலக்கு நிர்ணயத்திலும் ஒரு முதிர்ச்சி  வேண்டும்.
குடும்பத் தொழில் நமக்கு இயல்பாக வரும். சிலபேருக்கு குடும்ப நிறுவனங்கள் இருக்கும். அவற்றை நிர்வகித்து முன்னுக்குக் கொண்டு வரவேண்டிய பொறுப்பு அவர்களுக்கு அமையும். இயல்பாக அதில் நாட்டம் இருந்தால்,குடும்ப சூழ்நிலையில் அதை நிர்வகிக்க வேண்டிய பொறுப்பு இருந்தால்,அதிலேயே ஒரு லட்சியத்தை மேற்கொள்ளலாம்.. இல்லையெனில் எந்தத் துறையில் நமக்கு இயல்பான ஈடுபாடு இருக்கிறதோ அந்தத் துறையில் இலட்சியத்தை மேற்கொள்ளலாம். நமக்கு இயல்பாகக் கைவரும் தொழில்/கலை,சூழ்நிலை காரணமாக நமக்கு அமைந்த பணி இவை தொடர்பாகவே நமது இலட்சியத்தை அமைத்துக்கொள்வது சிறப்பு. இயல்பாக நமக்கு ஆர்வமுள்ள துறையே, நமது இயல்பான துறை என்று கொள்ளலாம் .இதற்கு ஒரு விதி சொல்வர்கள். எந்தப் பணி செய்யும்போது நீங்கள், காலத்தையும் சூழ்நிலையையும் மறந்து விடுகிறீர்களோ, அதுவே உங்களுக்கு இயல்பாகக் கைவரும் பணி. இது நாம் அனைவரும் அறிந்தது. அனுபவத்தில் உணர்வதுதான்.
இதில் இன்னொரு விஷயம் பார்க்கவேண்டும். மற்றவர்கள் அவரவர் சுபாவத்துக்கு ஏற்பத் தேர்ந்தெடுக்கும் எந்தத் தொழிலையும் இழிவாகக் கருதக்கூடாது. ஏளனமாகப் பார்க்கக்க்கூடாது. பல்வேறுபட்ட தன்மைகளிடையே ஒற்றுமை என்பதுதான் படைப்பின் நியதி. மனிதர்கள் ஒருவர் ஒருவருக்கிடையே, குணங்கள், தன்மைகளில் வேறுபாடு இருந்தாலும், அத்தனை வேறுபாடுகளும் படைப்பின் இயல்பில் அமைந்த வேறுபாடுகளே. எல்லாரையும், எல்லாப் பணிகளையும் ஒரே தராசைக்கொண்டு எடைபோடுவது, இயற்கைக்கு மாறான போராட்டங்களையும் ,பிணக்குகளையும் பேத உணர்வுகளையுமே வளர்க்கும். இப்படிச் செய்யும்போது பலருக்கும் தாங்கள் செய்யும் பணியின் மீது வெறுப்பு உண்டாகச் செய்யும் அபாயம் இருக்கிறது. விவேகம் நிரம்பிய  நமது கடமை,அவரவர்களைத் தங்கள் இலட்சியத்தில் முன்னேறும்படி ஊக்குவிப்பதும்,  இலட்சியங்கள் நேர்மையானவையாக அமைய வழிகாட்டுவதுமே ஆகும். 

Friday, 7 July 2017

ராமச்சந்திரன் கவிதை

.
ராமச்சந்திரன் கவிதை மூலம் என்ன சொல்ல நினைத்தேன் என்று தெளிவு படுத்தி விடுவது உத்தமம் என்று படுகிறது. மனித மனத்தின் சிக்கல் பற்றிய சிந்தனை.
நான் என் கருத்துதான் சரியானது என்பதிலும் நண்பன் கருத்து தவறானது என்பதிலும் உறுதியாக இருக்கிறேன். அவனது கருத்தை மாற்றி அவனைத்”திருத்த வேண்டிய” கடமை என்ற சுமையை வலிந்து, தேவையின்றி ஏற்றுக்கொள்கிறேன். விளைவாக என் நட்பே அவனுக்கு சுமையாகி விடுகிறது.
அவன் தன் கருத்தை எடுத்து விளக்கப் பார்க்கிறான் .நான் கேட்கத் தயாராயில்லை. அடுத்த நிலையில் இங்கிதம் காரணமாக புன்னகைத்துப் பேசாமல் இருந்து விடுகிறான். நான் தொடர்ந்து nag செய்யவே. He simply swtches off! when I prove to be a nuisance, he starts avoiding me
Now it is a problem of ego for me .Because he is a friend, I feel possessive, and that I have a right to manipulate his views.
முடியாமல் போகவே, வெறுப்பு வருகிறது I am not able to distinguish between Ramachandran my friend and the views he holds. This happens,however rational I am, because of the emotions kindled by Ego.
I project my dissatisfaction with him on caste and origin. In the ultimate stage , I hate people who have birthmarks like him.(An extreme, exaggerated,instance.)
 ஆக,பொதுவான ஒரு வ்ஷயம் பற்றிய என் நண்பனின் கருத்து, என் அமைதியைக் குலைக்கிறது. என் நிம்மதி என்வசம் இல்லை!
ராமச்சந்திரன் என்ற பெயர், நகுலன் எழுதிய ஒரு கவிதையின் தாக்கத்தில் உருவானது.
மூல “ராமச்சந்திரன் கவிதை”யைப் படியுங்களேன்! முடியைப் பிய்த்துகொள்ள அதுவும் ஒரு காரணியாகலாம்!
அவன் வந்தான்.
ராமச்சந்திரன் என்றான்.
பேசிக்கொண்டிருந்துவிட்டுப் போனான்.
எந்த ராமச்சந்திரன் என்று
நானும் கேட்கவில்லை.
அவனும் சொல்லவில்லை.
, ..

,

பணியின் மூலம் பேரானந்தம் (3)


எனக்கு வாய்த்த வேலை…
வையகம் காப்பவரேனும்-சிறு
     வாழைப் பழக்கடை வைப்பவ ரேனும்
பொய்யக லத்தொழில் செய்தே-பிறர்
     போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர்.
                                பாரதியார். 

 சூழ்நிலைகளால் எனக்கு வாய்த்த வேலை அவ்வளவு முக்கியமானதில்லை, மிகவும் சலிப்பூட்டும் வேலை. இதில் ஆனந்தம், அதுவும் பேரானந்தம் கொள்வதாவது என்று அங்கலாய்ப்பவர்கள் இல்லாமல் இல்லை. சங்கிலியில் ஒவ்வொரு கணுவும் இணைப்பும் முக்கியம். பந்தைக் கூடையில் போட்டு கைதட்டு வாங்குபவனைப் போலவே, பந்தை அவனுக்கு வாகாகச் செலுத்திக்கொண்டு  செல்பவனும் முக்கியம். ஏன் ? பந்தை பொறுக்கியெடுத்துக் கொடுப்பவனது பணியும் முக்கியமானதே. எவ்வளவு சிறிய பணியாக இருந்தாலும் சலிப்பூட்டும் என்று நினைக்கத் தூண்டும் பணியாக இருந்தாலும், ஒட்டுமொத்த இலட்சிய ஈடேற்றத்தில் நாம் ஆற்றும் பணி எவ்வாறு பொருந்துகிறது என்று எண்ணிப் பார்க்கும்போது உற்சாகம் குறைவதற்கு இடமில்லை. இது ஒரு பக்கம்.
எந்தப் பணி செய்தாலும் அதைச் சிறப்பாகச் செய்யவேண்டும் என்பதில் கருத்தாகச் செயல்பட்டால் பணியே பரமசுகம் அளிக்கும். பத்தடிக்குப் பத்தடி பரப்புள்ள ஓர் அறையைச் சுத்தம் செய்வது நமது பணியாக இருந்தால், அதைத் துடைத்துத் துடைத்துப் பளிச்சென்று வைத்துக்கொள்ளும்போது கிடைக்கும் பணிநிறைவுதான் இன்பம்..
இப்போதுள்ள பணியை நாம் பொறுப்போடு லயித்துச் செய்தால் பெரிய பொறுப்புகள் தாமாகவே நம்மைத் தேடி வரும். ஜேம்ஸ் ஆலன் சொல்லுவார்::;ஒரு தொட்டியில் ரோஜாச்செடி வைக்கப்பட்டிருக்கிறது. தொட்டி காணாத அளவு அது வளர்ந்ததும், உரிமையாளன் அதைப் பெரிய தொட்டிக்கு மாற்றி விடுவான்.
எவரையும் அவர் செய்யும் வேலையைக்கொண்டு மதிப்பிடக்கூடாது. அதை அவர் எவ்வளவு நேர்மையாக, ஈடுபாட்டுடன், சிறப்பாகச் செய்கிறார் என்பதே அவரது தகுதியை நிர்ணயிக்கும் உரைகல். உள்ளபடியே :வறட்டுத்தனமாகப் பாடம் சொல்லும் பேராசிரியரை விடப்,,பளிச்சென்று காலணிகளைத் துடைக்கும் செருப்புத் தொழிலாளியே மேலானவன்.

4 .இயல்பு

Wednesday, 5 July 2017

ராமச்சந்திரன் என் இனிய சிநேகிதன்.



ராமச்சந்திரன் என் இனிய சிநேகிதன்.
தப்பான அபிப்பிராயங்கள் நிறைய வைத்திருக்கிறான்.
அவனை நல்வழிப்படுத்தியாக வேண்டும்
எனெனில் அவன் என் இனிய சிநேகிதன்.

விஷயத்தைத் தெளிவாக எடுத்துச் சொன்னால்
உள்வாங்கிக்கொள்ள மாட்டேன் என்கிறான்.
தன் கருத்தையே உரக்கச் சொல்கிறான்.

நான் தெளிவாகப் பேசும்போது
புன்னகைத்து
பேசாமல் இருந்து விடுகிறான்.
இவனுக்கென்ன தெரியும் என்ற
அலட்சியம்.

இப்போதெல்லாம் நான் பேசினால்
வேறுபக்கம் பார்த்துக்கொண்டிருக்கிறான்.
எங்கேயோ எண்ணெய்மழை
என்பது போல.
காதில் பஞ்சை அடைத்துக் கொண்டிருப்பானோ?

அவனைத் திருத்த முயன்றேன்
ஏனெனில் அவன் சிநேகிதன்.
முடியவில்லை.
தோற்றுப்போய் விட்டேன்.

அவன் சாதி
அவன் மாவட்டம்
அப்படி.
திமிர் பிடித்தவர்கள்.

அவனுக்குக்
 கன்னத்தில்
 ஒரு சின்ன மச்சம் இருக்கிறது..
இப்ப்போதெல்லாம்
 கன்னத்தில்
மச்சம் இருப்பவர்களைப் பார்த்தால்
எனக்குப் பற்றி எரிகிறது.
கோவில் யாழி சிலை வாயின்
உருண்டைப்பந்து போல
வயிற்றில் புரள்கிறது.

ராமச்சந்திரன் என் இனிய சிநேகிதன்
முன்பொரு காலத்தில்.




Tuesday, 4 July 2017

பணியின் மூலம் பேரானந்தம்(2)

என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?

செய்தக்க அல்ல செயக்கெடும்-செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.
                           திருக்குறள்
செய்யக்கூடாத ஒரு செயலைச் செய்வதாலும் அழிவு உண்டு. செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டாலும் அது அழிவைத் தரும்
                           ஸ்ரீசந்திரன் உரை.
தனக்கேனும் பிறர்க்கேனும் துன்பம் விளைவிக்கத் தக்க செய்கை பாவம். தனக்கேனும் பிறர்க்கேனும் இன்பம் விளைவிக்கத் தக்க செயல் புண்ணியச் செயல் எனப்படும்
                           பகவத்கீதை உரையில் பாரதியார்.
எல்லாரும் அவரவர் கடமையைச் செய்ய வேண்டும். இதில் கடமை என்ன என்று தீர்மானிப்பதில் முரண்பாடுகள் இருக்கக்கூடும். நாட்டுக்கு நாடு, பிரந்தியத்துக்குப் பிராந்தியம்,சமயத்துக்கு சமயம், ஏன்,காலத்துக்குக் காலம், சூழ்நிலைக்கு சூழ்நிலை, செய்யவேண்டியது எது செய்யத்தகாதது என்று விலக்கி வைக்கப்பட்ட செயல் எது என்பது பற்றிய நிலைப்பாடுகளில் முரண்பாடுகள் இருக்கின்றன. ஆனால் எல்லாருமே ஏற்றுக்கொள்ளக்கூடியது, அரரம் செய்ய வேண்டும்; மறத்தை விலக்க வேண்டும். எது அறம்? எது மறம்? பிறருக்குத் தீங்கு விளைவிப்பது மறம். நன்மை செய்வது அறம்
இந்த அடிப்படையில், நாம் அங்கம் வகிக்கும் சமுதாயத்தின் இலட்சியங்களுக்கும் செயல்பாடுகளுக்கும் ஏற்ப, நம்மை மேம்படுத்தக்கூடிய நல்ல செயல்களைச் செய்வது நமது கடமை என்று கொள்ளலாம்..




Monday, 3 July 2017

பணியின் மூலம் பேரானந்தம்

பணியின் மூலம் பேரானந்தம்
(Work as a source of joy.)
(சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டது.)
1.   பணி பணிக்காகவே!
கடமையாவன: தன்னைக் கட்டுதல்
பிறர்துயர் தீர்த்தல், பிறர்நலம் வேண்டுதல்..
                     பாரதியார்.
இன்பம் விழையான் வினைவிழை2வான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்.
                     திருக்குறள்
தனக்கு வரும் இன்பத்தை விரும்பாதவனாகி, செயல் முடித்தலையே விரும்புபவன் ,தன் உறவினர், நண்பர் சான்றோர் ஆகியோரின் துன்பத்தை அகற்றி அவர்களைத் தாங்கும் தூண் ஆவான்.
      ஒரு நொடி கூட யாரும் வேலை செய்யாமல் இருப்பதில்லை. பேசுவது, கேட்பது, மூச்சு விடுவது, நடப்பது எல்லாமே வேலைதான். மனத்தாலோ உடலாலோ நாம் செய்யும் எல்லாமே வேலைதான்.
நாம் இப்போது பேசுவது, சுபாவத்தாலோ, சமுதாயத்தில் நமக்கு அமைந்த இடத்தினாலோ, ஏற்பட்டுள்ள கடமைகளைப்பற்றி..
சான்றோர்கள் நாம் மேற்கொள்கிற வேலையை புத்திசாலித்தனமாகச் செய்ய வேண்டும் என்கிறார்கள். அதுவே ஒரு அறிவியலாம்..எப்படி வேலை செய்வது என்று கற்றுக்கொள்வதன் மூலம் மேலதிகப் பலன்களைப் பெறலாம் என்கிறார்கள் .நாம் நினவில் கொள்ள வேண்டியது, எல்லாப் பணிகளும் நமக்குள் இருக்கிற ஆற்றலை மேலும் வளர்த்துக்கொள்ள  உதவுகின்றன என்பதுதான்..
உழைப்பதன் நோக்கம் என்ன? மக்கள் பலரும் பலவிதமான லாபம் கருதி உழைக்கிறார்கள். பணம், புகழ், பதவி, இந்த உலகில் தங்கள் பெயரை நிலைநாட்டிவிட்டுச் செல்ல வேண்டும் என்ற பலன் கருதி உழைப்பவர்கள் இருக்கிறார்கள். நாம் செய்ய வேண்டியது பணிக்காகவே பணி. விசித்திரமாக இல்லை?
இப்படிப் பணியாற்றுபவர்கள் இல்லாமல் இல்லை. தன் நலத்துக்காகவே இல்லாமல், பிறர் நலத்தையே குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றுபவர்கள் இருக்கிறார்கள். அவர்களும் மேலானவர்களே. சொந்த நலமே கருதாமல் பணியாற்றுவது என்பது ஆரம்பத்தில் கஷ்டமான காரியம்தான். முயன்று பழகிக் கொள்ள வேண்டும். இதற்கு மிகுந்த சுய கட்டுப்பாடு தேவை.. தன்னலம் கருதிப் பணியாற்றும்போது ஆற்றல் விரயமாகிறது. பணியையே முன்னிறுத்திப் பணி புரியும்போது, சுய கட்டுப்பாட்டினால், மாபெரும் ஆற்றல்கள் வெளியாகின்றன. தீவிர சுய கட்டுப்பாடு என்பது மாபெரும் ஆற்றலின் வெளிப்பாடு ஆகும். நமது புறச் செயல்கள் அத்தனையையும் விட அதிகமான ஆற்றலை வெளிப்படுத்துவது சுய கட்டுப்பாடுதான். நான்கு குதிரைகள் பூட்டிய ஒரு வண்டி மலைச்சரிவில் கட்டுப்பாடின்றி வேகமாக வருகிறது. அல்லது வண்டியோட்டி குதிரைகளை அடக்குகிறான். இவற்றில் எது அதிக சக்தியின் வெளிப்பாடு? தறிகெட்டு ஓடுவதா? அடக்கி நிறுத்துவதா? ஒரு பீரங்கிக்குண்டு வான்வழியே நெடுந்தூரம் விரைந்து சென்று கீழே விழுகிறது. மற்றொன்று வழியில் சுவரில் மோதி அதன் விளைவாக அபரிமிதமான வெப்பத்தை உருவாக்குகிறது.
கட்டுப்பாடின்றி வெளியாகும் ஒவ்வொரு சக்தியும் விரயமாகிறது.    அது உங்களுக்கு ஆற்றலைத் தந்து பயன்படாது. ஆனால் அதையே அடக்கி ஆண்டால் அது ஆற்றலை வளர்க்கும். இத்தகைய சுய கட்டுப்பாடுதான் ஒரு மகத்தான, மனத்திட்பத்தை, சங்கல்பத்தை உருவாக்கும். இந்தப் பண்புதான் ஓர் இயேசுநாதரையோ புத்தரையோ உருவாக்க வல்லது.
தன்னலமின்றிப் பணி புரிவதனால் என்ன பயன் என்ற கேள்விக்குச்
சுருக்கமான பதில், சிறப்பாகப் பணி புரிய முடியும். நமது ஆற்றல் அபரிமிதமாக அதிகரிக்கும். நாடாவிட்டாலும், அத்தகைய பணிகளின் விளைவுகள் இயல்பாகவே நம்மை வந்தடையும் .நாள் பிடிக்கலாம். பலரும் இதைப் புரிந்து கொள்வதில்லை. பரபரக்கிறார்கள்.
தன்னலமின்றிப் பணியாற்றுவது சிறந்தது என்று புரிந்து கொண்டு விட்டோம் ஆனால், அது இலகுவாகக் கை கூடுவதில்லை. தன்னைக் கட்டுதல் அவ்வளவு எளிதில்லை..என்ன செய்வது? ஆரம்பித்து விடுவோம். அவ்வளவுதான். அவ்வப்போது வருகிற வேலையைச் செய்வோம் .ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னலமின்றி இருக்கப் பயில்வோம் .நம்மை வேலை செய்யத் தூண்டும் உந்து சக்தி எது என்று அவ்வப்போது சிந்தித்துப் பார்ப்போம். ஆரம்ப வருஷங்களில் ,விதிவிலக்கில்லாமல் நமது நோக்கங்கள் எல்லமே தன்னலமாக இருப்பதைக் காண்போம். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக, விடாமுயற்சியினால், இந்தத் தன்னலம் கரைந்து போகும். நிறைவாக உண்மையில் தன்னலக் கலப்பே இல்லாமல் நாம் பணிபுரியக்கூடிய அந்த நாள் வரும். ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் வாழ்க்கைப்பாதையில் முட்டி மோதிக்கொண்டு செல்கையில் நாம் துளிக்கூட சுயநலக் கலப்பு இல்லாதவர்களாக மாறும் வேளை வரும் என்று நம்புவோம். அந்த நிலை வரும் தருணம் நமது அத்தனை ஆற்றல்களும் ஒருமுகப்படும். நமக்கே உரிய ஞானமும் வெளிப்படும்.