திறமைதான்
நமக்குச் செல்வம்!
.
சோர்வின்றிச் செயல் புரிய வேண்டும்.இயல்பாய் அமைந்த கடமைகளைச் செய்ய வேண்டும் .தன்னலம்
இன்றிச் செயல் புரிய வேண்டும். எல்லாம் சரி. நாம் சிந்திக்க வேண்டிய முக்கிய விஷயம்
ஒன்று உண்டு..திறம்படச் செயல் புரிவது..எவ்வளவுதான் நல்ல நோக்கங்கள் இருந்தாலும்,செயலாற்றும்
திறமை இல்லையென்றால் நமது அத்தனை பிரயத்தனங்களும்
வீணாவது மட்டுமல்லாமல் ,வேண்டாத விளைவுகளும்
ஏற்படக்கூடும். செயலில் திறமையையே ஓர் அறிவியலாக கீதை சொல்கிறது. அதனால்தான்
தெருப் பெருக்குவதைக்கூட ஒரு சாத்திரமாக பாரதியார் கூறினார்.
திறமையாகச்
செயல் படுவது எப்படி என்பதை விவேகானந்தப் பலகணியின் மூலம் காண முயல்வோம்.
இலக்கு
நிர்ணயம் பற்றி ஏற்கெனவே பார்த்தோம். நவீன நிர்வாக இயல் கண்ணோட்டத்தில் சுவாமிஜியின்
சிந்தனையைப் பொருத்திப் பார்த்தோம். இலக்கை நிர்ணயித்த பிறகு அதை அடையும் வழிகளையும்
பற்றி சுவாமிஜி சொல்கிறார்.
இலக்கு
எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதனை அடையும் வழிகள் சின்ன சின்ன அடிகளாகவே அமைகின்றன..
அந்த சின்ன சின்ன அடிகளை கவனத்துடனும் கருத்துடனும் எடுத்து வைக்க வேண்டும். ஒரு குதிரைக்கு
லாடம் அடிக்காததால் ஒரு ராஜ்யமே பறிபோனதாகச் சொல்லும் வழக்கு உண்டு.
நம்மில்
பெரும்பாலோரிடம் இருக்கும் கோளாறு, மகத்தான இலட்சியக் கனவின் பரவசத்தில் ஆழ்ந்து போய்
அதை அடைவதற்கான சின்ன சின்ன வழிமுறைகளில் கவனம் செலுத்தத் தவறி விடுகிறோம். 99 விழுக்காடு இலட்சியத் தோல்விகளுக்கான காரணம் என்ன என்று ஆராய்ந்து
பார்த்தால் வழிகளைக் கோடை விட்டிருப்பது தெரிய வரும். இலக்கை நிர்ணயித்தவுடன் அதை அடைவதற்கான
படிக்கட்டுகளையும் நடவடிக்கைகளையும் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். அவ்வப்போது அவை சரியாக
நடைபெறுகின்றனவா என்று சரிபார்த்துக்கொள்ள வேண்டும். சந்தர்ப்பத்துக்கு ஏற்றபடி, அனுபவத்தின்
அடிப்படையில் மாற்றங்களைச் செய்து கொள்ளத் தயங்கக் கூடாது. செயல்தான் விளைவை உருவாக்குகிறது என்பதை மறந்து விடக்கூடாது. விளைவு எங்கிருந்தோ
தானாக வந்து குதிப்பதில்லை. செய்யும் காரியம் ஒழுங்காகவும் ஆற்றலுடனும் அமைந்தாலொழிய
ஏற்ற முடிவை அடைய முடியாது .சின்ன சின்ன அடிகளை எடுத்து வைக்கும் நேரத்தில் அவற்றில்
கவனமாக இருக்க வேண்டும். இறுதி இலக்கைப் பற்றி-வெற்றி தோல்வியைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்க
வேண்டியதில்லை. பந்தை எதிர்கொள்ளும்போது கண் ஸ்கோர்போர்டுக்குப் போகக்கூடாது.
பகவத்கீதை
இதைதான் சொல்கிறது. செய்யும் காரியத்தில் மனம் முழுமையையும் ஈடுபடுத்திச் செய்ய வேண்டும்
முழுத் திறமையையும் பயன்படுத்திச் செய்ய வேண்டும். வேறு எந்த விஷயமும் நாம் கையில்
எடுத்துக்கொண்டுள்ள வேலையில் இருந்து திசை திருப்பக்கூடாது.
இதில்
கவனிக்க வேண்டிய விஷயம் இருக்கிறது. . ஒட்டுமொத்தக் குறிக்கோளையும் அதற்கு இந்த அடிகளின்
முக்கியத்தின் அளவையும் சரியாகப் புரிந்துகொள்ள
வேண்டும். அடிக்கடி சரிபார்த்துக் கொள்ள வேண்டும். குறிக்கோளை மறந்து விடக்கூடாது.
அதே நேரம்
Process என்பது நமக்கு ஒரு obsession ஆகிவிடக்கூடாது.
“உலகை அளக்கப் புறப்பட்ட பூதம்
அடிக்குச்சியைச் செப்பனிட்டுச் செப்பனிட்டு
ஓய்ந்தது”
என்பார்
கவிஞர் விக்கிரமாதித்யன்.
இதைவிட
விசித்திரமாக ஒன்றைச் சொல்வார் சுவாமிஜி. அவர் சொல்கிறார், நாம் ஒரு காரியத்தை எடுத்துச்
செய்கிறோம். முழுத்திறமையையும் பயன்படுத்தியே செய்கிறோம். என்றாலும் ஒரு சிக்கல் ஏற்பட்டு
அந்தக் காரியம் துன்பத்தையே விளைவிக்கிறது. ஆனால், நம்மால் அதை விட முடிவதில்லை. காரணம்
அந்த வேலையில் நாம் சிக்கிக்கொண்டு விட்டோம்.தேன்குடிக்க மலருக்குச் செல்லும் தேனீ
பிசுக்கு ஒட்டிக்கொண்டு வெளியேற முடியாமல் இருப்பது போன்ற ஒரு நிலை. சுவாமிஜி சொல்ல வருவது, ஈடுபாட்டுடன் வேலை செய்ய
வேண்டும்தான். ஆனால் அந்த வேலையே நம்மை அடிமைப்படுத்தி விடக்கூடாது.
இதைச்
சரியாகப் புரிந்து கொள்வோம்.வேலையில் சின்னப் பிரச்சினை ஏற்படும்போது சுவாமிஜி சொன்னதை வைத்துக்கொண்டு ”ஒரு தொப்பி கீழே விழுந்த சாக்கில்”
வேலையை விட்டு ஓட்டம் பிடிக்கக்கூடாது! “பொய்மையும் வாய்மை இடத்த” என்பது தவறாகப் பயன்படுத்தப்
படுவது போல ஆகிவிடும் அது..
No comments:
Post a Comment