நன்றி சொல்ல வேண்டும் இறைவனுக்கு!
கைம்மாறு
வேண்டா கடப்பாடு; மாரிமாட்டு
என்னாற்றும்
கொல்லோ உலகு.
திருக்குறள்.
கடமை,கைம்மாறு
(பிரதி உதவி) விரும்பாது. மழைக்கு உலகம் என்ன பிரதி உதவி செய்ய முடியும்?
பிறர்க்கு
உதவி செய்தல் தம் கடமை என்று கருதுவோர் எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்ப்பதில்லை .உலகைக்
காக்கும் மழைக்கு உலகத்தார் என்ன கைம்மாறு செய்ய முடியும்?
எடுத்துக்காட்டு:
ஆரியன்
அவனை நோக்கி ஆருயிர் உதவி யாதும்
காரியம்
இல்லான் போனான் கருணையோர் கடன்மை யீதால்
பேரிய
லாளர் செய்கை ஊதியம் பிடித்தும் என்னார்
மாரியை
நோக்கிக் கைம்மாறு இயற்றுமோ வையம் என்றான்
(கம்ப
ராமாயணம்-8403)
ஸ்ரீசந்திரன் உரை.
,நாம்
ஏன் பிறருக்கு நல்லது செய்ய வேண்டும்?-இது ஒரு கோடிரூபாய்க் கேள்வி..
அறம்
செய்ய விரும்புவது நல்லது. செய்ய விழைவது ,நமக்குள்ள சிறந்த ஊக்க சக்தி. எப்போது? பிறருக்கு
உதவுவது நமக்குக் கிடைத்த பிரத்யேக சிறப்புரிமை என்பதை உணரும்போது. தந்தக் கோபுரத்தில்
ஏறி நின்று கொண்டு, ”ஏய்! பரதேசி! இந்தா, எடுத்துக்கொள் பிச்சை!” என்று காசை வீசி எறிவது
அல்ல அறம். வறுமை இல்லையேல் வண்மை இல்லாததாகி விடும் .இரப்பார் இல்லாவிட்டால் ஈவதற்கு
எங்கே வாய்ப்பு? நம்மிடம் உதவி பெறுவதற்கு அந்த வறியவன் இருக்கிறானே என்று நன்றி செலுத்துவோம்.
நம்மை உயர்த்திக் கொள்வதற்கு அவன் ஒரு வாய்ப்பு தருகிறான் என்பதே உண்மை. ஆசீர்வதிக்கப்பட்டவன்
ஏற்பவன் அல்லன். இடுபவனே! நம்மிடம் உள்ள தயாள குணத்தை-கருணையை- வெளிப்படுத்துவதற்கு,
அவன் மூலம் தூய்மையும் செம்மையும் அடைவதற்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறதே என்று நாம்
மகிழ்ச்சி அடைய வேண்டும்.. நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல காரியமும் நம்மைத் தூய்மைப்
படுத்துகிறது; செம்மைப் படுத்துகிறது.
நாம்
இடைவிடாது நல்ல காரியங்கள் செய்து கொண்டே இருக்க வேண்டும் .ஏனெனில், நன்மை செய்வது
ஓர் ஆன்மிகப் பயிற்சி.
நாம்
உதவி புரிந்த எந்தப் பிச்சைக்காரனும் ,நமக்கு ஒரு பைசா கூடக் கடன்பட்டவனே இல்லை. நாம்தான்
அவனுக்குக் கடன் பட்டிருக்கிறோம். நமது தயாளகுணத்தைப் பயன்படுத்த அவன் வாய்ப்பளித்தான்
என்ற வகையில். நாம் உலகுக்கு நன்மை செய்திருக்கிறோம் என்றோ,அல்லது நம்மால் செய்ய முடியும்
என்றோ, நாம் இன்னின்னாருக்கு உதவி செய்திருக்கிறோம் என்றோ எண்ணிப் பார்த்துக் கொள்வது
தவறான சிந்தனையாகும். அப்படி நினைப்பது மூடத்தனம். மூடத்தனமான சிந்தனைகள் நமக்குத்
துன்பமே விளைவிக்கும். ஒருவருக்கு உதவி செய்து விட்டு அவர் நன்றி சொல்ல வேண்டும் என்று
எதிர்பார்க்கிறோம். அவர் நன்றி சொல்லவில்லை என்றால் மன வருத்தம் ஏற்படுகிறது. நாம் செய்யும் காரியத்துக்குப் பிரதியாக ஏன் ஒன்றை
எதிர்பார்க்க வேண்டும்? நாம் உதவி செய்யும் மனிதனுக்கு நாம் நன்றி செலுத்துவோம். அவனைக்
கடவுளாகப் பாவிப்போம். சக மனிதனுக்கு உதவுவதன் மூலம் கடவுளை வழிபடும் வாய்ப்புக் கிடைத்திருப்பது
எவ்வளவு பெரிய சிறப்புரிமை! உண்மையிலேயே பற்றற்று இருந்தோமானால், வீண் எதிர்பார்ப்புகள்
வேதனைகள் அத்தனையிலிருந்தும் நாம் தப்பிவிடுவோம். உற்சாகமாக நல்ல காரியங்கள் செய்து
கொண்டே போகலாம். எதிர்பார்ப்பின்றிப் பணி புரிபவனைத் துன்பமோ வேதனையோ அணுகாது.
சுவாமிஜியின்
இந்த சிந்தனையை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்ச்சி அவரது வரலாற்றில் வருகிறது. அதை அடுத்த
இயலில் பார்ப்போம்.
No comments:
Post a Comment