அதுவுமற்றவர்
வாய்ச்சொல் அருளீர்!
……அன்ன
யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கெழுத்தறிவித்தல்.
பாரதியார்.
பிறர்
துயர் தீர்த்தலைக் கடமையாகச் சொல்வார் பாரதியார். பணத்தினால் மட்டும்தான் இந்தக் கடமையை
ஆற்ற முடியும் என்பதில்லை. வாய்ச்சொல்லாலும் உபகாரம் செய்யலாம். வார்த்தையின் மகிமை
பற்றி சுவாமி விவேகானந்தர் நிறையவே பேசுவார். சிந்தனைக்கும் சொல்லுக்கும் உள்ள தொடர்பைப்
புரிந்துகொண்டால் அரும்பெரும் சாதனைகள் புரியலாம் என்பார்.. அன்றாட வாழ்க்கையில் நாம்
வார்த்தையின் சக்தியைப் பார்க்கிறோம். சுவாமிஜி சொல்லுவார்:” என் சொல்லின் அலைகள் காற்றின்
வழியே உங்கள் செவிகளில் புகுந்து உங்கள் நாடி நரம்புகளைத் தொட்டு உங்கள் மனங்களில்
விளைவுகளை ஏற்படுத்துகின்றன. முட்டாள் என்று ஒருவனிடம் சென்று சொல்லிப்பாருங்கள்! அவன்
முஷ்டியை ஓங்கி ஒரு குத்து விடுவது நிச்சயம். இதோ ஒரு காட்சி. துன்பவசப்பட்டு ஒரு பெண்மணி
அழுது கொண்டிருக்கிறாள். மற்றொரு மாது அவள் அருகில் வந்து கனிவாகச் சில வார்த்தைகள்
பேசுகிறாள். முதல் பெண்ணின் அழுகை நிற்கிறது. துக்கம் சந்தோஷமாக மாறுகிறது.”
இது
சுவாமிஜி பேச்சுக்காகச் சொன்னதில்லை.
நெருங்கிய உறவினரின் மரணத்தால் தாங்க முடியாத துக்கத்துடன்
ஒரு பெண்மணி, சுவாமிஜியிடம் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தபின் ஏதோ மந்திர சக்தி போல
உற்சாகம் பெற்றுத் திரும்பிய நிகழ்ச்சி பதிவாகியிருக்கிறது.
அமெரிக்காவில்
பயங்கரப் பொருளாதார நெருக்கடி. வங்கிகள் வீழ்ந்துவிட்டன. பங்குகள் சரிந்துவிட்டன. அத்தனையையும்
இழந்து துன்பத்தின் எல்லை கண்ட ஒருவன், சுவாமிஜியின் உரையைக் கேட்டதும்,’”போனால் போகட்டும்
போடா! நான் போய் உற்சாகமாக ஆக வேண்டிய காரியங்களைப் பார்ப்பேன்!” என்று கூறிப் புதுத்
தென்புடன் சென்ற வரலாறும் உண்டு.
இதுதான்
சொல்லின் ஆற்றல். வில்லின் ஆற்றலுக்கும் மேலானது!
இந்த
ஆற்றலைப் புரிந்துகொண்டு, அதனை ஊருக்கு உதவியாக நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்
என்பது சுவாமிஜியின் கருத்து.
இந்த
ஆற்றலைக் கல்விப்பணிக்கு,”ஆங்கோர் ஏழைக்கெழுத்தறிவித்த”லுக்குப் பயன்படுத்தலாமே?
அவ்வப்போதைய
தேவைக்கு உதவுவது நல்லதே. நீடித்து நிற்கிறாற்போல் உதவுவது அதைவிடச் சாலச் சிறந்தது.
ஒருமணி நேரத் தேவையைப் பூர்த்தி செய்வதை விட ஓராண்டுத் தேவையைப் பூர்த்தி செய்வது நல்லது.
துன்பத்தை அடியோடு நீக்குவது அதனினும் உயரிய செயல். வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்
இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்..சரி. பசி மீண்டும் திரும்புமே? அதனால்தான் சொன்னார்கள்
பசித்தவனுக்கு மீனைக் கொடுப்பதைவிட மீன்பிடிக்கக் கற்றுக்கொடுப்பது சிறந்தது. .சுவாமிஜியும்
கல்வி புகட்டுவதையே அனைத்தினும் மிக உயர்ந்த
பணியாகச் சொல்கிறார்.
சுவாமிஜியின்
வாழ்க்கையையும் பாரதத்தின் வரலாற்றையும் புரட்டிப்போட்ட கன்யாகுமரித் தவத்தை ஒட்டி
சுவாமிஜி வெளியிட்ட சில கருத்துகள்:
”பிறருக்கு
நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் படைத்த பற்றற்ற துறவிகள் கிராமம் கிராமமாகச் சென்று
கல்வியைப் பரப்ப வேண்டும். வாய்மொழிக் கல்வி மூலம் மிகவும் தாழ்த்தப்பட்டோர் உட்பட
அனைவரின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த வேண்டும்.. .ஏழைகள் பள்ளிக்கூடம் செல்லக்கூட
வசதியில்லாத பரம ஏழைகளாக இருக்கிறார்கள். முகமது மலையை நோக்கி வராதபோது மலைதான் முகமதை
நோக்கி வரவேண்டும்..”
முக்கியமாக
தரமான கல்வியை ஏழை எளியவர்களுக்கு இலவசமாக வழங்கும் தலையாய பணியில் சேவாலயா தன்னை ஈடுபடுத்திக்
கொண்டுள்ளது.
No comments:
Post a Comment