Tuesday, 30 December 2025

பொறந்த ஊரை..

 பொறந்த ஊரை நெனச்சுப் பாத்து

பொறப்பட்டு வாங்க!

(கொத்தமங்கலம் சுப்புவின் பழைய பாடல் ஒன்றைத் தழுவி எழுதியது.)

பொறந்த ஊரை நெனைச்சுப் பாத்து

பொறப்பட்டு வாங்க!

மறந்து போன ஜனத்தையெல்லாம்

வந்து பாருங்க!

கூவத்தூரு சொகுசு எல்லாம்

கலெஞ்சு போச்சுங்க!

பாவப்பட்ட மக்களையும் 

பாக்க வாருங்க!

நேரத்திலே தேர்தல் வரும்

சீக்கிரம் வாங்க!

ஆரத்தியைக் கரெச்சு வெச்சுக்

காத்திருக்கோங்க!


புரிவதில்லை காரணங்கள்

 புரியாத காரணங்கள்

(கவிதை உறவு)

ஆக்ரோஷம் மிக்கஒரு

அலைகடலின் மீதெழுந்து

ஆத்திரமாய் வருகிறது

அடர்நுரைகள் பலசேர்ந்து!

ஆனாலும் கரைதொட்ட

 அரைநொடியில்  அது ஓய்ந்து

அமைதியுடன் பின்வாங்கி

ஆழ்கடலில் சேர்கிறது!

என்னபயன் மீண்டுமது

இன்னுமொரு அலையாகும்

சொன்ன அதே ஆக்ரோஷம்.

தொடல்கரையை;ஓய்வடைதல்!

பிரஞ்சமெனும் கடல்முதுகில்

பிறைக்கிளிஞ்சல் நாமெல்லாம்!

பிறந்தோய்ந்து போவதற்குப் 

புரிவதில்லை காரணங்கள்!


பாரதி ஆக்கிய கவிதை

 பாரதி ஆக்கிய கவிதை

1951 செப்டம்பர் 11ம்தேதி சிவாஜி இதழில் வெளியான என் முதல் பிரசுரம்

நான்காம் படிவம் (9ம் வகுப்பு) படித்துக்கொண்டிருந்தபோது எழுதியது .சொற்குற்றம் பொருட்குற்றம் பொறுத்தருள்க!)

அடிமை வாழ்வில் திளைத்த மாந்தர் ஆண்மை பெற்று எழுந்திட,

துடித்து நின்று வீறுகொண்டு தூய்மை பெற்றெதிர்த்திட

கொடுமை செய்த வெள்ளையர்கள் கதிகலங்கி நடுங்கிட

விடுதலையின் வேட்கை பொங்கும் வீரக்கவிதை ஆக்கினாய்!

நெஞ்சகத்தில் ஈரமற்ற வஞ்சகர்கள் வீழவும்

பஞ்சமின்றி வாழமக்கள் பாடு பட்டுழைக்கவும்

தொழில்களோங்கி நாட்டில்மக்கள் திறமைபெற்று வாழவும்

எழில்மிகுந்த கவிதைகூறி இன்பமூட்டி விட்டனை!

தமிழகத்தின் பண்டைவீர உணர்வுதன்னை மீண்டுமே

நமக்களித்துப் புகழ்பெறவும் நலமுறவும் ஊக்கிய

இன்பக்கவிஞன் பாரதியின் இலக்கியங்கள் போற்றியே

அன்புகொண்டு யாவரும் அகமகிழ்ந்து வாழ்குவோம்!

Monday, 29 December 2025

பாதை ஒன்றில்..

 எப்படி நான் மறந்தேன்?




பாதை ஒன்றில் பரபரப்பாகப் பயணம் புறப்பட்டேன்! 

பாதி வழியில் திடுமெனநின்றேன்; எங்கே போகின்றேன்?

ஏதோ ஒன்றை நோக்கித்தானே  இவ்வழி நடக்கின்றேன்?

ஏதது என்பது ஞாபகம்இல்லை; எப்படி நான்மறந்தேன்?




வழியில் பலபல கோலகலங்கள்! வாண வெடிச்சப்தம்!

குழப்பக் குரல்கள் கூச்சல்நெரிசல் ஆங்காங் கிருக்கின்ற!!

விழவில் தவறிய குழந்தையைப்போலே அழுது தவிக்கின்றேன்!

“அழுகையை நிறுத்து; கையைப்பிடி”என ஆரிங் கழைப்பார்கள்?




வந்த வழியைத் திரும்பிப்பார்த்தால் கலக்கம் மலிகிறது!

எந்த இடத்தில் துவங்கியபயணம் என்பதும் மறந்தாச்சு!

சொந்த இடமென் றொன்றுஇருக்கணும்; அதுதான் தெரியவிலை!

நொந்து தவிக்கும் மனதுக்கமைதி எப்படிக் கிடைத்திடுமோ?


நெருடல்

 நெருடல்


 நெஞ்சுக்குள் ஏதொன்றோ 

நெருடிக்கொண்டிருக்கிறது.

என்னவென்றே தெரியாமல்

எனக்குள்ளே பரிதவிப்பு!

நுட்பமனச் சிக்கெடுத்து

நுனிகாண முயல்கின்றேன்!

சிக்கல் மிகச் சிக்குண்டு

சித்தமிகச் சோர்கிறது!

முன் ஜென்ம நித்திரையில்

முடியாத கனவொன்று

அடிமனத்தின் ஆழத்தை

அசக்கிவரப் பார்க்கிறதா?

என்னுள்ளே மூண்டு எழும்

இன்கவிதைக் கனல் ஒன்று

நெஞ்சைப் பிளந்தெழும்பி

நர்த்தமிடத் துடிக்கிறதா?

இனி நிகழ இருக்கின்ற

இன்னலுக்கு முன் நிழலாய்ச்

சோகம் ததும்புமொரு

சேதிசொல்ல வருகிறதா?

 நெஞ்சுக்குள் ஏதொன்றோ 

நெருடிக்கொண்டிருக்கிறது!

Sunday, 28 December 2025

நாவசைத்துச் சுட்ட வடு

 நாவசைத்துச் சுட்டவடு ஆறாது என்றுசெந்

நாப்போதான் சொல்லிவைத்தான்!

ஏவிவிட்ட நெஞ்சகமும் இழுக்குரைத்த தீநாக்கும்

எரிவதனைச் சொல்லவிலையே!

பூவனைய மனசுகளைப் புண்படுத்தி நானுரைத்த

புன்மொழிகள் நெஞ்சுசுடுமே!

தாவி இங்கு மீண்டுவந்து பிரம்மாஸ்திரமாகத்

தாக்கியெனைக் கொல்லவருமே!

Saturday, 27 December 2025

நரேந்திரரின் வீர உரை

                        நரேந்திரனின் வீர உரை

நாட்டினைக்காக்க நமக்கிறைஅளித்த

 நரேந்திரனின் வீரவுரை

பாட்டினில் விரிக்கும் பாங்கறியேன் எனின்

 பரிசோதித்துப் பார்க்கின்றேன்! 

பதினோராயிரம் அடி உயரத்தில் 

பாரதம் காக்கப் புறப்பட்டீர்!

இதயத்துறுதி இமயத்தினும் மிக

இன்னும் மிகமிக மேலதிகம்!

நெஞ்சு நிமிர்த்தி நிற்கும் பாரத

நேசம் உரிய வீரர்களே!

பஞ்சின் மெல்லடிப் பாவையர் அல்லாப்

பாரதம் காக்கும் படை மகளீர்!

தீக்கனல் தெறிக்கும் காய்சினம் கண்டு

தீயவர் அஞ்சித் துடிக்கின்றார்!

பார்க்கெலாம் நீர் ஓர் சேதியைச் சொன்னீர்,

பாரதபூமி விலைக்கில்லை!

சின்னக்கண்ணன் வேய்ங்குழல் கீதம்

சிலிர்ப்பை அளிக்கும் சாந்தி தரும்!

அன்னைக்கே ஒரு தீங்கு நேர்ந்திடில்

அவன்கைச் சக்கரம் சுழன்றுவரும்! 

சிந்தனைத்தெளிவுவீரமும் மானமும் 

செறுகளத் திறமை இவை சொன்ன

செந்தமிழ்ப்புலவன் திருவள்ளுவனின்

சீரியமொழியின் திருவுரு நீர்!

இந்தியம் காக்க இன்னுயிர் ஈந்த

இனிய நம் வீர்ர் போர்க்களத்தில்

சிந்திய ரத்தம் வீண்போகாது

சிரத்தினைத் தாழ்த்திச் சூளுரைப்போம்!

புண்ணியபாரத பூமியைக்காக்கப்

புரிந்திடும் உங்கள் சாகசங்கள்

விண்ணினும் உயர்ந்த; உங்கள் புகழ்

வீடுகள் தோறும் கதை சொல்லும்!

நாடுபிடிக்க நினைந்து முனைந்தவர்

நாசமடைந்தது வரலாறு!

பீடு நடையிடும் வீர்ர்களே!யாம்

பெருமிதம் கொண்டோம் உமைக்கண்டு!

அச்சம் இன்றி அனைவரும் வாழவும்

அன்னைபூமி நலம்பெறவும்

துச்சம் என்றுயிரைத் துணிந்தவர் உமது

தூயகதை ஓர் இதிகாசம்!


தீபம் வெண்பா

 தீபம் வெண்பா  (ஆண்டு?)

பெட்டிக்கோட் ப்ராவோடு பெண்கள் சதையழகைக்

கட்டுப்பாடின்றிக் கதைக்கின்றோம்-மட்டரகம்

நாசுக்கே இல்லாமல் நம் எழுத்து தர்மத்தைக்

காசுக்கே விற்றுவிட்டோம் காண்.


திரும்பிப் பார்க்கிறேன்

 திருப்பிப் பார்க்கிறேன்!


எழுதிய தாளைத் திருப்பிப் பார்க்கிறேன்;

பிழைகள் எத்தனை! விட்டவை எத்தனை!

படித்துப் பார்த்துப் பண்ணிய தவறுகள்

அடித்துத் திருத்த அவகாச மில்லை!

கணகண கணவெனச் சேவகன் அங்கே

 மணியை அடிக்கக் காத்து நிற்கின்றான்!!

எழுத்தை நிறுத்து! ஏடுகள் கோத்திடு!

கழுத்தின் பின்னே குரல் கேட்கிறது!

படித்தது, பயின்றது எல்லாம் தப்பு!

அடுத்த  தேர்வுக்கு ஆரம் பிக்கலாம்!

கூச்சல் போட்ட குப்புச்சாமி

 கூச்சல் போட்ட குப்புச்சாமி.

மீட்டருக்கு மேலே மிகவும் ஜாஸ்தி

ஆட்டோக்காரன் கேட்கிறான் என்று

ஒட்டாதென்று உரக்கக் கூவிக்

கூச்சல் போட்ட குப்புச்சாமி

வாய் திறக்காமல்ஆயிரம் தந்து

அஜய் படத்தை எஞ்சாய் செய்தார்,

கேட்ட பணத்தை நீட்டிக் கொடுத்து

பாப்கார்ன் வாங்கிச் சாப்பிட்டபடியே.

குமுதம் வெண்பா

 குமுதம் வெண்பா—(புன்பா) (தளை தட்டியது) -1960?

செக்ஸ்கதைகள் ஸ்டார்சொல்லும் செல்லரித்த ஜோக்குகளின்

மிக்ஸ்ர்தான் என்றும்மைப் பாரறியும்-அக்சூ!

குமுதமா இன்றைக்குக் கூட்டியது பாவரங்கு?

தமிழரசி செய்த தவம்./


Wednesday, 24 December 2025

சாகப்பிறந்த வாழ்வு

 சாகப் பிறந்த வாழ்வு

(சுதந்திரம்-1957)

வாழ்க்கை வெறும் நெடுந்தொலைவுப்

பாலைவனம்;அதன்வழியில்

பாழ்த்ததுளி நம்பிக்கைப்

      பொய்யுருவாம் கானல்நீர்!


கண்காணா நெடுந்தொலைவில்

கற்பனையாம் இன்பநகர்;

புண்பட்டுச் சாகின்றோம்;

புழுதிமணல் துன்பத்தில்.


எண்ணமிடும் இன்பமெனும்

இலட்சியத்தை அடைவதற்குள்

கண்மறைக்கும் துயர்க்குன்று,

கவலையெனும் பலகடல்கள்!


உல்கமொரு பெருமாயை

உன்மத்த இதயத்தின்

நிலைகாணும் கனவு வெளி;

நிஜ இன்பம் எங்குளது?

அழுதுலகில் பிறந்தோம் நாம்!

அழுதுகொண்டே வாழ்கின்றோம்1

அழுகையுடன் சாம்பரென

அவதியெனும் பேருலகில்


பிணிகள் நரை மூப்பாகிப்

பயங்கரமாம் மரணத்தில்

அணுவொன்றிக் கலந்திடுவோம்;

அகம் மகிழ ஏது இடம்?





 

Monday, 22 December 2025

காந்தியின் கனவுச்சிற்றில்

 காந்தியின் கனவுச் சிற்றில்


மனதுக்குள் கனவாக மங்கலெனவே இருக்கும்

எனதருமைக் கற்பனையின் கிராமத்தைக் கூறுகிறேன்!

அறிவார்ந்த குடிமக்கள் அதனின்கண் வதிவார்கள்

உறுதியுடன் உலகினையே எதிர்த்து நிற்கும் துணிவுடையார்!

இருளுக்குள் குப்பைக்குள் விலங்குகள்போல் மூழ்கியிரார்

இருபாலர் பேதமின்றி எல்லார்க்கும் மனத்திட்பம்!

நோய் நொடிகள் இருக்காது; நொந்தவர்கள் எவருமிலர்!

ஓய்ந்திருப்பார் கிடையாது;உடலுழைப்பார் யாவருமே!

செல்வச் செழிப்பில்சிலர் புரண்டு மகிழ்ந்திருக்க

அல்லல்பட்டுபலர் அழுதிருக்கும் அவலமிலை!

போகவரப் பயணிக்கப் பாதைகள்;வாகனங்கள்!

ஆக இவை கிராமத்து அடித்தளத்துக் கட்டமைப்பு!

ஆனந்த சுதந்திரத்தில் அமைந்துவிட வாய்ப்பிருக்கு!

கனவுச் சிற்றிலிதைக் கால்மிதித்துத் துவைக்காதீர்!

Sunday, 21 December 2025

கதவுகள் சாத்தி..

 கதவுகள் சாத்தி ஒரு நாள் இரவில்

கடவுளிடத்தில் கைகளைக் கூப்பி

சிதறிய மனத்தை ஒன்றாய்க்கூட்டி

சிலபல வார்த்தைகள் செப்பிடலுற்றேன்.

சாகும் வேளையில் சங்கரா என்பதோ?

சற்றே எனக்குச் செவிசாய் என்றேன்.

நோகும் மனத்தின் நினைவுகள் எல்லாம்

நுவன்றிட முனைந்தேன்; வார்த்தைக்குவியல்!

கழிந்த நாட்களின் தவறுகள், பிழைகள்

கழிவிரக்கமாய்க் கொட்டிட முனைந்தேன்!

சிந்தையில் உறுதி சிறிதும் இல்லாமல்

சின்னவை, பெரியவை,முன்னது,பின்னது

வந்தது, வருவது, வராமற்போனது

வாட்டிடும் கவலை தினம் பயிர் செய்தேன்!

நாவினின்று வருகிற வார்த்தை

நல்லது கெட்டது என்றறியாமல்

பூவினைப்போன்ற மனங்கள் பலவைப்

புண்ணாய்க்கொத்திக் குதறியதுண்டு!

அயலான் சிறப்பில் அழுக்காறாக

அலமந்தலமந் தயர்ந்ததுமுண்டு!

நயம்படப்பேசுதல் அறியா நாவால்

நல்லவர் மனங்களை நடுங்கவைத்துள்ளேன்!

சினத்தின்தாகம் ஆசையின்வேகம்

சிந்தைகுழப்பிச் செயலறியாமல்

மனத்தால்வாயால் உடலால் செய்த

மன்னிப்பியலாப் பலபல பாவம்!

ஆண்டுகள் போக்கில் அனுபவம் மிகுந்து

அசட்டுத்தனங்கள் அறவே அகன்று

மீண்டு நான்வந்த வரலாறறிவாய்!

மீட்டவன் நீதான்! உயர்த்தியதுன் கரம்!

செய்தவினைகளின் பதிவுகள் வாசனை

சேரும் புதிய பிறவியைக்குலைக்குமா?

உய்ந்ததன் காரணம் மேலுமுயர்ந்து

உய்வதற்கான பாதை விரியுமா?

பார்த்தனின் நண்பன் பரமபுருடன்

பாங்காய் என்னெதிர் வந்தே தோன்றி

நேர்த்தியாய் என்னிடம் நெருங்கி வந்து,

நேரடியாகப் பதிலுரைக்காமல் 

நகைத்துப் பிரியமாய்ச் சொன்னது இதுவே!;

எப்படித்துவங்கிய இழி நிலையிருந்து

என்னமாய் இப்போ உயர்ந்து நிற்கின்றாய்!

செப்பிடு வித்தை அல்ல;உன்முயற்சி!

சீரிய மனத்தின் சாதனை என்றான்!

கைகொடுத்தவனைக் கும்பிட்டேன் என்

கலக்கம் நீங்கித் தெளிவுறலுற்றேன்!

கைகொடுத்தென்னைக் கைதூக்கியவன்

கையெடுத்தென்னை வாழ்த்திடுகின்றான்! 


Saturday, 20 December 2025

ஜீவன்பீமா

 எங்கள்   Jeevan Bima Enclave  விநாயகர் குறித்து இன்று காலையில் முகிழ்த்த சிறு கவிதை:

காப்பீட்டு ஒடுக்கத்தில் களிற்றுமுகன் வீற்றிருந்து

கருணைமழை பொழியுகின்றான்;

காப்பிட்டோம் வெள்ளியிலே சந்தனத்தால் மலராலே

மேனியினை நேர்த்திசெய்தோம்;

தோப்புக்கரணமிட்டுச் சிரம்குட்ட நகைசெய்து

தொந்தியினைக் குலுக்குகின்றான்!

கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து அவன்

குறைகளெலாம்  தீர்த்துவைப்பான்!

ஈனக்கும்பலே

 ஈனக்கும்பலே!

எல்லைகாக்கும் ராணுவத்தை

ஏசிப் பேசினோம்!

தொல்லைதரும் பகைவனது

தோளைத் தழுவினோம்!

நல்ல நாடு எதிரி நாடு

நாளும் கூவினோம்!

“இல்லை” என்று சாகசங்கள்

இழித்துப் பேசினோம்!

சீனத்தோடு தனித்துச் சென்று

சிரித்துப் பேசினோம்!

வானவழிப் போரில்காக்க

வாங்கும் ஆயுதம்

ஆனமட்டும் பழிகள் சொல்லி

அடக்கப் பார்த்துளோம்!

ஏனெதிரி தாக்கமாட்டான்

ஈனக்கும்பலே!


Friday, 19 December 2025

இசையமுது

 இசையமுது

சிவாஜி-1956

இங்கிதமாய்ப் பொங்கிவரும்

இன்னிசையைக் கேட்கின்றேன்;

எங்கிருந்து வருவதிது?

எழிலமுதைக் கூட்டுவதார்/


பாடல்வரித் தேவஒளி

பார்முழுதும் சோதிதரும்;

நாடுதொறும் பரந்தோடும்

  நாயக,நின் பாட்டினுயிர்!


நல்லருவி புனிதத்வ

நாதஇசை ஊற்றாகக்

கல்லெல்லாம் பொடியாக்கிக்

கானாறாய் ஓடிவிடும்!


பாடலிலே பங்குபெறப்

பாவிமனம் விழைகிறது!

கூடியுடன் நானிசைக்கக்

குரலுக்கு என்செய்வேன்?

பண்ணிசைக்க எண்ணுகிறேன்;

பாடுகிறேன்;சீவனிலை;

புண்படிந்த நெஞ்சத்தால்

புலம்புகிறேன்; பாட்டிதுவா?


தெவிட்டாத நின் அமுதத்

தேனிசையாம் வலைக்குள்ளே

கவிதையிலே இதயத்தைக்

கைப்பற்றி விட்டாய் நீ!

(தாகூரைத் தழுவியது)

!


Wednesday, 17 December 2025

ஆலயா..

 ஆலயா எம்சீயார் ராம்ராஜார்  வேட்டிக்குச்

சால விளம்பரங்கள் செய்கின்றார்-காலத்தை

வென்று நிலைக்கவென வேட்டி தினமென்பார்

என்றும்நான்  வேட்டியே தான்.

ஓதப் புறப்பட்டார்..

 ஓதப் புறப்பட்டார் வேதத்தை!

ஆயிரம் ஐந்நூற்றுக் கற்றைகள்-பே(ர்)

ஆசையோ டடுக்கிப் பதுக்கினர்!

நாயகன் ஆணையைக் கேட்டதும்

நடுங்கிக் கலங்கித் துடித்தனர்!

தீயினில் ஆகுதி செய்தனர்;-சிலர்

திருப்பதி உண்டியல் சேர்த்தனர்!

தூயநீர்க் கங்கை நீராட்டினர்;-சிலர்

தூக்கி எறிந்தனர் குப்பையில்!

கள்ளப் பணத்துக்கு நாணியே

கண்ணைப் புதைத்தவர் தேம்பினார்!

வள்ளலெனச் சிலர் மாறினர்!

வாரி வழங்கினர் ஏழைக்கு!-மழை

வெள்ளத்திலே நனை ஆடுகள்-கண்டு

வேதனை வார்த்தைகள் கொட்டினர்!

உள்ளத்தை விற்றிட்ட சாத்தான்கள்

ஓதப் புறப்பட்டார் வேதத்தை!

 



Tuesday, 16 December 2025

அன்னையே உன்னிடத்தில்...

 அன்னையேநான் உன்னிடத்தில் சிலவார்த்தை பேசிடணும்;

அவகாசம் தரமுடியுமா?

அன்னமுடன் சொன்னமுமாய் அன்புமிக்க சந்ததியும்

அதிலேதும் குறைச்சலில்லை!

சொன்னபடிக் கேட்கின்ற உடல்நலமும் அறிவுநலம்

சீரான  வாழ்க்கையுண்டு!

என்னதுதான் குறையென்று ஏனிந்தப் பாழ்மனதில்

ஏதேதோ ஆரவாரம்?


சின்னமனச் செருக்காலே சீற்றத்தால் ஆசையினால்

செய்துவிட்ட பாவமதிகம்!

இன்னொருவ ராயிருந்தால் இழித்துரைத்துப் போயிருப்பேன்;

இதுஎனக்கு நன்குதெரியும்!

என்னவொரு காரணத்தால் என்னிடத்தில் சினவாமல்

காருண்யம் காட்டுகின்றாய்?

கன்னல்மொழிக் காஞ்சிமுனி சொன்னதுபோல் இதுவுன்றன்

அவ்யாஜ கருணையன்றோ?


பட்டகட்டை போலிருக்கப் பரமனருள் நிறைந்திருக்கப்

பலவழிகள் சொல்லுகின்றார்!

நிட்டையுடன் நியமங்கள் சாத்திரங்கள் ஜெபதபங்கள்

நேரியதோர் குருபார்வையாய்!

கெட்டமனப் பாவியற்கு ஒருசிறிதும் இவற்றிலெலாம்

நாட்டமில்லை; என்னசெய்வேன்?

திட்டமிட்டுத் திடமாக உன்பாதம் சரணடைந்தேன்;

எனைநீதான் ஏற்கவேணும்!


Monday, 15 December 2025

அடையாளம்

 அடையாளம்


சின்ன சின்ன தொழில் செய்து

சில்லறையாய்ச் சம்பாதி.

அண்ணாச்சி கடைதனிலே

அன்றாடம் பொருள் வாங்கு.

மிச்சமுள்ள சேமிப்பை

முடிச்சுகளாய்க் கட்டி வை.

பாங்க் அக்கவுண்ட்,பான் நம்பர் 

பாவமென விலக்கிவிடு.

தகவல் தொடர்புக்குத்

தபால் கார்டு வைத்துக்கொள்.

குறிப்புகள் வேண்டுமெனில்

கன்னிமாரா நூலகம் போ.

நண்பருடன் அளாவுதற்கு

நடைபயணம் மேற்கொள்ளு.

கூகுளும் ஃபேஸ்புக்கும் 

கூடவே கூடாது.

ஆதார் கார்டா?

அப் பேச்சே கூடாது!

வோட்டர் லிஸ்ட் எடுக்கவந்தால்

ஓடி ஒளிந்து கொள்ளு!

அப்பாடா! உன்னுடைய

அந்தரங்கம் பத்திரமே!

(அடையாளமும் போகும்.

அதனாலே என்னாச்சு!)


அச்சம் தவிர்

 அச்சம் தவிர்

டி.எஸ்.வேங்கட ரமணி


அச்சம் தவிர்ப்பதன் அருமையை விளக்கி

நச்சென ஒருகதை நவின்றனன் பாரதி.


ஊரெலாம் கூடுமோர் உவகைத் திருவிழா.

காரெனக் கடுகிச்  செல்கிறாள் காலரா!

இடைமறித் தோர்முனி இவளைக் கேட்கிறான்

அடஉனக் கேனிந்த அவசரம் என்கிறான்.

“வெள்ளமாய்த் திரண்டனர்; வேணளவுக்குக்

கொள்ளை நோயினால் கொல்லச் செல்கிறேன்.”

கரங்களைக் குவித்துக் கனிவுடன், வேண்டாம்;

தரமன்று உன்செயல், தவிர்த்திடு என்கிறான்!

கடமை இதுவெனக் கடவுள் விதித்ததைத்

தடுத்தல் உமக்குத் தகவிலை என்கிறாள்!

முனிவன் இறைஞ்ச, முனகிக்கொண்டே,

உமக்காக,நான் ஒருநூறு பேரையே

கொள்வேன்;இதனில் கூட்டிட மாட்டேன்

கொள்கஎன் சத்தியம் எனச்சொலி விரைந்தனள்!

பல்லாயிரக் கணக்குயிர் பறிக்கப் பட்டன:

சொல்லொணாச் சீற்றம் கொண்டனன் முனிவன்!

திரும்பிவந்த காலராப்பெண்ணைச்

சரியா நீசெய்த காரியம் என்றான்1

மெல்ல நகைத்துச் சொல்லினள் காலரா!

சொல்லினை மீறிடல் சிறிதும் இல்லையே

 நானுயிர் கவர்ந்தது நூறுபேரையே!

ஏனையோர் மாண்டது அச்சத்தால் அரோ!