அச்சம் தவிர்
டி.எஸ்.வேங்கட ரமணி
அச்சம் தவிர்ப்பதன் அருமையை விளக்கி
நச்சென ஒருகதை நவின்றனன் பாரதி.
ஊரெலாம் கூடுமோர் உவகைத் திருவிழா.
காரெனக் கடுகிச் செல்கிறாள் காலரா!
இடைமறித் தோர்முனி இவளைக் கேட்கிறான்
அடஉனக் கேனிந்த அவசரம் என்கிறான்.
“வெள்ளமாய்த் திரண்டனர்; வேணளவுக்குக்
கொள்ளை நோயினால் கொல்லச் செல்கிறேன்.”
கரங்களைக் குவித்துக் கனிவுடன், வேண்டாம்;
தரமன்று உன்செயல், தவிர்த்திடு என்கிறான்!
கடமை இதுவெனக் கடவுள் விதித்ததைத்
தடுத்தல் உமக்குத் தகவிலை என்கிறாள்!
முனிவன் இறைஞ்ச, முனகிக்கொண்டே,
உமக்காக,நான் ஒருநூறு பேரையே
கொள்வேன்;இதனில் கூட்டிட மாட்டேன்
கொள்கஎன் சத்தியம் எனச்சொலி விரைந்தனள்!
பல்லாயிரக் கணக்குயிர் பறிக்கப் பட்டன:
சொல்லொணாச் சீற்றம் கொண்டனன் முனிவன்!
திரும்பிவந்த காலராப்பெண்ணைச்
சரியா நீசெய்த காரியம் என்றான்1
மெல்ல நகைத்துச் சொல்லினள் காலரா!
சொல்லினை மீறிடல் சிறிதும் இல்லையே
நானுயிர் கவர்ந்தது நூறுபேரையே!
ஏனையோர் மாண்டது அச்சத்தால் அரோ!
No comments:
Post a Comment