Monday, 22 December 2025

காந்தியின் கனவுச்சிற்றில்

 காந்தியின் கனவுச் சிற்றில்


மனதுக்குள் கனவாக மங்கலெனவே இருக்கும்

எனதருமைக் கற்பனையின் கிராமத்தைக் கூறுகிறேன்!

அறிவார்ந்த குடிமக்கள் அதனின்கண் வதிவார்கள்

உறுதியுடன் உலகினையே எதிர்த்து நிற்கும் துணிவுடையார்!

இருளுக்குள் குப்பைக்குள் விலங்குகள்போல் மூழ்கியிரார்

இருபாலர் பேதமின்றி எல்லார்க்கும் மனத்திட்பம்!

நோய் நொடிகள் இருக்காது; நொந்தவர்கள் எவருமிலர்!

ஓய்ந்திருப்பார் கிடையாது;உடலுழைப்பார் யாவருமே!

செல்வச் செழிப்பில்சிலர் புரண்டு மகிழ்ந்திருக்க

அல்லல்பட்டுபலர் அழுதிருக்கும் அவலமிலை!

போகவரப் பயணிக்கப் பாதைகள்;வாகனங்கள்!

ஆக இவை கிராமத்து அடித்தளத்துக் கட்டமைப்பு!

ஆனந்த சுதந்திரத்தில் அமைந்துவிட வாய்ப்பிருக்கு!

கனவுச் சிற்றிலிதைக் கால்மிதித்துத் துவைக்காதீர்!

No comments:

Post a Comment