சாகப் பிறந்த வாழ்வு
(சுதந்திரம்-1957)
வாழ்க்கை வெறும் நெடுந்தொலைவுப்
பாலைவனம்;அதன்வழியில்
பாழ்த்ததுளி நம்பிக்கைப்
பொய்யுருவாம் கானல்நீர்!
கண்காணா நெடுந்தொலைவில்
கற்பனையாம் இன்பநகர்;
புண்பட்டுச் சாகின்றோம்;
புழுதிமணல் துன்பத்தில்.
எண்ணமிடும் இன்பமெனும்
இலட்சியத்தை அடைவதற்குள்
கண்மறைக்கும் துயர்க்குன்று,
கவலையெனும் பலகடல்கள்!
உல்கமொரு பெருமாயை
உன்மத்த இதயத்தின்
நிலைகாணும் கனவு வெளி;
நிஜ இன்பம் எங்குளது?
அழுதுலகில் பிறந்தோம் நாம்!
அழுதுகொண்டே வாழ்கின்றோம்1
அழுகையுடன் சாம்பரென
அவதியெனும் பேருலகில்
பிணிகள் நரை மூப்பாகிப்
பயங்கரமாம் மரணத்தில்
அணுவொன்றிக் கலந்திடுவோம்;
அகம் மகிழ ஏது இடம்?
No comments:
Post a Comment