Sunday, 21 December 2025

கதவுகள் சாத்தி..

 கதவுகள் சாத்தி ஒரு நாள் இரவில்

கடவுளிடத்தில் கைகளைக் கூப்பி

சிதறிய மனத்தை ஒன்றாய்க்கூட்டி

சிலபல வார்த்தைகள் செப்பிடலுற்றேன்.

சாகும் வேளையில் சங்கரா என்பதோ?

சற்றே எனக்குச் செவிசாய் என்றேன்.

நோகும் மனத்தின் நினைவுகள் எல்லாம்

நுவன்றிட முனைந்தேன்; வார்த்தைக்குவியல்!

கழிந்த நாட்களின் தவறுகள், பிழைகள்

கழிவிரக்கமாய்க் கொட்டிட முனைந்தேன்!

சிந்தையில் உறுதி சிறிதும் இல்லாமல்

சின்னவை, பெரியவை,முன்னது,பின்னது

வந்தது, வருவது, வராமற்போனது

வாட்டிடும் கவலை தினம் பயிர் செய்தேன்!

நாவினின்று வருகிற வார்த்தை

நல்லது கெட்டது என்றறியாமல்

பூவினைப்போன்ற மனங்கள் பலவைப்

புண்ணாய்க்கொத்திக் குதறியதுண்டு!

அயலான் சிறப்பில் அழுக்காறாக

அலமந்தலமந் தயர்ந்ததுமுண்டு!

நயம்படப்பேசுதல் அறியா நாவால்

நல்லவர் மனங்களை நடுங்கவைத்துள்ளேன்!

சினத்தின்தாகம் ஆசையின்வேகம்

சிந்தைகுழப்பிச் செயலறியாமல்

மனத்தால்வாயால் உடலால் செய்த

மன்னிப்பியலாப் பலபல பாவம்!

ஆண்டுகள் போக்கில் அனுபவம் மிகுந்து

அசட்டுத்தனங்கள் அறவே அகன்று

மீண்டு நான்வந்த வரலாறறிவாய்!

மீட்டவன் நீதான்! உயர்த்தியதுன் கரம்!

செய்தவினைகளின் பதிவுகள் வாசனை

சேரும் புதிய பிறவியைக்குலைக்குமா?

உய்ந்ததன் காரணம் மேலுமுயர்ந்து

உய்வதற்கான பாதை விரியுமா?

பார்த்தனின் நண்பன் பரமபுருடன்

பாங்காய் என்னெதிர் வந்தே தோன்றி

நேர்த்தியாய் என்னிடம் நெருங்கி வந்து,

நேரடியாகப் பதிலுரைக்காமல் 

நகைத்துப் பிரியமாய்ச் சொன்னது இதுவே!;

எப்படித்துவங்கிய இழி நிலையிருந்து

என்னமாய் இப்போ உயர்ந்து நிற்கின்றாய்!

செப்பிடு வித்தை அல்ல;உன்முயற்சி!

சீரிய மனத்தின் சாதனை என்றான்!

கைகொடுத்தவனைக் கும்பிட்டேன் என்

கலக்கம் நீங்கித் தெளிவுறலுற்றேன்!

கைகொடுத்தென்னைக் கைதூக்கியவன்

கையெடுத்தென்னை வாழ்த்திடுகின்றான்! 


No comments:

Post a Comment