Monday, 29 December 2025

நெருடல்

 நெருடல்


 நெஞ்சுக்குள் ஏதொன்றோ 

நெருடிக்கொண்டிருக்கிறது.

என்னவென்றே தெரியாமல்

எனக்குள்ளே பரிதவிப்பு!

நுட்பமனச் சிக்கெடுத்து

நுனிகாண முயல்கின்றேன்!

சிக்கல் மிகச் சிக்குண்டு

சித்தமிகச் சோர்கிறது!

முன் ஜென்ம நித்திரையில்

முடியாத கனவொன்று

அடிமனத்தின் ஆழத்தை

அசக்கிவரப் பார்க்கிறதா?

என்னுள்ளே மூண்டு எழும்

இன்கவிதைக் கனல் ஒன்று

நெஞ்சைப் பிளந்தெழும்பி

நர்த்தமிடத் துடிக்கிறதா?

இனி நிகழ இருக்கின்ற

இன்னலுக்கு முன் நிழலாய்ச்

சோகம் ததும்புமொரு

சேதிசொல்ல வருகிறதா?

 நெஞ்சுக்குள் ஏதொன்றோ 

நெருடிக்கொண்டிருக்கிறது!

Sunday, 28 December 2025

நாவசைத்துச் சுட்ட வடு

 நாவசைத்துச் சுட்டவடு ஆறாது என்றுசெந்

நாப்போதான் சொல்லிவைத்தான்!

ஏவிவிட்ட நெஞ்சகமும் இழுக்குரைத்த தீநாக்கும்

எரிவதனைச் சொல்லவிலையே!

பூவனைய மனசுகளைப் புண்படுத்தி நானுரைத்த

புன்மொழிகள் நெஞ்சுசுடுமே!

தாவி இங்கு மீண்டுவந்து பிரம்மாஸ்திரமாகத்

தாக்கியெனைக் கொல்லவருமே!

Saturday, 27 December 2025

நரேந்திரரின் வீர உரை

                        நரேந்திரனின் வீர உரை

நாட்டினைக்காக்க நமக்கிறைஅளித்த

 நரேந்திரனின் வீரவுரை

பாட்டினில் விரிக்கும் பாங்கறியேன் எனின்

 பரிசோதித்துப் பார்க்கின்றேன்! 

பதினோராயிரம் அடி உயரத்தில் 

பாரதம் காக்கப் புறப்பட்டீர்!

இதயத்துறுதி இமயத்தினும் மிக

இன்னும் மிகமிக மேலதிகம்!

நெஞ்சு நிமிர்த்தி நிற்கும் பாரத

நேசம் உரிய வீரர்களே!

பஞ்சின் மெல்லடிப் பாவையர் அல்லாப்

பாரதம் காக்கும் படை மகளீர்!

தீக்கனல் தெறிக்கும் காய்சினம் கண்டு

தீயவர் அஞ்சித் துடிக்கின்றார்!

பார்க்கெலாம் நீர் ஓர் சேதியைச் சொன்னீர்,

பாரதபூமி விலைக்கில்லை!

சின்னக்கண்ணன் வேய்ங்குழல் கீதம்

சிலிர்ப்பை அளிக்கும் சாந்தி தரும்!

அன்னைக்கே ஒரு தீங்கு நேர்ந்திடில்

அவன்கைச் சக்கரம் சுழன்றுவரும்! 

சிந்தனைத்தெளிவுவீரமும் மானமும் 

செறுகளத் திறமை இவை சொன்ன

செந்தமிழ்ப்புலவன் திருவள்ளுவனின்

சீரியமொழியின் திருவுரு நீர்!

இந்தியம் காக்க இன்னுயிர் ஈந்த

இனிய நம் வீர்ர் போர்க்களத்தில்

சிந்திய ரத்தம் வீண்போகாது

சிரத்தினைத் தாழ்த்திச் சூளுரைப்போம்!

புண்ணியபாரத பூமியைக்காக்கப்

புரிந்திடும் உங்கள் சாகசங்கள்

விண்ணினும் உயர்ந்த; உங்கள் புகழ்

வீடுகள் தோறும் கதை சொல்லும்!

நாடுபிடிக்க நினைந்து முனைந்தவர்

நாசமடைந்தது வரலாறு!

பீடு நடையிடும் வீர்ர்களே!யாம்

பெருமிதம் கொண்டோம் உமைக்கண்டு!

அச்சம் இன்றி அனைவரும் வாழவும்

அன்னைபூமி நலம்பெறவும்

துச்சம் என்றுயிரைத் துணிந்தவர் உமது

தூயகதை ஓர் இதிகாசம்!


தீபம் வெண்பா

 தீபம் வெண்பா  (ஆண்டு?)

பெட்டிக்கோட் ப்ராவோடு பெண்கள் சதையழகைக்

கட்டுப்பாடின்றிக் கதைக்கின்றோம்-மட்டரகம்

நாசுக்கே இல்லாமல் நம் எழுத்து தர்மத்தைக்

காசுக்கே விற்றுவிட்டோம் காண்.


திரும்பிப் பார்க்கிறேன்

 திருப்பிப் பார்க்கிறேன்!


எழுதிய தாளைத் திருப்பிப் பார்க்கிறேன்;

பிழைகள் எத்தனை! விட்டவை எத்தனை!

படித்துப் பார்த்துப் பண்ணிய தவறுகள்

அடித்துத் திருத்த அவகாச மில்லை!

கணகண கணவெனச் சேவகன் அங்கே

 மணியை அடிக்கக் காத்து நிற்கின்றான்!!

எழுத்தை நிறுத்து! ஏடுகள் கோத்திடு!

கழுத்தின் பின்னே குரல் கேட்கிறது!

படித்தது, பயின்றது எல்லாம் தப்பு!

அடுத்த  தேர்வுக்கு ஆரம் பிக்கலாம்!

கூச்சல் போட்ட குப்புச்சாமி

 கூச்சல் போட்ட குப்புச்சாமி.

மீட்டருக்கு மேலே மிகவும் ஜாஸ்தி

ஆட்டோக்காரன் கேட்கிறான் என்று

ஒட்டாதென்று உரக்கக் கூவிக்

கூச்சல் போட்ட குப்புச்சாமி

வாய் திறக்காமல்ஆயிரம் தந்து

அஜய் படத்தை எஞ்சாய் செய்தார்,

கேட்ட பணத்தை நீட்டிக் கொடுத்து

பாப்கார்ன் வாங்கிச் சாப்பிட்டபடியே.

குமுதம் வெண்பா

 குமுதம் வெண்பா—(புன்பா) (தளை தட்டியது) -1960?

செக்ஸ்கதைகள் ஸ்டார்சொல்லும் செல்லரித்த ஜோக்குகளின்

மிக்ஸ்ர்தான் என்றும்மைப் பாரறியும்-அக்சூ!

குமுதமா இன்றைக்குக் கூட்டியது பாவரங்கு?

தமிழரசி செய்த தவம்./