Monday, 12 January 2026

சாரதா தேவி..

 மன  அமைதிக்கு அன்னை சாரதா தேவி சொல்லும் வழி…


அன்னை சாரதா தேவியின் உபதேசங்களின் பிழிந்தெடுத்த சாரமாக ஒன்றைச் சொல்லலாம். பிறர் மீது குற்றம் காண்பதைத் தவிர்க்க வேண்டும். இது ஆன்மிக முன்னேற்றத்துக்கு உதவும் என்பது மட்டுமல்லாமல் சிறந்த வாழ்வியல் தத்துவமும் ஆகும். நமது மன அமைதிக்கும் எடுத்துக்கொண்ட பணியை எந்தவித மன உளைச்சலும் இல்லாமல் சிறப்பாகச் செய்வதற்கும் இதுவே வழியாகும்.


நாம் ஏன் பிறர் மீது குற்றம் சொல்கிறோம்? நாம் முன்னெடுத்துச் செய்யும் பணியில் சில இடைஞ்சல்கள் வருகின்றன. சில நேரங்களில் தோல்வியே வந்து சேர்கிறது. அந்த நேரங்களில் தோல்விக்குக் காரணம் காட்ட யாரோ ஒருவர் தேவைப்படுகிறார். (நம்மைத்தவிர.) முதலில் நாம் என்ன தவறு செய்தோம் என்று சிந்திப்பதுதானே அறிவுடைமை?  அப்போதுதானே நாம் அமைதியாகச் சிந்தித்து, சரிவரச் செயல்பட்டு, மற்றவர்களையும் தவறின்றி வழி நடத்த முடியும்? பொறுப்பை உன் தோள்களில் சுமத்திக்கொள் என்றுதானே சுவாமிஜி நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்?


சில நேரங்களில் ஏதோ ஒரு காரணத்தால் யாரோ ஒருவரை நமக்குப் பிடிக்காமல் போகிறது.(சின்ன வயசில் நம்மைத் துன்புறுத்திய ஆசிரியரின் மூக்கு போல இவர் மூக்கும் நீளமாக இருக்கிறது என்பதும் ஓர் ஆழ்மனக் காரணமாக இருக்கலாம்.)


இந்தக் குற்றம் காணும் சுபாவம்-மன நோயாகவே இருக்கலாம். (Pathological).அல்லது சுவாமிஜி சொல்வது போல் முன்னைப் பழவினைகளின் தொந்தமாக இருக்கலாம்!


எது எப்படி ஆயினும் இந்தக் குறைபாட்டை நாம் நீக்கிக் கொண்டே ஆக வேண்டும். இல்லாவிட்டால், வாசனை தீவிரமாகும். பழக்கம் அதிகரிக்கும்.  நமது பண்பைப் பாதிக்கும். சூழ் நிலையைத் துன்ப மயமாக்கும்.


எப்படிச் செய்யலாம் இதை? சுவாமிஜி சொல்கிறார்  ஏதாவது ஒரு கருத்தை எடுத்துக்கொண்டு தீவிரமாகப் பயிற்சி செய் என்று. ஏன் இந்தக் கருத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது? 

காஞ்சிப் பெரியவர்கள் மன அழுக்கு நீங்க வேண்டுமென்றுமென்று இறைவனிடம் பக்தியுடன் பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.. காந்திஜி ராம நாமத்தைச் சொல்கிறார்கள். அபிராமி பட்டர் நெஞ்சத்து அழுக்கையெல்லாம் அம்மை அருட்புனலால் துடைப்பாள் என் கிறார்.


அன்னை சாரதா, சுவாமிஜி, ஆன்மிகப் பெரியவர்கள், இறைவன் இவர்கள் அனைவரும் அழுக்கு நீக்கும் நம் முயற்சிக்கு உறுதுணையாக இருக்கட்டும். மனப்பூர்வமாக முயற்சி செய்தால் இறைவன் “மடிசெற்றுத் தான் முந்துறும்.” 

No comments:

Post a Comment