Saturday, 10 January 2026

நிர்வாணம்

 

நிர்வாணம் என்பது இதுவேயோ

நிர்வாணம் என்பது இதுவேயோ?

நிறை நிலை என்பது இதுவேயோ?

என்னால் நொந்தவர் பலரினையும்

இறைவன் முன்னால் சிந்தித்து

மன்னித்திடு நீ எனக்கேட்டு

மண்டியிட்டுப் பிரார்த்தித்தேன்!

என்னை நோக வைத்தவர்கள்

எல்லாரையும் நான் மன்னித்து

அன்புப்புனலால் நீராட்டி

ஆண்டவனிடத்தில் அர்ப்பித்தேன்!

கற்றுக்கற்றுப் புத்தியிலே

கற்றைச் சடையாய் மண்டியதை

ஒட்டச்சரைத்துப் புனலுக்குள்

ஓடம்விட்டுக் களிப்புற்றேன்!

கற்பதற்கென்று வைத்திருந்த

கட்டுக்கட்டு  நூல்களெலாம்

சற்றும் தயக்கம் இல்லாமல்

தழலில் இட்டுச் சிரித்திட்டேன்!

மண்டிக்கிடக்கும் புதராக

மனதில் நிறைந்த பாவவினை

புண்ணியம் என்ற புனைபெயரில்

பற்றுக்கட்டுக் கர்மவினை

முதுமை,இயலா உடற்குறைகள்

முணுமுணுமனத்துதவிப்பெல்லாம்

இதம் ந மம என்றோதி

யாக அக்னியில் பொசுக்கிட்டேன்!

கசக்கும் இனிக்கும்நினைவுகளைக்

களைந்து நதி நீர் ஓட்டத்தில்

கசகசகசவெனும் ஆடையுடன்

கரைத்து இயற்கைக்கர்ப்பணித்தேன்

நிர்வாணம் என்பது இதுவேயோ?

நிறை நிீலை என்பது இதுவேயோ?

சின்னக்குழந்தை ஆனேனோ?

சீவன்முக்தன் ஆனேனோ?

No comments:

Post a Comment