வாசித்ததை யோசிக்கிறேன்.
அற நெறிச் சமயம்.
மோ.க.காந்தி
9.தனி மனித ஒழுக்கம்.
நாம் இறை வெளிச்சத்தின் கதிர்களே. நாம் ஒவ்வொருவருமே இறைவனால் பிரத்தியேகமாகப் படைக்கப்பட்டவர்.... இறைப் படைப்பில் ஒன்று போல இரண்டாவது இல்லை. நமது தகுதிகள், திறமைகள், குறை நிறைகளுடன் வேறொருவர் இல்லை. எனவே இறைவன் படைப்பில் நமக்கென்று வகுக்கப்பட்ட பணியை, நமக்கே உரிய திறமையுடன் நிறைவாகச் செய்வதே நமது கடமை.
அற நெறிச் சமயம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். பிறர் நலம் பேண வேண்டும் பிறரைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்பதெல்லாம் சரியே. எனினும் நாம் நம்மைப்பற்றியும் சிந்திக்க வேண்டும். பிறரை மதிப்பதைப் போலவே நம்மை நாமே மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். தன்னைப் பற்றிய உயர்வான சுய பிம்பம் இல்லாதவன், பிறருக்கு உதவுவது என்பதெல்லாம் நடைமுறைச் சாத்தியமல்ல. நாம் ஒவ்வொருவருமே தெய்விகத்தின் குழந்தைகள். எல்லையற்ற ஆற்றல் நம்முள் புதைந்து கிடக்கிறது. அதை முழுமையாகக் கொண்டு வர முயல்வதே நம் ஒவ்வொருவரின் கடமை.
முதலில் நமது தனிப்பட்ட ஒழுக்கம் முக்கியம். என் அந்தரங்கத்தில் நான் எப்படி இருந்தால் என்ன, அது சமுதாயத்தை எப்படிப் பாதிக்கும் என்று கேட்பது சரியில்லை. நமது ஒழுக்கமின்மை நமது சிந்தனை, செயல்கள், சூழ் நிலைகளில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். தலைவன் தனிப்பட்ட முறையில் ஒழுக்கமின்றி இருந்தால், துதி பாடிகள் மட்டும் வேண்டுமானால் போற்றிப் பாடுவார்களே தவிர சமுதாயம் சீயென்றுதான் இகழும். இதில் மற்றொரு விஷயம் இருக்கிறது. கோடிக்கணக்கான மக்களின் மன நாயகன் எப்படி ஒழுகுகிறானோ, அதுவே அவன் தொண்டர்களுக்கும், பரவலாக ஒட்டு மொத்த சமுதாயத்துக்குமான நெறியாகி விடும்! மனிதப் பிறவியின் பொதுவான நோக்கம் ஒன்று இருக்கிறது. அது சமுதாயத்துக்குப் பயனுள்ளவராக வாழ்வது. இலட்சிய சமுதாயத்தை உருவாக்குவதில் ஒவ்வொருவரும் அவரவர்க்கேற்ற வகையில் பங்களிக்க முடியும்.
வணிகர் தாம் விற்பவற்றின் தரம் குறையாது பார்த்துக் கொள்ள வேண்டும். கொள்வதும் மிகை கொளாது,கொடுப்பதும் குறைகொடாது நேர்மையாக வணிகம் செய்ய வேண்டும். இதே போல வக்கீல்கள், மருத்துவர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் அனைவரும் அவரவர் பணியில் மக்களின் நலத்தை முன்னிறுத்திப் பணியாற்றினால் சமுதாய மாற்றம் நிகழக்கூடியதே. “நீ விரும்பும் மாற்றம் உன்னில் நிகழட்டும்.” ஊரே ஒழுங்கில்லாமல் இருக்கும் போது நான் மட்டும் ஒழுங்காயிருந்து என்ன பிரயோசனம் என்பது நமது சுய நலத்துக்கான சமாளிப்புக் கவசமே.
நிறைவாகச் சொல்ல வேண்டுமானால்—
யார் உண்மையாக நடந்து கொள்கிறானோ,
யாருக்கு எவரிடத்தும் துவேஷம் இல்லையோ,
யார் வேறு எவரையும் சுரண்டிப் பிழைக்கவில்லையோ,
யார் மனம் தூய்மையாய் இருக்கிறதோ-
அவனால்தான் மனிதகுல மேம்பாட்டுக்குப் பங்களிக்க முடியும்..
அவனே மகிழ்வானவன்.
அவனே செல்வந்தன்.
அவனே உண்மையான சமயவாதி
.( நிறையும்.)
No comments:
Post a Comment