Tuesday, 6 January 2026

அறநெறி

 


புத்தகச் சுருக்கம்.

அறம்சார் சமயம்.

மோ.க.காந்தி


1.அறிமுகம்

உலகில் பொய்யொழுக்கம் மலிந்து விட்டது. சமயம் சமயம் என்கிறார்கள். அதன் புற வடிவைக் கடைப்பிடிக்கிறார்களே அன்றி, அது கூறும் நீதிநெறி விதிகளை விட்டு விடுகிறார்கள். பலரும் என்ன சொல்லி விவாதிக்கிறார்கள்? சமயம் என்பது எல்லாம் உண்மையாய் இருந்தால் உலகில் ஏன் இத்தனை அக்கிரமமும் அநீதியும் நடக்கின்றன?  இந்த வாதம் தவறு என்பது கண்கூடு. வேலையை ஒழுங்காகச் செய்யாதவன், தனது கருவிகளைக் குறை சொல்வான் என்பது போலத்தான் இது. மதம் எல்லாம் மோசடி என்று சொல்லி விட்டு அது சொல்லும் அறநெறிகளைக் கடைப்பிடிக்காமல் நம் இஷ்டம் போல் நடந்துகொண்டு மதத்தைக் குறை சொன்னால் எப்படிச் சரியாகும்?

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அறிஞர்கள் சிலர் எல்லா மதத்தையும் ஆராய்ந்து அனைத்து மதங்கள் சொல்லும் நீதி நெறிகளையும் ஒன்று திரட்டினார்கள். அதற்கு அறநெறிச் சமயம் என்று பெயரிட்டார்கள். இந்தக் கொள்கையைக் கடைப்பிடிப்பவர்கள் தங்கள் தங்கள் மதத்திலேயே இருக்கலாம். குறிப்பாகத் தங்கள் மதம் சொல்லும் தர்ம தத்துவங்கள வழுவாமல் கடைப்பிடிக்க வேண்டும். மனிதன் மதங்கள் சொல்லும் அடிப்படை நீதிகளைக் கடைப்பிடிக்காமல் போனால், சமுதாயம் நிலைகுலைந்து இறுதியில் அழிந்துபோகும் என்பது கோட்பாடு.

இந்தக் கருத்தை வைத்து சால்ட்டர் என்ற கற்றறிந்த அமெரிக்கர் ஒரு நூலை எழுதினார் .இது 1889 ல் அமெரிக்கப் பகுத்தறிவுப் பத்திரிகையாளர் சங்கத்தால் வெளியிடப்பட்டது. அதைத் தழுவியதே காந்திஜி எழுதிய இந்தப் புத்தகம்.

(தொடரும்)


No comments:

Post a Comment