படித்ததில் புரிந்தது-2.
சர்வோதயம்
மோ.க.காந்தி
உண்மையின் வேர்கள்-1.
ஒரு குடும்பம். தாயார். குழந்தைகள். ஒரே ஒரு ரொட்டித்துண்டு இருக்கிறது. தாயார் குழந்தைகள் இரண்டு பக்கமுமே பட்டினி. தாயார் சாப்பிட்டால் குழந்தைகள் பசியோடு இருக்கும். குழந்தைகள் சாப்பிட்டால் தாயார் பட்டினியாய் வேலைக்குப் போக வேண்டியிருக்கும். ஆக, இரண்டு பக்க நலன்களும் வேறுபட்டவை. இதனால், தாயாரும் குழந்தைகளும் விரோதிகள் என்று சொல்லலாமா? தனது வலிமை காரணமாக, குழந்தைகளுக்கு இல்லாமல் தாயார் ரொட்டியைச் சாப்பிட்டு விடுவாளா?
இதே போலத்தான் இரண்டு தரப்புகளுக்குள் நலன்கள் வேறுபடுவதால் விரோதம் என்பதோ, வலிமை அல்லது சூழ்ச்சி காரணமாக ஒருவரை ஒருவர் ஏய்க்க வேண்டும் என்பதோ. இல்லை.
முதலாளி, தொழிலாளி என்ற இரண்டு தரப்பை எடுத்துக் கொள்வோம்... பணி சிறப்பாக வேண்டும் என்பதும், பொருள்கள் நியாயமாக விலை போக வேண்டும் என்பதும் இரு தரப்பின் நலனுக்கும் உகந்தவை என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால், லாபத்தைப் பங்கு போட்டுக் கொள்வது? இதில் ஒருவர் லாபம் மற்றவருக்கு நஷ்டமாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஊழியர்களுக்கு ஊதியத்தைக் குறைவாகக் கொடுத்து விட்டு, அவர்கள் அசௌக்கியமாகவும், மனமொடிந்தும் காணப்பட்டால் அது முதலாளியின் நலனுக்கு உகந்ததல்ல. அதே போல மிக அதிகமாக ஊதியம் பெற்றுக்கொண்டு, முதலாளி தொழிலை நல்லபடி நடத்தமுடியாமல் போனால், தொழிலாளிக்கு அது ஏற்றதல்ல.
ஆகவே எப்படிச் செயல்படுவது என்பது அவ்வப்போதைய சௌகரியத்தை உத்தேசித்து அல்லாமல், எது நியாயம் என்பதன் அடிப்படையில் அமைய வேண்டும். ஒரு செயல்பாட்டின் விளைவு எப்படி இருக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது. ஆனால் எது தர்மம், எது அதர்மம் என்பதை எல்லாரும் அறிவர். நம்மில் பெரும்பாலோருக்கு, தர்மத்தின் விளைவு, மிகச் சிறந்ததாகவே இருக்கும் என்ற நம்பிக்கை உண்டு. அதுதான் இறைவனின் நீதி.
எனவே நடந்து கொள்ள வேண்டிய முறை தர்மத்தின் அடிப்படையில் இருக்க வேண்டுமே தவிர, வலிமையையும், சூழ்ச்சித் திறனையும் ஒட்டி அமையக்கூடாது. அப்போதே அனைவருக்கும் நல்ல விளைவுகள் கிட்டும்.
(தொடரும்)
No comments:
Post a Comment