Monday, 5 January 2026

சர்வோதயம்-3

 படித்ததில் புரிந்தது-3.

சர்வோதயம்

மோ.க.காந்தி

உண்மையின் வேர்கள் (2)

 நீதி அல்லது நியாயம் என்பதில் சர்வோதயத் தத்துவம் பரிவு என்பதை உள்ளடக்குகிறது.

ஒரு குடும்பத்தலைவருக்கும் இல்லப் பணியாள் ஒருவருக்கும் உள்ள தொடர்பை எடுத்துக்கொள்வோம். அவர்களுக்குள் ஒப்பந்தம்-பணியாள் முழு நேரம் வேலை செய்ய வேண்டும். கொடுக்கக்கூடிய ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு விட்டது. தலைவர் சவுக்கை வைத்து வேலை வாங்குவது போல துளிக்கூட ஓய்வில்லாமல்  பணியாளிடம் வேலை வாங்குகிறார்.. பணியாள் குறைந்த கூலிக்கே வேலை செய்ய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார். சட்டம் “நீதி”ப்படி இதில் தவறில்லை. கட்டுபடியாகவில்லை என்றால் எந்த நேரமும் பணியை விட்டு விலகி விட அவருக்கு உரிமை இருக்கிறது .”ஆரசியல்-பொருளாதார” தத்துவப்படி இது சமுதாயத்துக்கு நல்லதே. பணி மிக அதிக அளவில் நடக்கிறது. சமுதாயம் பலனடைகிறது. அந்த சமுதாயத்தில் பணியாளரும் அடக்கம். இது மிகச் சரியே. பணியாளர் ஓர் இயந்திரமாக இருந்தால். எண்ணங்களும் உணர்ச்சிகளும் அற்ற ஜடமாக இருந்தால். இப்போது குறிப்பிட்டுள்ள சூழ் நிலையில் அதிக பட்ச உழைப்பை எதிர்பார்க்க முடியும் என்பது நடவாததே. பரஸ்பரம் பரிவு என்ற உந்து சக்தி இருந்தாலே அதிக பட்ச பலனை எதிர்பார்க்க முடியும்.

தலைவன் வழவழ கொழகொழ ஆசாமியாகவும், பலவீனனாகவும் இருந்தால், பலன் சொற்பமாகவே இருக்கும்-பணியாளனுக்குப் பணியின் மீதும் முதலாளியின் மீதும் அக்கறையும் பரிவும் இல்லாதிருந்தால். நாம் சொன்ன பரிவு என்பதே அவனது உந்து சக்தியாக இருந்தால் மட்டுமே அதிக பட்ச பலன் கிட்டும். சுருங்கச் சொல்லின், தன்னலமற்ற விதத்தில் அடுத்தவரைப் பரிவுடன் நடத்துவது மட்டுமே நிறையப் பலன் கொடுக்கும். இப்படிச் சொல்கையில், பரிவு அதிகப் பலன் தரும் என்பதைத்தான் இங்கே கூறுகிறோமே, தவிர, அதனுடைய மேன்மையையும் விரும்பத்தக்க தன்மையையும் பற்றிப் பேசவில்லை. பணியாளரிடம் சக்கையாக வேலை வாங்க வேண்டும் என்ற கருத்துடன் அவரிடம்”பரிவு” காட்டுவீர்களானால், அவரிடமிருந்து விசுவாசத்தையோ, நீங்கள் விரும்பும் பலனையோ அடைய முடியாது. பொருளாதார நோக்கம் எதுவும் இல்லாமல் அவரை அன்புடன் நடத்துங்கள். பொருளாதா ரீதியிலும் நல்ல பலனே கிட்டும். “தோற்பவர் வெல்கிறார்; வெல்பவர் தோற்கிறார்”

No comments:

Post a Comment