வீண் அவஸ்தை
(திருச்சித் தமிழ் எழுத்தாளர் சங்க ஆண்டுமலர்-1960)
எடுத்தெறிந்தும் உறுத்துகிற
முள்ளைப்போல
அடிமனத்துப் பரப்புக்குள்
அரிக்கிறது;நினைவில்லை;
நினைப்பென்று சொல்லும்
நிலையில்லை;பூர்வ ஜன்மம்;
அதன்முன்னால்,
அதற்கும் முன்னால்,
நினைத்துத் தொடராமல்
நிர்க்கதியாய் விட்டதொரு
கருத்துத் துணுக்கொன்று
கரிக்கிறது.
கண்டுமறந்த பழங்
கனவுக்குள் வந்திட்ட
காட்சியைப்போல்.
கசக்கிப் பிழிவதனால்
கண்டெடுக்க முடிவதில்லை.
வேதனைதான்.
நைந்தமனச் சிக்கெடுத்து
நினைவுக்கு நுனிகாண
முயல்கின்றேன்.
இயலவிலை.
வீண் அவஸ்தை.
No comments:
Post a Comment