வாசித்ததை யோசிக்கிறேன்
அறநெறிச் சமயம்
மோ.க.காந்தி
6.அறமே சமயமாக….
அறமே சமயமாவதா? என்று புருவத்தை உயர்த்துபவர்கள் இருவகை.
சமயம் என்பது வெறும் நல்லொழுக்கம் என்பதை விட மிகவும் மேம்பட்டது என்பவர்கள் ஒரு சாரார். மனசு சுத்தமா இருந்து ஒழுக்கமாக வாழ்ந்தால் போதும்.. சாமி பூதம் மதம் எல்லாம் தேவையே இல்லை என்பவர்கள் ஒரு சாரார். இரண்டுமே தப்பு என்கிறார்கள் அறநெறிச் சமய இயக்கத்தினர்.
மத அனுஷ்டானங்களைத் தவறாமல் பண்ணிக்கொண்டு, ஆனால், நடத்தையில் ஒழுக்கக்குறைவாக இருப்பவர்களும் உண்டு. சார்லஸ் பிராட்லா போல, சாமி, சமயம் இந்த சமசாரம் எல்லாம் வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளிவிட்டு நல்லொழுக்க நெறிகளைத் தவறாமல் பின்பற்.றுபவர்களும் உண்டு. இரண்டுமே தவறு என்பதுதான் அறச் சமயத்தினரின் கருத்து அதிலும் கடவுள் மதம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு முறைகேடாக நடந்து கொள்பவர்கள் சமூகத்துக்குக் கேடானவர்கள் என்கிறார்கள் அவர்கள். சமயமும் அறநெறியும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தன என்று அறிவியல் ரீதியாக நிறுவத் தலைப்படுகிறார்கள். .
தெய்வத்தின் மேலுள்ள அச்சத்தின் காரணமாக, தானம் தர்மம் என்றெல்லாம் கடைப்பிடிப்பவர்கள் இருக்கிறார்கள். இவர்களைச் சமயப் பிடிப்பு உள்ளவர்கள் என்று சொல்ல முடியாது. தன்னிச்சையாக, மனப்பூர்வமாக, திட உறுதியுடன், லாபமோ நஷ்டமோ, வாழ்வோ தாழ்வோ, எது வந்தாலும், என்ன தியாகம் செய்ய வேண்டியிருந்தாலும் தர்ம நெறிப்படித்தான் ஒழுகுவேன் என்ற நிலைப்பாடு உடையவர்கள்தாம் உண்மையான ஒழுக்கசீலர்கள். கடவுளுக்கும் பிரியமானவர்கள்.
சிலர் அறநெறித் தத்துவங்கள் அனைத்தையும் அறிந்தவர்கள். ஊருக்கெல்லாம் உபன்யாசம் செய்வார்கள். ஆனால் தன் நலன் என்று வந்தபோது, தப்பாக நடந்துகொண்டால் என்ன என்று நினைத்துச் செயல்படுவார்கள். முஸோலினி அப்படித்தான். பள்ளி மாணவர்களுக்கெல்லாம் தர்ம்ம், நியாயம் என்றெல்லாம் விரிவாக உரை நிகழ்த்துவார். ஆனால் தன் நாட்டின் நலனுக்கு ஏற்றது என்று அவர் கருதியதற்காக, வேண்டாத கொடுமைகள் எல்லாம் செய்தார். இதன் காரனம் அவரது அறம் சமயம் சார்ந்திராதது.
அறநெறிச் சமயம் நிறைவாகச் சொல்வது: உடைவாளை ஒளித்து வைத்துக்கொண்டு செய்யும் பிரார்த்தனைகளுக்கெல்லாம் கடவுள் செவிசாய்க்க மாட்டார். இரண்டு பேரை எடுத்துக்கொள்கிறோம். ஒருவர் கடவுளை முழுமையாக நம்புகிறார். மூன்று வேளை பூஜை செய்கிறார். ஆனால் சமயம் சொல்லும் போதனைகள் ஒன்றையும் கடைப்பிடிப்பதில்லை. மற்றவர், கடவுளின் பெயரைக்கூட உச்சரிப்பதில்லை. ஆனால் அவர் மனப்பூர்வமாகச் செய்யும் செயல்கள் அனைத்தும் இறைக் கட்டளைக்கு இசைந்தவையாக இருக்கின்றன. இவர்களில் யார் கடவுளுக்கு உகந்தவர்? பின்னவர்தானே?
இதே கருத்தைப் புனித விவிலியத்திலும், காஞ்சிப் பெரியவர்களின் ”தெய்வத்தின் குர’லிலும் படித்திருக்கிறேன்.
அனைத்துச் சமயங்கள் சொல்லும் அறநெறிக் கருத்துகள் ஒன்று போன்றவை என்ற “அறநெறிச் சமய “ இயக்கத்தினரின் கோட்பாடு சரியானதுதானே?
No comments:
Post a Comment