Wednesday, 7 January 2026

அறநெறி

 வாசித்ததை யோசிக்கிறேன்

அற நெறிச் சமயம்

மோ.க.காந்தி.

8. இலட்சிய சமுதாயம்.

அற நெறி என்பது சமூக உறவுகளோடு தொடர்பு கொண்டது.  உதாரணத்துக்கு நீதிபதிகள் தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகள், சமய, அரசியல், தத்துவார்த்த சார்பு நிலைகள் காரணமாக, நீதிக்குப் புறம்பான  தீர்ப்புகளை எழுதுவார்களேயானால், சமுதாயத்தில் அமைதி குலையும்.

 அன்பு, கருணை, தயை தேசபக்தி இவை அனைத்துமே சமுதாய உறவுகளுடன் தொடர்பு கொண்டவை. உண்மை என்பது தனி மனித அறம்; சமுதாயத்துக்கு அதனுடன் தொடர்பு இல்லை என்ற கருத்து தவறானது. தக்க நேரத்தில் உண்மை சொல்வது பிறருக்குத் தீங்கு நேருவதைத் தவிர்க்கும். உண்மையைச் சொல்லாமல் இருப்பது, அல்லது பொய்யைச் சொல்வது பிறருக்குத் தீங்கு விளைவிக்கும்.

‘சமுதாயம் சீர்கெட்டுவிட்டது; ஒன்றும் சரியில்லை’ என்றெல்லாம் திண்ணையில் உட்கார்ந்து புலம்பிக் கொண்டிருப்பவர்கள், சமுதாயத்துக்கு மேலும் தீங்கு விளைவிக்கிறார்கள். சமுதாய அக்கறை உள்ளவர்கள் இருட்டைச் சபிக்காமல், தங்களால் இயன்ற அளவுக்கு அகல் தீபம் ஏற்றுகிறார்கள்.

எப்பொழுதும், தான், தன் நலன் என்று சிந்தித்துக் கொண்டிருப்பவன் விலங்கே அனையன். தன் குடும்பம், சுற்றம், ஊர், சமூகம், நாடு என்று அவனது அன்பு வட்டம் விரிய விரிய அவன் உயர் நிலை எய்துகிறான். “யாதும் ஊரே; யாவரும் கேளிர்”  “வஸுதைவ குடும்பம்” என்பது நிறை நிலை ஆகும்.

பக்கத்திருப்பவன் துன்பம் பார்க்கப் பொறாதவன் புண்ணிய மூர்த்தி என்றார் பாரதியார். பிறர் துயர் கண்டு உன் இதயம் ரத்தம் சிந்துகிறதா என்று சோதித்துப் பார்த்துக்கொள்ளச் சொன்னார் சுவாமி விவேகானந்தர். பிறர் துயர் கண்டு இரங்கி உதவாத வரை நாம் நம் மதப்பெருமை பேசிக் கொண்டிருப்பதெல்லாம் வியர்த்தமே.

சமுதாயத்தில் ஒவ்வொருவருக்கும்  அவரவர் சூழ் நிலை காரணமாக அவரவர் கடமைகள், பொறுப்புகள் அமைந்துள்ளன. . பொறுப்புகளுக்கேற்றவாறு அதிகாரமும் வரையறுக்கப் பட்டுள்ளது.  இதில் உயர்வு தாழ்வு என்பது இல்லை. வையகம் காப்பவரேனும் சிறு வாழைப்பழக் கடை வைப்பவரேனும் நேர்மை தவறாது நடக்க வேண்டும் என்பதே சமுதாய விதி.  “எனக்கு அமைச்சர் பதவி தந்து அழகு பார்த்தார் அம்மா, அல்லது ஐயா” என்பதெல்லாம் விவரம் புரியாமல் பேசுகிற பேச்சு.. அமைச்சர் ஆனவுடன், அல்லது அரசாங்கத்தில் சின்ன குமாஸ்தா ஆனவுடன், மக்களை விரட்ட தனக்கு அதிகாரம் கிடைத்து விட்டது போல் பாவித்துக்கொள்வது பேதைமை. என்பிலதனை வெயில் போல அறம் அவர்களைக் காயும்.

 நாட்டின் பிரதான தலைவன், தன்னை நாட்டின் பிரதான சேவகன் என்று கருதிக் கொள்வதே உயரிய பண்பு. 

No comments:

Post a Comment