வாசித்ததை யோசிக்கிறேன்.
அற நெறிச் சமயம்.
மோ.க.காந்தி
7. அப்படியா சொன்னார் டார்வின்?
டார்வின் தன் நூலில் அற நெறியின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லியிருக்கிறார். டார்வினை ஆழ்ந்து படிப்பவர்களுக்கு இது புரியும். அவரது கூற்றுப்படி, தற்காப்பு உணர்ச்சி, மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளுக்கும் இருக்கிறது. வாழ்க்கைப் போராட்டத்தில் தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும் என்பது அவரது கோட்பாடு. இந்த்த் தகுதி என்பது என்ன?
இந்தத் தகுதி உடல் வலிமையை மட்டும் குறிக்கவில்லை. கரடியும் எருமையும் மனிதனை விட வலிமை மிக்கவை. எனினும் மனிதன் தன் புத்தியைக் கொண்டு அவற்றை அடக்கி ஆள்கிறான். போரில் படைகளின் எண்ணிக்கையையும், வீர்ர்களின் புய வலியையும் மிஞ்சி, நல்ல தலைமையும், யுத்த தந்திரமும் மிகுந்த கட்சி வெற்றி பெறுகிறது.
உடல்வலிமைக்கும் புத்தி சாதுர்யத்துக்கும் அப்பால் அறத்தின் வலிமை ஒன்று இருக்கிறது. அதுவே வலியது என்கிறார் டார்வின். நல்லொழுக்கமுடையவன் பண்பற்றவனை விட அதிக நாள் நீடித்து நிலைக்கிறான் என்பதற்குப் பல சான்றுகள். தர்ம நெறி முக்கியமல்ல என்பது மேலோட்டமாகச் சிந்திக்கிறவர்களின் கருத்தானாலும் டார்வினின் கருத்து அதுவல்ல. மனித குல வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் நற்பண்பில்லாத இனங்கள் அழிந்துபட்டுள்ளன என்பதைக் காண முடியும். கோதம் சமோரா மக்கள் ஒழுக்கம் இல்லாதவர்கள். அந்த இனமே இப்போது அழிந்தொழிந்து விட்டது.
அமைதியான மனோ நிலை அறப்பண்பின் ஒரு கூறு. வன்முறை வெற்றி தருவதாகத் தோன்றினாலும் இறுதியில் வாளோங்கியவனின் வாளுக்கு அவனே இரையாவதுண்டு.
தீய பழக்கங்களிலிருந்து விடுபட்டிருப்பது அறப் பண்பின் மற்றொரு கூறு. முப்பது வயதில் ஒழுக்கக்கேடாக நடந்து கொண்டவர்கள் அடுத்த 13-14 ஆண்டுகளில் இறந்து விடுவார்கள் என்றும் சீரான வாழ்வு வாழ்பவர்கள் 70 ஆண்டு வரை வாழ்கிறர்கள் என்றும் இங்கிலாந்து நாட்டின் புள்ளிவிவரம் ஒன்று கூறியது.
அறத்தின் வலிமையே உயர்ந்தது என்பதை விளக்குகிறார் டார்வின். பண்டைய கிரேக்கர்கள் இன்றைய ஐரோப்பியர்களை விட அறிவுத்திறனில் மேம்பட்டிருந்தார்கள் ஆனால் அவர்களது புத்திசாலித்தனமே அவர்களுக்குப் பகையாயிற்று.
தேசங்கள் செழித்து வாழ்வது அறத்தின் வலிமையாலேயே.
இதனை நினைவில் கொள்வோம். பிறருக்கு உபகாரமாக வாழ்வோம். அதுவே அறவாழ்வின் உச்ச நிலை.
No comments:
Post a Comment