Wednesday, 30 August 2017

ஒரு சாமான்யனின் கீதை--3.

ஒரு சாமான்யனின் கீதை—3.
வேள்வி.
நமக்கு வாய்த்த கடமைகளைச் சிரத்தையுடன் செய்யவேண்டும். பிறரையும் அவர்கள் செய்கிற பணிகளையும் பார்த்து ஒப்பிட்டுக்கொண்டு மனத்தைச் சிதறவிடவேண்டாம். நமது பணியை  முழுக் கவனத்தையும்  செலுத்தி. முழுத் திறமையையும் கொண்டு சிறப்பாகச் செய்வோம்.
இன்னொரு முக்கிய விஷயம் இருக்கிறது அர்ப்பணிப்பு உணர்வுடன் பணி ஆற்ற வேண்டும். .சமுதாய நலனுக்கான அர்ப்பணிப்பு. இதுவே ஒரு வேள்வி. ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவிக்கிறோம்; வேள்வி .நமது அறிவையும் அனுபவத்தையும் பிறருக்குப் பயன்படும் வகையில் பகிர்ந்து கொள்கிறோம்; வேள்வி. செல்வத்தை வறியவர்களுக்குப் பயன்படும் வகையில் கொடுக்கிறோம்; வேள்வி.. . பேரறிவாளன் திருவாக நமது செல்வம், ஊருணி நீர் நிறைந்தாற்போல் பலருக்கும் பயன்படுகிறது. இரைக்கிற கிணறு மேலும் மேலும் சுரக்கிறது. நம்மிடமுள்ள செல்வத்தையும்,ஆதாரங்களையும் கொண்டு சமுதாயத்தில் புதிய செல்வம் உருவாக்கப் பணி புரிகிறோம்; வேள்வி. இப்படி முனைந்து செயல்புரிகையில், தெய்வமே நமது பணிகளுக்குத் துணை நிற்கும்  ” மடி செற்றுத் தான் முந்துறும்”.
இப்படி அர்ப்பணிப்புடன் செய்யும் வேள்வியினால், நமக்கு நலம் பெருகுகிறது;. ஈத்துவக்கும் இன்பம் என்னும் பேரின்பம் கிடைக்கிறது. நமது அறிவும், திறமைகளும் வளர்கின்றன. நமது இதயம் புனிதமாகிறது. இறைவனுக்கு நெருங்கி வருகிறோம்  பெறுகிறவனை விடக் கொடுக்கிறவனே பாக்கியவான்.
சமுதாயத்திலிருந்து பலவகையிலும் பலவும் பெற்றுக் கடன் பட்டிருக்கிறோம். பெற்றதற்குமேல் திருப்பிக் கொடுத்தாக வேண்டும் . கூட்டிக் கழித்துக் கணக்குப் பார்க்கையில் நாம் சமுதாயத்துக்கு கடனாளியாக இருக்கக்க் கூடாது. கொடையாளியாகத்தான் இருக்க வேண்டும்.

இப்படி இல்லாமல், நான் எனக்கு என்றே நினத்தவாறு எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டு தனக்காக மட்டுமே வாழ்கிறவன் சமுதாயத் திருடன். அவன் பிறந்ததும் வாழ்வதும் வீண்.,

Monday, 28 August 2017

ஒரு சாமான்யனின் கீதை--2

 ஒரு சாமான்யனின் கீதை—2
(பகவத் கீதையிலிருந்து நான் எடுத்துக் கொண்டவை)
நமக்குப் பிறப்பினாலே, சமுதாயத்தில் வாய்த்திருக்கிற இடத்தினாலே, சந்தர்ப்பத்தினாலே ஏர்பட்டுள்ள கடமைகளைச் சரிவரச் செய்ய வேண்டும். அவற்றைச் செய்வதனால்,போரில் கொலை செய்வதானால் கூட (ஏன் சமூக வாழ்வில் கசாப்புத் தொழிலானாலும் கூட) பாவம் நேராது. கடமையைச் செய்யாமல் விடுவதுதான் பாவம். கடமையைச் செய்யாதவனுக்கு சமூகத்தில் பழிச்சொல்லே  விளையும்
.ஏற்றுக்கொண்ட காரியத்தில்  மன உறுதியோடு இருக்க வேண்டும். வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம். இப்ப்படி மன உறுதியைக் குலைப்பதற்குள்ள காரணிகளில், சுற்றியிருப்பவர்கள், பலவாறாகப் பேசி மனத்தைக் குழப்புவதும் ஒன்றாகும்..
காரியத்தைத் தொடங்கியபின் கருமமே கண்ணாக இருக்கவேண்டும். தோல்விகள் நம்மைத் துவளவிடக்கூடாது. வெற்றிகள்  மிதமிஞ்சிய உணர்ச்சிகளாக நம்மை ஆகாசத்தில் பறக்க விடக்கூடாது. இப்படி சமநிலையுடன் பணி புரிவதைத்தான், எவ்வளவு சாதாரணப் பணியாக இருந்தால் கூட ‘யோகம்’ எனக் கூறுகிறார்கள்.
மனதில் எதிர்மறையான எண்ணங்கள் தோன்றி நம்மை அலைக்கழிக்கத்தான் செய்யும். அவற்றை மாற்ற என்ன வழி? அவற்றுக்கு எதிரான நேர்மறையாண எண்ணங்களை உருவாக்கிக்கொள்வதுதான். நேர்மறையில் எல்லாம் மிகச் சிறந்த நேர்மறை இறவனைப்பற்றிய சிந்தனைதான். தனியாக அமர்ந்து  இறைச் சிந்தனையில் ஆழ்வது பயனுள்ள பயிற்சியாகும்.
முன்னேற்றத்துக்குப் பயிற்சி செய்து கொண்டிருக்கிறோம் என்பதை நினைவு கொள்ள வேண்டும். அவசரப்பட்டு, முன்னேறி நாம்”ஸ்திதப் பிரக்ஞன்” ஆகிவிட்டோம் என்றெல்லாம் கற்பனை செய்து கொண்டு, மனதை நிலைப்படுத்தாமல் புலனடக்கத்துக்கான கடுமையான பயிற்சிகளில் ஈடுபடுவது ஆபத்தானது. பிறர் நம்மைப் பொய்யொழுக்கவாதி என்று பழி சொல்லவே ஏதுவாகும். மனக்கட்டுப்பட்டுக்காக விடாது முயன்றுகொண்டே இருக்க வேண்டும். அதன் ஒரு பகுதியாகவே புலனடக்க முயற்சிகள் இருக்க வேண்டும்.

நிறைவாக, அவசியம் தேவைப்படுவது, தன்னைத்தாள் ஆளும் சமர்த்து. இதுவே அமைதி தரும்.. இப்படிக் கஷ்டப்பட்டு அமைதி தேடாவீட்டால் என்ன மோசம்? நிரந்தரமான சுகத்துக்கு, நாம் அனைவரும் நாடும் சந்தோஷத்துக்கு அடிப்படையான தேவை-- அமைதி; சாந்தம். சாந்தமுலேகா சௌக்யமுலேது!.

Sunday, 27 August 2017

பகவத் கீதையிலிருந்து நான் எடுத்துக்கொண்டவை--1

பகவத் கீதையிலிருந்து நான் எடுத்துக்கொண்டவை-1
( Takeaways from the Bhagavad  Gita)
ஒரு பிரச்சினையைச் சமாளிக்க இதுதான் வழி  என்று தீர யோசித்து ஒரு முடிவை எடுக்கிறோம். Hard decisionதான். வேறு வழியில்லை. முடிவெடுத்ததும் மனது தெளிவாகிறது. செயல்படுத்த அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுகிறோம். உற்சாகத்துடன் செயற்களத்தில் நுழைகிறோம். ஆனால் சூழ்நிலையை நேருக்கு நேர் சந்திக்கும்போது  பிரச்சினை நமக்கு அப்பாற்பட்டதாகத் தோன்றி விடுகிறது. தளர்ச்சி ஏற்பட்டு விடுகிறது. மனமும் உடலும் சோர்ந்து போகின்றன. எல்லாவற்றையும் விட்டு ஓடிவிட்டால் தேவலாம் போலத் தோன்றுகிறது..மூளை அதற்குத் தோதான வாதங்களை logical ஆக ஒன்றொன்றாக எடுத்துக் கொடுக்கிறது.
என்றாலும் நமக்கு ஒரே குழப்படியாக இருக்கிறது. நமக்கு உற்ற நண்பன், நல்லவன், நாலும் தெரிந்தவனிடம்,” எனக்கு ஒண்ணும் புரியலேப்பா!” என்னதான் செய்யணும், எது சரி தப்பு, , நீயே சொல்லு என்று பொறுப்பை அவனிடம் ஒப்படைத்து விடுகிறோம். (தள்ளி விடுகிறோம்?)

ஆலோசனை சொல்கிறவனாகப்பட்டவன் என்ன செய்ய  வேண்டும்?  அனுதாப வார்த்தைகள் சொல்லக்கூடாது., அவனோடு ஒத்துப்போவது போல ஒத்துப்போய் பிறகு அவனை நம் வழியில் திருத்தலாம் என்று “Yes,but” உத்தியை எல்லாம் கையாளக் கூடாது. ஒரே சம்மட்டி அடியாக அடித்துவிடவேண்டும்—மோகமுத்காரம் என்பது போல! ,”அடட! நமது எண்ணத்தில் தவறு இருப்பது போல இருக்கிறதே!” என்று சிந்தனை திசை திரும்ப ஆரம்பிக்கும். தொடர்ந்து ஒரு புன்னகையும் பூத்தால் (Disarming Smile) பிரச்சினை  நாம் நினைக்கிறாற்போல்அவ்வளவு ஒன்றும் பெரிது இல்லை போல இருக்கிறதே! இது ச்சும்மா ஜுஜுபி என்பது போல சிரிக்கிறானே என்று ஒரு re-assurance ஏற்படும் .Counselling  செய்கிறவன் அடுத்து தன் பணியைத் தொடரலாம்..

பணியின் மூலம் பேரானந்தம் (19)


பணியின் மூலம் பேரானந்தம் (19)
செயல்கள் பிரார்த்தனையாக! பலன்கள் பிரசாதமாக!
கர்ம யோகிக்கு கடவுள் நம்பிக்கை அவசியமா? அவசியமில்லைதான்.  ஆனாலும் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் நாம் முன்பு சொன்ன அத்தனை வழிகளிலும்-குறிப்பாக-பற்றற்றுப் பணி புரிய நிறைய –முயற்சி எடுத்துக்கொண்டு பிரயாசைப்பட வேண்டும். உண்மையான கடவுள் நம்பிக்கையுள்ளவனுக்கு அந்த சிரமமே இல்லை! அவனது மனோபாவம்,அனைத்து செயல்களையும் கடவுளுக்கு சமர்ப்பணம் என்று செய்து விடுவது. நமக்கு இந்த வேலையைச் செய்ய வேண்டுமென்று பணித்திருப்பது அவன் ஆசியாகும். நம் பணியை நாம் செய்கிறோம். பலன் அவனுக்கே உரியது!

செய்யும் வேலையை பிரார்த்தனை மனோபாவத்துடன் செய்ய வேண்டும். பலனை இறைவனின் பிரசாதமாக ஏற்க வேண்டும். இதுதான் பணியின் மூலம் பேரானந்தம் எய்துவதற்கான சூட்சுமம். “கவலைப்படுவது கடவுளின் வேலை” என்பார் கண்ணதாசன்!
(பேரானந்தம் நிரம்பியது.)

Friday, 25 August 2017

பணியின் மூலம் பேரானந்தம் (18)

பணியின் மூலம் பேரானந்தம் (18)
 காரியத்தில் பதறார்…..
 கர்மயோகம் சொல்வது செயல் ஆற்றியே தீர வேண்டும். ஆனால் அதன் பதிவுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பற்றற்றுப் பணி புரிந்தால் நமது செயல்கள் நம்மைப் பந்தப் படுத்தா. இந்தக் கருத்தை சுவாமிஜி விரிவாகவே வீளக்குகிறார்.
பற்றற்றுப் பணியாற்றுவது என்ற கருத்து சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. சுவாமிஜியிடமும் நிறையப் பேர் கேட்டிருக்கிறார்கள்..பற்றற்றுப் பணி புரிவது என்பது ஏனோ தானோ என்று அசுவாரஸ்யமாகப் பணியாற்றுவதாகாதா? சுவாமிஜி இது பற்றி நிறையவே சிந்தித்திருக்கிறார். அவர் சொல்வதன் சாரம் இதுதான்.
வேலை செய்யும்போது அதில் ஒரு தீவிர வெறி, வேகம் இல்லாவிட்டால் செய்யும் பணி எப்படிச் சிறக்கும் என்ற சந்தேகம் எழும். உண்மையில் வெறியும் வேகமும் எந்த அளவுக்குக் குறைவாக  இருக்கிறதோ அந்த  அளவுக்குச் சிறப்பாக வேலை செய்ய முடியும்..எவ்வளவுக்கு எவ்வளவு அமைதியாக இருக்கிறோமோ அந்த அளவுக்கு நமக்கும் நல்லது ;நாம் செய்யும் காரியத்துக்கும் நல்லது. அமைதியான மனம் இருந்தால் நிறைய வேலை செய்ய முடியும். நன்றாகவும் செய்ய முடியும். உணர்ச்சிகளுக்கு வழி விடும்போது நமது நரம்பு பதறுகிறது. மனது கிடந்து தவிக்கிறது. ஆற்றல் விரயமாகிறது. காரியத்துக்காகச் செலவிட வேண்டிய ஆற்றல்,பதற்றத்தில் வீணாகிறது. பதறாத காரியம் சிதறாது. நமது பூரண ஆற்றலையும் செய்யும் காரியத்தில் முனைப்பாக்க வேண்டும். உலகின் மிகப் பெரிய தலைவர்களை எல்லாம் பார்த்தீர்களானால் அவர்கள் அசாதாரண அமைதி படைத்தவர்களாக இருப்பார்கள். எதனாலும் அவர்கள் சமநிலை இழக்க மாட்டார்கள். கோப வசப்பட்டவன்  அதிக வேலைகள் செய்ய முடியாது. சீற்றமே அடையாமல் இருப்பவர்கள் நிறைய சாதனை புரிவார்கள். அமைதியான சமநிலை கொண்ட மனதே நிறைந்த பணி செய்ய உகந்தது.
செய்யும் தொழிலில் ஈடுபாடு என்பது வேறு. பற்று என்பது வேறு. என்பது. பற்று வெறியையும் உணர்ச்சிகளையும் கொண்டு வரும். மனதின் சமநிலை இழக்கச் செய்யும்.
மிகத் திறமையான மருத்துவர்கள் கூட, தங்கள் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வதென்றால், அந்தப் பணியை வேறு மருத்துவர்களிடம் ஒப்படைக்கிறார்களாமே? ஏன்?
”காரியத்தில் பதறார், …மிகுந்த பொறுமையுடன் வித்து முளைக்கும் தன்மை போல் மெல்லச்செய்து பயனடைவார்” என்பான் பாரதி. 

Tuesday, 22 August 2017

பணியின் மூலம் பேரானந்தம் (17)

பணியின் மூலம் பேரானந்தம்  (17)

முப்பது நாளும் ஞாயிற்றுக்கிழமை!

நல்ல எண்ணங்கள், செயல்களின் மூலம் நல்ல பதிவுகளை உருவாக்கிக் கொள்ளலாம்.  நம் எதிர்காலத்தை நாமே வடிவமைத்துக்கொள்ளலாம்; மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்..சரிதான்.
நாம் இப்போது பணியின் மூலம் பேரானந்தம் பெறுவது பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்..
நல்ல பதிவோ, கெட்ட பதிவோ இரண்டும் விலங்குதான்; பந்தத்தை உருவாக்குபவைதாம். . பேரானந்தம் பெற, பந்தங்கள் நீங்க, விட்டு விடுதலையாகி சிட்டுக்குருவியைப்போல வானில் பறக்க வேண்டும்; பதிவுகள் கூடாது. பணியாற்றாமல்  சும்மா இருந்தால், இமய மலையில் ஒரு குகையில் ஒண்டிக்கொண்டிருந்தால் கூட பதிவுகள் இல்லாமல் போகாது… மனம் எண்ண அலைகளை உருவாக்கிக் கொண்டிருக்குமே? அவற்றின் பதிவுகள்/?
பணியாற்ற வேண்டும். பற்றுகள் இல்லாமல் பணியாற்ற வேண்டும்..
பணியாற்றுகிறேன் பேர்வழி என்று கடமைக்கே அடிமையாகிவிடும் பலரைப் பார்க்கிறோம். கடமை என்பதே பல பேருக்கு மன உளைச்சல் தரும் காரியம்  ஆகி விடுகிறது. நம்மை அது பிடித்து இழுத்துக்கொண்டு சென்று வாழ்க்கை முழுவதையுமே ஒரு தவிப்பாக மாற்றி விடுகிறது. கோடைகால வெயில் மாதிரி நம்மைச் சுட்டெரிக்கிறது. கடமையின் பரம அடிமைகளைக் கவனியுங்கள். குளிக்க நேரமில்லை. சாமி கும்பிட நேரமில்லை. எப்பவும் ட்யூட்டிதான். வெளியே போய் வேலை பார்க்கிறார்கள். வீட்டுக்கு வந்ததும் அடுத்த நாள் வேலையைப் பற்றி யோசித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள்.. கடமை அவர்கள் மீது ஏறி உட்கார்ந்துகொண்டு பிசாசு போல அமுக்குகிறது. அவர்கள் கடமைக்கு அடிமை. ஓடிக் களைத்த குதிரை தெருவில் விழுந்து மடிவதுபோல வேலையிலேயே மரித்தும் விடுகிறார்கள். பெரும்பாலானவர்கள் கடமை என்பதைப் புரிந்து கொண்டிருப்பது இந்த லட்சணத்தில்தான்.
கர்ம யோகத்தின் அடிப்படை நோக்கம் சுதந்திரமாக இருப்பதே. அதற்குத்தான் கடமை உணர்வு துணை புரிகிறது. ஆனால் தவறான புரிதலால், பலர் அதற்கு நேர்மாறாக அடிமைகளாய் மாறி விடுகிறார்கள். அந்தோ பரிதாபம்!
சுவாமிஜி குறிப்பிடுவது போன்ற இது போன்ற “கடமைக் குடியர்களை” நிறையவே சந்திக்கிறோம்! அவர்களுக்காக ”வாழ்க்கை- வேலை சமநிலை பெறுவது எப்படி?”  என்று பயிற்சி வகுப்புகள் கூட நடத்துகிறார்கள்.
மனதில் சமநிலை இருந்தால் இதற்கெல்லாம் அவசியமே இல்லை .” ஏன்  எப்போதும்  வேலை பார்த்துக்கொண்டே இருக்கிறீர்கள்? ஞாயிற்றுக்கிழமைகளிலாவது ஓய்வு எடுத்துக் கொள்ளக்கூடாதா?”” என்று கேட்டதற்கு நடைமுறைக் கர்மயோகியான என் நண்பர் சொன்னார்: “ எனக்கு முப்பது நாளும் ஞாயிற்றுக்கிழமைதான்!”
சோர்வும் தளர்ச்சியும் ஏற்படுவது பணியினால் அல்ல பணியின் மீதுள்ள பற்றினால்..

வையம் வாழ்க! (சர்வோதயம்- 60 களில் ஒரு இதழ்)

வையம் வாழ்க!
(சர்வோதயம்- 60 களில் ஒரு இதழ்)
வாழ்க எங்கள் தேசம் என்றும்
     வாழ்க எங்கள் கொள்கைகள்;
வாழ்க நித்தமு முழைப்பினால்
     வருந்தினோ ரொடுங்கினோர்!
வாழ்க என்ற ஆர்வ கோஷம்
     வானமே நிறைந்தது!
வாழ வைக்கும் கொள்கையர்க்குள்
     வஞ்சனை பிறந்தது!
வாழ்ந்து விட்ட கொள்கை எங்கும்
     வளர வென்றே ஓர்வகை
சூழ்ந்த போது வையம் எங்கும்
     சூதும் குரோதம் சேர்ந்தன!
ஆழ்ந்த துவேஷம்,பகைமை இந்த
     அவனியைப் புகைத்தது!
‘வாழ்க’ என்ற குழுவினர்க்குள்
     வாழும் போட்டி மூண்டது!
புகைந்த நெஞ்சில் ஒளி பிறக்கப்
     புதிய வேதம் வந்தது!
இகலும் இல்லை; துன்பம் இல்லை;
     இன்பம் எங்கும் சேர்கெனப்
புகன்ற தூய முனிவன் நெஞ்சப்
     பொய்கை பூத்த தாமரை;
வகையில் இந்த ‘வையம் என்றும்
     வாழ்க என்ற பேருரை!




Monday, 21 August 2017

வெற்றி கொள்வீர்!

வெற்றி கொள்வீர்!
(ஆனந்தி மனமகிழ் மன்ற விழா மலர்-1968)
தேனந்த வியாசமுனி திருவாயில் மலர்ந்தமொழி இன்பம்கேட்டு
ஞானம்தன் தந்தத்தால் நமக்கறியத் தந்தபிரான் உமையின் மைந்தன்
ஆனந்தி கலைஞர்குழு வாழ்கவென அருள்கூறி ஆசிநல்க
வானம்தன் எல்லையென வளரட்டும் வளரட்டும் கலைஞர் கூட்டம்.

கூட்டத்தில் ஒன்றென்று நில்லாமல் நுமதுகுழு முதன்மைஎய்தி
நாட்டினிலே முத்தமிழில் நாடகத்தில் வளர்ச்சியிலை என்பார்கொண்ட
வாட்டத்தைப் போக்குகிற விதத்தினில்நீர் நல்லபணி ஆற்றல்வேண்டும்!
ஆட்டத்தால் ஆளுபவன் ஆடகச்செம் பாதங்கள் போற்றிபோற்றி!

போற்றுமொரு பேரார்வம்; கலைத்திறமை; துடிப்போடு புதுமைநாட்டம்
ஏற்றதொரு வேடத்தில் இணைந்தொன்றி நடிப்பதுவே இயல்பாய்க்கொண்டோர்
ஆற்றலொடும் அன்போடும் உழைப்பதுவே முழுமூச்சாய்ப் பேணும் தொண்டர்
மாற்றறியா முழுவெற்றி காண்பார்கள்; மாசக்தி மீதில்ஆணை!

ஆணோடு பெண்புரியும் ’அது’வொன்றே கதையென்று அறிந்தபேர்கள்
நாணும்விதம் நாடகத்தில் காட்டுகிறார்; நீவிர்சற்று விலகிநின்று
வேணமட்டும் புதுச்சிந்தை; புதுக்கருத்து;ஏற்கவேண்டும்!
 வேணியரன் ;உமைபங்கன் வேதமுதல் அருள்கிட்டும்; வெற்றிகொள்வீர்!:




ஊற்றெடுக்கும் உற்சாகம் காண்.

வீசியெறி போர்வை விடிந்ததுகாண்;காப்பியினை

நாசி பிளக்கும் நறுமணமாய்-நேசமுடன்

ஆற்றிக் கொடுக்கின்றாள்;ஆஹாஹா என்ன சுகம்!


ஊற்றெடுக்கும் உற்சாகம் காண்.

பணியின் மூலம் பேரானந்தம் (16)

பணியின்  மூலம் பேரானந்தம் (16)
கர்மயோகத்தின் அடிப்படைகள்
கர்மயோகத்தின் அடிப்படையான விஷயங்களைக் கொஞ்சம் சுருக்கமாகப் பார்ப்போம்.
இன்ப துன்ப அனுபவங்கல் நமக்கு வாழ்க்கையில் பாடம் புகட்டுகின்றன. உண்மையில் இன்பங்களை விடத் துன்பங்களே நமக்கு மேலதிகம் கற்றுத் தருகின்றன. அனுபவங்கள் நம் மீது தாக்கும்போது பதிவுகளை விட்டுச் செல்கின்றன. இந்தப் பதிவுகள் நமது குணங்களை நிர்ணயிக்கும் காரணிகள் ஆகும். அனுபவங்கள் நமக்குக் கற்றுத் தருகின்றன என்பது கூடச் சரியில்லை. பிரபஞ்ச அறிவு நமக்குள் உறங்கிக் கிடக்கிறது. நம்முள் ஏற்கெனவே உள்ளது வெளிப்படப் புற அனுபவங்கள் காரணங்கள் ஆகின்றன. அனுபவங்கள் மட்டுமல்லாது நமது உணர்ச்சிகளும் செயல்களும் உள் உறைவனவே. அந்தந்த தரூணங்களில் வெளிப்படுகின்றன. குழந்தை பிறக்கும்போது காலி சிலேட்டாகப் பிறப்பதில்லை. பல பிறவிகளின் அனுபவங்கள், உணர்ச்சிகள், வினைகளின் பதிவுகளை ஏந்தியே பிறக்கிறது. இதனை வாஸனைகள் என்பார்கள். இந்த வாஸனைகளின் ஒட்டுமொத்தமே ஸம்ஸ்காரம் என்பது. புலன்கள் மூலம் நமக்கு ஏற்படும் நிகழ்வுகள், ஏற்கெனவே நம்முள் உறைந்து கிடக்கும் வாஸனைகளோடு கலந்துகட்டியாகி, நமது எதிர்வினையாக வெளிப்படுகின்றன. அதுமட்டுமல்லாது புதிய அனுபவங்கள், செயல்கள் நமது வாஸனைகளை மேலதிகப் படுத்துகின்றன.
நமது செயல்களுக்கு நம் ஸம்ஸ்காரங்களே காரணம். எண்ணங்கள் செயல்களாகவும், செயல்கள் பழக்கமாகவும் பழக்கம் குணமாகவும் உருவெடுக்கின்றன. இவை அனைத்தின் விளைவுகளே நாம் இன்றிருக்கும் நிலைமை, சூழ்நிலை, நம் விதி என்பது.. இது மீள முடியாததொரு மாயச்சுழல் போலத் தோன்றுகிறது. துரியோதனன் இப்படித்தான் அங்கலாய்த்தான். “எது நல்லது, எது கெட்டது என்று எனக்கு நன்றாகவே தெரிகிறது. ஆனால் என்னால் தீமை செய்யாமல் இருக்க முடியவில்லையே? ஏன் அப்படி?” என்பது அவன் கேள்வி. ஒரே வார்த்தையில் பதில் சொல்ல வேண்டும் என்றால் ஸம்ஸ்காரம் என்பதுதான் பதில்.
சுவாமி விவேகானந்தர் இந்த இடத்தில் ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றைக் காட்டுகிறார். நமது இன்றைய விதி நமது பழ வினைகளின் காரணமாக அமைந்தது என்றால் இன்று நல்ல வழியில் செயல்படுவதன் மூலம் நமது நாளைய விதியை அமைத்துக்கொள்ளும் சக்தி நம் கையில்தான் இருக்கிறது. நமது எதிர்காலத்தை விரும்பியவண்ணம் செதுக்கிக் கொள்ளும் சிற்பி நாமேதான்.
சுலபமாகத் தெரிகிறது. ஆனால் மெத்தக் கடினம். கீதை காட்டும் பாதை சிரத்தையின் மூலமும் இடைவிடாத பயிற்சியின் மூலமும். இதைச் சாதிக்க முடியும் என்பதே. ஊழிற் பெருவலி  யாவுள என்ற திருவள்ளுவர்தாம் ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்றுபவர் என்றார்.

.


Sunday, 20 August 2017

கழிவு மேலாண்மை-சற்றே வித்தியாசமானது( Waste Management-with a difference )



எங்கள் ஆயுள் காப்பீட்டுக் குடியிருப்பில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுள்ளனர். அனைவரும் பெண்மணிகள். பொறுப்பான பதவிகளில் இருந்தவர்கள். உற்சாகமாகப் பணியாற்றுகிறார்கள்.. அவர்கள் முனைப்பாக எடுத்துக்கொண்டுள்ள செயல்பாடு கழிவு மேலாண்மை. Segregation என்ற வார்த்தையும் அடிக்கடி உச்சாடனம் ஆகிறது. அடிமூலத்திலேயே ரகவாரியாகப் பிரித்தல். இது புறப்பொருள் சம்பந்தமானது. எனக்குத் தோன்றுகிறது, அகமுகமாகவும் இந்தக் கழிவு மேலாண்மை நடைபெற வேண்டும். ரகவாரிப் பிரித்தலும் நன்மை பயக்கும்.
மனமாசுகளையும் இப்படி ரகம் வாரியாகப் பிரிப்பது நன்மை பயக்கும் என்று தோன்றுகிறது. ரகம் பிரித்து Label கொடுத்துவீட்டால் சமாளிப்பது எளிது என்று நினைக்கிறேன்.
நான் அளித்துள்ள இரண்டு Labelகள் “குப்பை” ,மற்றும் “அழுக்கு”
குப்பைகள் என்பன மனத்திரையில் அடிக்கடி வந்து போய்க்கொண்டிருக்கும் மாசுகள். உபயோகமற்ற சிந்தனைகள். நேற்று நடந்தது,நாளை நடக்கலாம் என்று நினைப்பது, அவனைப்பற்றி, இவளைப்பற்றி, ஊர்வம்புகள், பைசாவுக்கும் பயனற்ற பயங்கள், கவலைகள். இவற்றால் உடனடியாகப் பெரும் பிரச்சினைகள் இல்லையென்றாலும், அவ்வப்போது ஒழித்துக்கட்டவில்லை என்றால் மனத்தை பெரும் குப்பைத்தொட்டி ஆக்கிவ்டும். பாழ்நிலத்தைத் திருத்திப் பண்படுத்தால் பார்த்தீனியக் களைகள் வளர்ந்து கொண்டே போகும் என்பதைப் போல. இதில் ஒருசொஉகரியம் என்ன என்றால், இந்தக் குப்பைகளைக் களைவது அவ்வளவு ஒன்றும் கடினமான காரியம் இல்லை. அவ்வப்போது தோன்றும் எண்ணங்களைக் கவனித்துக்கொண்டே இருந்தால் போதும். நீங்கள் கவனிக்கும்போதே அவை அந்தர்தியானம் ஆகிவிடும்.. விட்டு விடுதலை ஆகி நிறபதற்குக் கொடுக்கவேண்டிய விலை இடையறாத கண்காணிப்பே.Eternal vigilance is the price of Liberty!
ஆனால் இந்த அழுக்குகள் இருக்கின்றனவே, ரொம்பவும் கடினமான சமாசாரம். மற்றவர் சிறப்புப் பெறும்போது, நம்மை அறியாமல் அடிமனத்திலிருந்து புகைச்சல் கிளம்புகிறது, நமக்கு வேண்டாதவனுக்கு கஷ்டம் வரும்போது”வேணும்கட்டிக்கு வேணும்” என்று நினக்கைத்ட் ஓன்றுகிறது, மனத்தில் மிருகத்தனமான இச்சைகள் தோன்றுகின்றன, ‘”நான்,நான்” எனக்கு, எனக்கே எனக்கு என்னும் அகங்கார மமகாரங்கள் –இன்னும் என்ன என்ன மனசுக்குத் தோன்றுகின்றனவோ-அல்லது மனசில் தோன்றுகின்றனவோ_ அவற்றை எல்லாம் சேர்த்துக்கொள்ளுங்கள். இவற்றைப் போக்குவது நமது சாமர்த்தியத்தினால் மட்டும் முடிவதல்ல.
இவை தோன்றுவதன் காரணம், இவை ஏற்கெனவே பலமுறை தோன்றி ஆழப்பதிந்துள்ள பதிவுகளே. இப்பிறவியில், பல முற்பிறவிகளில் இருந்தும் இந்த அழுக்குகள் சேர்ந்து வருகின்றன.’ இதில் இன்னும் ஒரு சிக்கல் என்னவென்றால், ஒருமுறை பதியும் அழுக்கு, அடுத்தமுறை அது பதிவதைச் சுலபமாக்குகிறது. ராஜாஜி சொல்லுவார் இன்று நான் ஒரு காம எண்ணம் எண்ணுவேனானால், நாளை அந்த எண்ணம் மிகச் சுலபமாக வந்து விடும்.
இப்படிப் பதிந்திருக்கும் அழுக்குகள் ஆன்மப் ப்ரகாசத்தை மறைத்து விடும். சுரண்டி எடுப்பது  அவ்வளவு சுலபமில்லை.
“படிகம் எனும் ஆன்மாவில்
 படிந்திருக்கும் அழுக்குகளைத்
 துடைத்து முடித்தல் மிகத்
 துர்லபமாய்த் தெரிகிறது”
என்று தொடங்கி முன்பு நான் எழுதிய பாடல் நினவுக்கு வருகிறது.(”மூலப் பிரதி கைவசம் இல்லை”)
இவற்றைப் போக்கிக் கொள்ள வழி இறையருளைத் தவிர வேறு இல்லை.
பூஜை, புனஸ்காரம், ஜபம், தியானம், நாம சங்கீர்த்தனம்,, ஆலய தரிசனம், புனித நீராடல் உயிர்களிடத்தில் அன்பு, சேவை, சத்சங்கம், ஆன்மீக நூல்களைப் படித்தல், பூரண சரணாகதி என்று பல வழிகளை நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். இது முழுநேரக் கவனம் செலுத்தவேண்டிய விஷயம்.
அத்தனை அழுக்குகளையும் உடனடியாகப் போக்க முடியுமா, மாதங்கள், ஆண்டுகள், பிறவிகள் பிடிக்குமா, என்பதெல்லாம்ம் நமது ஆற்றாமையின் அழுகுரலையும் இறைவன் சித்தத்தையும் பொறுத்தது. இந்த நிலை வரும்போது வரட்டும், நாம் பாட்டுக்கு நம் முயற்சிகளைச் செய்து கொண்டிருப்போம் என்பார் மகா பெரியவர்கள். செய்யும் முயற்சி வீண்போகாது என்பது கீதை.
 தொடர்ந்து முயலுவோம்; குப்பைகளும் அழுக்குகளும் நீங்கி ஆன்மா துலாம்பரமாய்ப் பிரகாசிக்கட்டும்!



Thursday, 10 August 2017

என் இனிய புறாக்களே! (எல்.ஐ.சியின் தெற்கு மண்டல இதழில் வெளியானது (டிசம்பர்-1994)

என் இனிய புறாக்களே!
(எல்.ஐ.சியின் தெற்கு மண்டல இதழில் வெளியானது (டிசம்பர்-1994)
மாடப்புறாக்களே!
உங்கள் மாடங்களைவிட்டு
 வெளியே வாருங்கள்!
உங்கள் கால்களிலே
கட்டிவிடப்பட்டிருக்கும் சேதிகள்
மாடமாளிகைகளுக்கு மட்டுமல்ல.
மண்குடிசைகளுக்கும்தான்,
அழகிய சிறகுகளை ஆண்டவன் அருளியது
சுற்றிச்சுற்றி வட்டமடிக்க அல்ல.
வானவீதி எங்கும் பறப்பதற்கே.
வெளிச்சத்தை நோக்கியே
படை எடுக்கும் நீங்கள்
இருட்டையும் கொஞ்சம் பாருங்கள்.
காளிதாசன் மட்டும்தான்
காதல் காவியங்கள்
எழுதமுடியும் என்பதில்லை.
கசாப்புக்கடைக்
காதர்பட்சாக்களும் எழுதலாம்.
ஷாஜஹான் மட்டும்தான்
வெண்பளிங்குக் கற்களால்
தாஜ்மஹால் கட்டமுடியுமா?
சர்வர் சங்குண்ணி செய்யமுடியாதா?
எழுதப்படும் பாலிசி
ஒவ்வொன்றுமே
காதல் காவியம்தான்.
எழுதப்படாதவை
சோகமயமானவை.
நட்சத்திரங்களை நோக்கிப்
 படையெடுக்கும் நீங்கள்
வெளிச்சம் ஊட்டுகிற
 லைட்பாயையும் கவனியுங்கள்.
வீட்டுக்கு நாயகனைச்
சந்திக்கப்போகிற நீங்கள்
வாயிலிலே காவல் காக்கிறவனை
அலட்சியம் செய்து விடாதீர்கள்.
அவன் வீட்டுத் தோட்டத்திலும்
ரோஜாப்பூக்கள் உண்டு.
நீரின்றி வாடிவிடும்
அபாயம்
அவற்றுக்கும் உண்டு.
அவன் தேவை அவசரமானது.
ஹிப்பித் தலையர்களே
அதிகமாகி விட்ட காரணத்தால்
”இப்படி” ஒரு தொழிலாளி
இருப்பதையே நாம்
மறந்துவிட்டோம்
தெருவிலே போகிற
பொறிகடலைக்காரனை
ஜவ்வுமிட்டாய் விற்பவனை
சைக்கிள்ரிக்‌ஷாச் சாம்பனை
பூக்காரப் பொன்னம்மாவை
ஹோட்டல் அறை துடைக்கும்
அன்னத்தாயை
எவ்வளவு பேர்
 இன்சூரன்ஸ் கேட்டிருக்கிறீர்கள்?
உங்கள் சேதி
இவர்களை எல்லாம்
எட்ட வேண்டாமா?
சின்னஞ்சிறு சிறகுகள்
சந்து பொந்துகட்கெல்லாம்
உங்களை
இட்டுச் செல்லட்டும்!
குடிசைகுடிசையாக
உங்கள் மந்திரம்
உச்சாடனம் ஆகட்டும்!
துயிலுவதற்கு நேரமில்லை.
உங்கள் சேதியை
நீங்கள் சொல்லாமல் போனால்
காயாமல் இருக்கிற
கண்ணீர்த்தடங்கள்
உங்களுக்குக் கிரிமினல்கள்
என்று பட்டம் சூட்டிவிடும்.
எனவே,
என் இனிய புறாக்களே!
உங்கள் சிறகுகள்
படபடக்கட்டும்!




உலக ஒருமைப்பாட்டுத் தீர்மானம் (திருச்சித் தமிழ் எழுத்தாளர் சங்க மாநாட்டில் வாசித்தது. (1961?)

உலக ஒருமைப்பாட்டுத் தீர்மானம்
(திருச்சித் தமிழ் எழுத்தாளர் சங்க மாநாட்டில் வாசித்தது. (1961?)
கல்பட்டிச் சுப்பிமகன் அமைச்சராகக்
காஷ்மீரப் பெருவெளியை ஆளவேண்டும்.
கனடாவின் மாதொருத்தி அவனைக் கண்டு
காதலித்துச் சீனாவில் மணக்க வேண்டும்.
அரபுமொழிக் கவியொன்றைக் கிரேக்கன் கற்று
அழகியஃப்ரெஞ்ச் மொழிதனிலே பெயர்த்தல் ஏண்டும்
கரைநாட்டு இசையில் அதைப் பாடவேண்டும்
ககனோவிச் அதைக்கேட்டு ரசிக்கவேண்டும்
வேதியர்கள் குரானை ஓதவேண்டும்
முகமதியர் பைபிள் நெறி நிற்றல்வேண்டும்
யூதர்களும் கிறிஸ்தவரும் ஒன்றாய் நின்று
வேதங்கள் ஸம்ஹிதைகள் கற்கவேண்டும்!
இதவுணர்வு எங்கெங்கும் பெருகவேண்டும்
இவ்வுலகம் அன்பாலே இணையவேண்டும்.
இது பிரதிக்ஞை முன்மொழிவேன்; ஏற்றுக்கொள்வீர்!
இந்தமாநாட்டில் இது நிறைவேறட்டும்!



இசையமுது- சிவாஜி-1956

இசையமுது
சிவாஜி-1956
இங்கிதமாய்ப் பொங்கிவரும்
     இன்னிசையைக் கேட்கின்றேன்;
எங்கிருந்து வருவதிது?
     எழிலமுதைக் கூட்டுவதார்/

பாடல்வரித் தேவஒளி
     பார்முழுதும் சோதிதரும்;
நாடுதொறும் பரந்தோடும்
     நாயக,நின் பாட்டினுயிர்!

நல்லருவி புனிதத்வ
     நாதஇசை ஊற்றாகக்
கல்லெல்லாம் பொடியாக்கிக்
     கானாறாய் ஓடிவிடும்!

பாடலிலே பங்குபெறப்
     பாவிமனம் விழைகிறது!
கூடியுடன் நானிசைக்கக்
     குரலுக்கு என்செய்வேன்?
பண்ணிசைக்க எண்ணுகிறேன்;
     பாடுகிறேன்;சீவனிலை;
புண்படிந்த நெஞ்சத்தால்
     புலம்புகிறேன்; பாட்டிதுவா?

தெவிட்டாத நின் அமுதத்
     தேனிசையாம் வலைக்குள்ளே
கவிதையிலே இதயத்தைக்
     கைப்பற்றி விட்டாய் நீ!
(தாகூரைத் தழுவியது)
!



அருள் வாக்கு (திலகம்-1960)

அருள் வாக்கு
(திலகம்-1960)
பாரதப் புண்ணியப் போர்க்களத்தே-விறல்
     பார்த்தனை ஒத்தனர் இன்று மக்கள்!
சாரதியாய் வழி காட்டுகின்றார்-அறம்
     சாற்றிடும் வாசகம் தென்பு தரும்.
தெய்வ சுதந்திரம் கண்டிடுமுன்- நாம்
     தோளொடு தோளெனக் கூடியவர்.
உய்வதுண்டோ அவர் தம்மைச் செற்று?-சொந்த
     உடன்பிறந்தோர் நம் சுற்றமன்றோ?
தர்மம் உரைப்பவர் இராஜாஜி-அருள்
     தெய்விகக் கீதையின் வார்த்தை சொல்வார்
கர்மமியற்றுதல் நம் கடமை-அதில்

     காணும் விளைவினில் எண்ணமின்றி!

Wednesday, 9 August 2017

அப்போதைக்கிப்போதே..


அப்பாதான் விழித்துவிட்டார் கேட்போ மென்று
     அருகில்வந்து பிள்ளையெல்லாம் சுற்றி நின்று
தப்பாமல் சொல்லிடுங்கள் எங்கே வைத்தீர்
     சற்றேதான் நினைவுகொண்டு சொல்லும் என்ன
செப்புதற்கு நாவருமோ சித்த மும்தான்
     தெளிவாக இருந்திடுமோ தெரிய வில்லை;
அப்போதைக் கிப்போதே சொல்லி வைத்தேன்
     ஆதார்கார்ட் பீரோவில் வெச்சிருக்கேன்!

     

Tuesday, 8 August 2017

விதி

விதி
(திருச்சி தேசியக்கல்லூரி ஆண்டுமலர்-1957)
(மொழிபெயர்ப்புக் கவிதை)
பிறவி உயர் பதவி தரும் பெருமிதங்கள் யாவும்
மறைந்து விடா உண்மையல; மாயை எனும் சாயை;
விதியிதனை வெல்லுபடை வையகத்தில் ஏது?
நிதிமிகுந்த செல்வரெனின் நின்றிடுமோ காலன்?
     மன்னர்முடித் தலையும் மண்ணில் விழுந்துருளும்!
     உன்னதங்கள் யாவும் உயிர்விலகின் ஏது?
நிலம் உழுது நீர்பாய்ச்சும் நல்லுழவரேனும்
விலைகூறிப் பொருள்விற்கும் வாணிகர்களெனும்
இலமென்று மனம்நொந்து இரப்பார்களேனும்
குலம்சாதி உயர்பெருமை கூறுபவரேனும்
     சரணுற்று விதியைச் சார்ந்திடுதல் திண்ணம்;
     மரணத்தில் ஒன்றாய் மங்கிடுதல் உண்மை!

எனதெனது;நான் என்று ஏதேதோ பேசி
மனதிந்த மண்வெளியில் மயங்கியதன்பின்னர்
தனதென்று சொல்வதெல்லாம் தானெடுத்தேகாதும்
கனவிந்தப் பாழ்வெளியைக் கைவிடுவர் அம்ம!

     வாடிடினும் வாசம் வீசுமலர் போல
     நாடிஅவர் செய்த நன்மை மணம் வீசும்!


பணியின் மூலம் பேரானந்தம் (15)


விட்டு விடுதலையாகி நிற்போம்!
இதுவரை நாம் பார்த்து வந்த விஷயங்களைத்தான் நமது மரபில் கர்மயோகம் என்கிறார்கள். ஸ்வதர்மம்,  சமநிலையே யோகம், , கடமையில் செம்மையே யோகம் என்றெல்லாம் கீதை கூறுகிறது.,
சந்தோஷத்தை  நோக்கித்தான் நாம் அனைவரும் பணி புரிந்து கொண்டிருக்கிறோம் .இந்த சந்தோஷம் வெளிப் பொருள்களில், சூழ்நிலையில், பிறரின் நடத்தையில் இருக்கிறது என்று எண்ணிக் கானல் நீரை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையான சந்தோஷம்-பரமானந்தம்- பேரானந்தம் என்பதெல்லாம் நமக்குள்ளேயே இருக்கிறது. அதை உணர்ந்து அனுபவிக்க முயல்வதே நமது பணி. இதை எல்லாப் பெரியவர்களும் நூல்களும் சொல்லி இருப்பதால் நாம் மேலும் விரித்துரைக்க முனைவது, தெரிந்த விஷயத்தையே திருப்பிச் சொல்வதாகும்.
பந்தபாசங்கள் என்ற எந்தச் சங்கிலிகளின் பிணைப்பும் இல்லாமல் நாம் ஆனந்தமாக வாழ்வதே முக்தி நிலை. இந்த நிலையை மரணத்துக்குப் பின் தான் வேறு ஏதோ லோகத்துக்குச் சென்றுதான் அடையவேண்டுமென்பதில்லை. இருந்த இடத்திலேயே அனுபவிக்க  வேண்டிய நிலை இது. பாரதியார் இந்த முக்தி நிலையைத்தான் விட்டு விடுதலை ஆகி நிற்றல் என்பார். இந்த நிலையில்தான் “எத்தனை கோடி இன்பம்!” என்று ஆனந்திக்க முடியும்.

நிறைநிலை அடைந்த இலட்சிய மனிதன் எப்படி இருப்பான்? தீவிரமான செயல்பாடுகள் இடையேயும் பாலைவனத்தின் அமைதியையும் ஏகாந்தத்தையும் காண்பான். ஆழ்ந்த அமைதியிலும் ஏகாந்தத்திலும் தீவிரமான செயல்பாட்டைக் காண்பான்.பெரிய நகரத்தின் ஆரவாரமும் சந்தடியும் நிறைந்த வீதிகளில் போய்க்கொண்டிருந்தலும் எந்த சப்தமும் நுழையாத குகைக்குள் அமர்ந்திருப்பது போன்ற பேரமைதியில் அவன் மனம் ஆழ்ந்திருக்கும். அதன் இடையேயும் அவன் தீவிரமான செயலிலும் ஈடுபட்டிருப்பான்.. மனதின் சமநிலை குன்றாமல் இருப்பான். இந்த நிலையை அடைய நமது நூல்கள் மூன்று வழிகளைச் சொல்கின்றன. தத்துவ விசாரம் (ஞான யோகம்),இறைவனிடம் அன்பு (பக்தியோகம்)  கர்ம யோகம் ஆகியன. கர்மயோகத்தைப் பற்றித்தான் நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம்..

அன்னையேநான் உன்னிடத்தில் சிலவார்த்தை பேசிடணும்;

அன்னையேநான் உன்னிடத்தில் சிலவார்த்தை பேசிடணும்;
     அவகாசம் தரமுடியுமா?
அன்னமுடன் சொன்னமுமாய் அன்புமிக்க சந்ததியும்
     அதிலேதும் குறைச்சலில்லை!
சொன்னபடிக் கேட்கின்ற உடல்நலமும் அறிவுநலம்
     சீரான  வாழ்க்கையுண்டு!
என்னதுதான் குறையென்று ஏனிந்தப் பாழ்மனதில்
     ஏதேதோ ஆரவாரம்?

சின்னமனச் செருக்காலே சீற்றத்தால் ஆசையினால்
     செய்துவிட்ட பாவமதிகம்!
இன்னொருவ ராயிருந்தால் இழித்துரைத்துப் போயிருப்பேன்;
     இதுஎனக்கு நன்குதெரியும்!
என்னவொரு காரணத்தால் என்னிடத்தில் சினவாமல்
     காருண்யம் காட்டுகின்றாய்?
கன்னல்மொழிக் காஞ்சிமுனி சொன்னதுபோல் இதுவுன்றன்
     அவ்யாஜ கருணையன்றோ?

பட்டகட்டை போலிருக்கப் பரமனருள் நிறைந்திருக்கப்
     பலவழிகள் சொல்லுகின்றார்!
நிட்டையுடன் நியமங்கள் சாத்திரங்கள் ஜெபதபங்கள்
     நேரியதோர் குருபார்வையாய்!
கெட்டமனப் பாவியற்கு ஒருசிறிதும் இவற்றிலெலாம்
     நாட்டமில்லை; என்னசெய்வேன்?
திட்டமிட்டுத் திடமாக உன்பாதம் சரணடைந்தேன்;
     எனைநீதான் ஏற்கவேணும்!


Thursday, 3 August 2017

பணியின் மூலம் பேரானந்தம் (14)

பணியின் மூலம் பேரானந்தம் (14)
 நாமே நமக்கு எஜமானர்!
சுவாமி விவேகானந்தர் சொல்லுவார், எஜமானனைப் போல வேலை செய்ய வேண்டும்; அடிமையைப் போலச் செய்யக்கூடாது என்று.
அதென்ன, எஜமானனைப் போல வேலை செய்வதாவது? அடிமையைப் போல வேலை செய்வதாவது?
ஒரு முதியோர் இல்லம் இருக்கிறது. ஆதரவற்ற முதியவர்களுக்கான இலவச இல்லம். அங்கு பணியாற்றுபவர்களில் மூன்று வகையினர் இருக்கிறார்கள் .”பெரிசுகள். சரியான ரவுசுகள். இங்கே வந்து மாட்டிக் கொண்டோம். என்ன செய்வது? வயிற்றுப்பாடு இருக்கிறதே?” என்பவர்கள் ஒரு வகை..” நமக்கு இந்த ட்யூட்டி கொடுத்திருக்கிறார்கள்” என்று கொடுத்த வேலையைச் செய்பவர்கள் ஒரு வகை. மூன்றாவது வகையினர் ,”பாவம்! ஆதரவற்ற நிலையில் வந்திருக்கிறார்கள். நம் பொறுப்பில் இருக்கிறார்கள். அவர்களைச்  சந்தோஷமாக  வைத்துக் கொள்வது நம் கடமை” என்று கனிவோடு பணி புரிகிறார்கள். முதல் வகையினர் அடிமையைப் போல் பணி புரிபவர்கள். .கொல்லப் பயன்படும் கீழ். இரண்டாவது வகை சொல்லப் பயன்படும் சான்றோர் என்பதில் தவறில்லை. நல்லபடி உற்சாகப்படுத்தினால் அவர்கள் தாமாகவே பொறுப்புணர்ந்து செயல்படும் வாய்ப்பு இருக்கிறது. மூன்றாவது வகையினரே எஜமானரைப் போல் பணியாற்றுபவர்கள். பிறர் கண்காணிக்கிறார்கள் என்பதற்காக இல்லாமல்,,கடமை என்பதற்காக மட்டுமே இல்லாமல் பொறுப்பைத் தம் தோள்களில் சுமந்து செயலாற்றுபவர்களே எஜமானர்கள் போல் உழைப்பவர்கள். நிர்வாக இயலில் இதை ownership” என்பார்கள்.
எஜமானரைப் போல் பணி செய்வது  அன்பு கலந்து பணி செய்வது. பொறுப்பைத் தம் தோள்களில் சுமந்து பணி செய்வது. .பிரதிபலன் எதிர்பாராது பணி செய்வது. இது பற்றி சுவாமிஜி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்:
“சுதந்திரமாக வேலை பாருங்கள். அன்புடன் வேலை பாருங்கள். அன்பு என்ற வார்த்தை புரிந்துகொள்ளக் கஷ்டமானது. சுதந்திரமானவர்களுக்கன்றி அன்பு வராது. அடிமையிடம் தூய அன்பு இருப்பது சாத்தியமில்லை. ஓர் அடிமையை விலைக்கு வாங்கி சங்கிலியால் பிணைத்து  வேலை செய்யக் கட்டளை இட்டால் மங்குமங்கென வேலை செய்வான். ஆனால் அவனிடம் அன்பு இருக்காது. தன்னலம் கருதிச் செய்யும் எந்த வேலையும் அடிமை வேலையே. நம்மை நாமே சோதித்துப் பார்த்துக் கொள்ளலாம். அன்போடு செய்யும் எந்த வேலையும் அமைதியையும் ஆனந்தத்தையும் தராமல் இருக்காது. உண்மை அன்பு கொடுப்பவருக்கோ பெறுபவருக்கோ துன்பம் தராது. ஒரு காதலன். காதலி தனக்கே தனக்காக வாழவேண்டும் என நினைக்கிறான். அவளது ஒவ்வொரு செயலையும் கண்காணிக்க முயல்கிறான். வேறு யாருடனோ பழகினால் பொறாமைப் படுகிறான். தன் பக்கத்திலேயே இருக்க வேண்டும், தான் சொல்லும்போதுதான் சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறான். அவன் அவளுக்கு அடிமை. அவள் தனக்கு அடிமையாய் இருக்க வேண்டும் என்று நினைக்கிறான். இது உண்மை அன்பு அல்ல: ஏனெனில் இது உளைச்சல் தருகிறதே? இது அன்பு என்று பெயர் சூட்டிக்கொண்ட ஏதோ ஒன்று.
உங்கள் கணவரை, மனைவியை, குழந்தைகளை, இந்தப் பரந்த உலகத்தை ,ப்ரபஞ்சத்தை எந்தவிதமான துன்பமோ, பொறாமையோ சுயநல சிந்தனையோ இல்லாத வகையில் நேசிப்பதில் வெற்றீ பெற்று  விட்டீர்கள் என்றால் பற்றற்ற நிலைக்கு நீங்கள் தயாராகி விட்டீர்கள் என்று அர்த்தம்.
உண்மை அன்பு பந்தப் படுத்துவதில்லை. எங்கு பந்தம் இருக்கிறதோ,அங்கு நிலவுவது உடலின் வேட்கைதான். உண்மை அன்புடையவர்கள் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் துன்பப்பட மாட்டார்கள். அன்பு நிலைத்திருக்கும்.
உங்கள் குழந்தைகளுக்கு ஏதாவது செய்வதற்கு பிரதியாக நீங்கள் எதையும் எதிர்பார்க்கிறீர்களா,என்ன?  தனி நபருக்கு, நகரத்துக்கு, நாட்டுக்கு எது செய்தாலும் இவ்வாறே பிரதிபலன் எதிர்பாராதிருங்கள் .உலகத்துக்காக நீங்கள் செய்வது எதுவும் பலன் கருதாது செவது என்றால் உங்களிடம் பற்று எதுவும் இருக்காது. பலனை எதிர்பார்ப்பதாலேயே பற்று உண்டாகிறது.
அடிமையாய் உழைப்பது, தன்னலத்தையும் பந்தத்தையும் உருவாக்குகிறது என்றால்,நம் மனத்துக்கு நாமே தலைவராக இருந்து கொண்டு பணி புரிவது பற்றின்மை என்னும் பேரானந்தத்தைத் தருகிறது

செய்கிற வேலைக்கு முழுப் பொறுப்பையும் நாமே ஏற்றுக் கொள்கிற போதுதான் நம்மால் சிறப்பாகப் பணி புரிய இயலும். சின்ன குழந்தை ஒன்றை உங்கள் கையில் கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த வினாடியே உங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றம் காண்பீர்கள். மற்றபடி நீங்கள் எப்படி இருந்தாலும்,அந்த வினாடியில் உங்களிடம் தன்னலம் என்பது எள்ளளவும் இருக்காது. உங்கள் மனத்தில் எந்தக் கிரிமினல் எண்ணங்கள் இருந்தாலும்  அவை மறைந்து விடும். பொறுப்பு உங்கள் மீது சுமத்தப் பட்டவுடன்  உங்கள் குணமே மாறி விடும். இப்படித்தான் முழுப் பொறுப்பையும் நம் தோள்களில் சுமந்து விட்டால் நாம் யாரிடமும் எதுவும் கேட்டுக் கொண்டிருக்க வேண்டியதில்லை. நமது பாரங்களைச் சுமத்தி வைக்க “சாமி” யாரும் இல்லை. நாமேதான் நமது பணிக்கு முழுப் பொறுப்பு என்னும்போது நமது உச்சகட்ட சிறப்பு நிலையில் பணி புரிவோம்!

Wednesday, 2 August 2017

பணியின் மூலம் பேரானந்தம் (13)


இரண்டு சின்ன, பெரிய விஷயங்கள்.

கடமையில் வெற்றி பெற சுவாமிஜி இரண்டு  “சின்ன” விஷயங்களைச் சொல்வார். அவை மிகவும் முக்கியமானவை.
“நன்றே செய்க; இன்றே செய்க!” என்பது ஒன்று.
நல்லது, சரி, செய்யவேண்டும் என்று நமக்குத் தோன்றுகிற விஷயத்தை உடனே செய்து விட வேண்டும். தள்ளிப்போடல் காலத்திருடன் என்று சொல்லக் கேட்டிருக்கிறோமல்லவா?
இதனால்  என்ன பலன் கி.டைக்கும் என்று யோசித்து யோசித்துச் செயல் படுபவன் ஒரு காரியத்தையும் சாதிக்க மாட்டான். இது நல்லது உண்மையானது என்று ஒரு காரியத்தைப் புரிந்து கொண்டால் அதை உடனே செய்து முடித்து விட வேண்டும். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்றெல்லாம் கணக்குப் போட்டுக் கொண்டிருப்பதில் என்ன லாபம்? இதை Analysis Paralysis என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.
கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய இன்னொரு விஷயம் ,நாம் நல்லதொரு பணியை எடுத்துச் செய்யும்போது, எதிர்மறையாகப் பேசி நம்மைத் தடுமாற வைக்கும் சக்திகள் நம்மைச் சுற்றியே நிறைய இருக்கும்.  “வெட்டி வேலை; உன்னால் முடியுமா? ஆழம் தெரியாமல் காலை விடாதே! உன்னை விடப் பெரிய பெரிய பிரஹஸ்பதிகள் எல்லாம் முயன்று தோற்றுப் போன விஷயம்” என்று பலகுரல் மன்னர்களாக இந்த எதிர்மறை உணர்வுகள் வடிவெடுக்கும். முதலில் ஏளனம்; பின்னர் எதிர்ப்பு; காரியம் முடிந்ததும் “செம அதிர்ஷ்டம்” என்று. இவையெல்லாம் வெற்றியாளர்கள் எல்லாரும் சந்திக்கிற விஷயம்தாம். சர்ச்சில் சொன்னது போல,”Never Never Never Give up!” நாமாக சுதந்திரமாகச் சிந்தித்து முடிவெடுத்து ஒரு காரியத்திலிருந்து விடுவித்துக்கொள்வது வேறு விஷயம்.
இதுபோலப் பல தடைகளையும் சந்தித்து, எதிர்ப்புகளையும் கடந்து, நெருப்பாறுகளை நீந்தித்தான் சுவாமிஜி அரும்பணி ஆற்றியிருக்கிறார்.
இந்த தலைப்பை ஒட்டி நான் எழுதிய கவிதை ஒன்றை இங்கே பதிவு செய்யும் சபலத்தை என்னால் தவிர்க்க முடியவில்லை
. நாயகன்
கூட இருந்தவர்கள் கிசுகிசுத்துக் கொண்டிருந்தார்,
சுற்றி இருந்தவர்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
என்ன விஷயமென்று இவனுக்குப் புரியவில்லை.
முன்னுள்ள பணியொன்றே முக்கியமாய்த்தான் கருதி
முழுமூச்சாய் முனைந்தான்; முடித்து விட்டான் வெற்றியுடன்!
செயல் முடித்த காரணத்தால் ஜெயக்கொடியை ஏந்தி வந்தான்.
பார்த்திருந்தோர் இப்போது பரபரப்பாய்ச் சூழ்ந்தார்கள்!
முடியாத செயலாச்சே? முன்னெவரும் செய்ததில்லை!
எப்படி நீ சாதித்தாய்? என்ன மர்மம் என்றார்கள்.
மந்திரம்தான் அறிவாயா? மாயம் எதும் செய்தாயா?
அரை நிமிஷம் சிந்தித்தான்; அலட்டலின்றித் தான்சொன்னான்.
மந்திரமும் தெரியாது; மாயம் எதும் செய்யவில்லை!
தொடங்கினேன்; தொடர்ந்தேன்; முடித்து விட்டேன் அவ்வளவே!
முடியாது எனும் சேதி முன்பெனக்குத் தெரிந்திருந்தால்
ஒருவேளை தொடங்காமல் ஓய்வாகக் கிடந்திருப்பேன்!
சிரித்துக் கொண்டிருந்தவர்கள் சிலிர்த்தெழுந்து நின்றார்கள்!
நகையாட வந்தவர்கள் நாயகனே என்றார்கள்!



Tuesday, 1 August 2017

பணியின் மூலம் பேரானந்தம் (12)


 வெற்றிக்கு வழிகள் நேர்மையும் உண்மையும்

”நிச்சயம் வெல்லலாம் நேரான பாதையில்”
—சேவாலயா வெளியிட்டுள்ள புத்தகத்தின் தலைப்பு
-www.sevalaya.org இணைய தளத்திலிருந்து இலவசமாகத் தரவிறக்கிக் கொள்ளலாம்.

சுவாமிஜியின் கருத்துகள்:
வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களைப் பார்க்கும்போது அவர்கள் அனைவரிடமும் ஒரு தனித்தன்மையைக் காணலாம். வெற்றி பெற்ற ஒவ்வொரு தனிமனிதனிடமும் அவனது வெற்றிக்குப் பின்னால் அசாதாரணமான நேர்மை, அளவிட்டுச் சொல்லமுடியாத உண்மைப்பற்று இருப்பதைக் காண முடியும். அத்தகையவர்கள் வெற்றி பெறுவதற்குக் காரணம் இந்தத் தனித்தன்மையே.
துளிக்கூடத் தன்னலமே இல்லாதவர்கள் என்று அவர்களைக் கூற முடியாவிட்டாலும் கூட, அந்தப் பாதையில் அவர்கள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நிச்சயம் சொல்ல முடியும். துளிக்கூடத் தன்னலக் கலப்பு இல்லாமல் இருந்தால் அவர்கள் புத்தர் அல்லது இயேசுவின் நிலைக்கு உயர்ந்திருக்க முடியும்.
உண்மையும் நேர்மையும் நிச்சயம் வெற்றி பெறும் என்றாலும் அதற்குக் காத்திருக்க வேண்டும். பொறுமை வேண்டும். பொறுமை இல்லாததால் பலரும் குறுக்கு வழியில் வெற்றியைத் தேடி அலைகிறார்கள். இதனால் அறநெறியிலிருந்து விலகித் தீயவர்கள் ஆகியவர்கள் பலர். இது நமது பலவீனம்; சக்தியின்மை..
வணிகத்தில்,தொழிலில்,நேர்மையாக இருந்தால் “கதைக்காகாது” என்று நம்மில் பலரும் நினைக்கிறோம். சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
காந்திஜியின் வாழ்க்கையிலிருந்து ஒரு பக்கத்தைப் புரட்டிப் பார்ப்போம்.
அவர் தென்னாப்பிரிக்காவில் மிக அதிக வருவாய் ஈட்டிய வெற்றிகரமான பாரிஸ்டர். இந்த வெற்றிக்குக் காரணம், அவர் திறமை மட்டுமல்லாது,அவர் கடைப்பிடித்த நேர்மையும் உண்மையும் கூட. கட்சிக்காரர் பக்கம் நியாயம் இருக்கிறது என்று தெரிந்தால் ஒழிய அவர் எந்த வழக்கையும் எடுத்துக் கொள்ள மாட்டார் பொய்ச்சாட்சி அழைக்கும் வழக்கமே கிடையாது. சாட்சிகளுக்கு இப்படிச் சொல்லு அப்படிச் சொல்லு என்று சொல்லிக் கொடுப்பதில்லை. தமது அத்யந்த நண்பரானாலும் தவற்றை ஒத்துக்கொண்டு தண்டனையை ஏற்றுக்கொள்ளும்படிச் சொல்வார்; என்றாலும் முழு முயற்சி எடுத்து மன்னிப்போ குறைந்த தண்டனையோ பெற முனைந்து செயல்படுவார். ஒருமுறை வழக்கு பாதி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தமது கட்சிக்காரர் பொய் சொல்லுகிறார் என்று தெரிய வந்ததும் வழக்கிலிருந்து விடுவித்துக் கொண்டு வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டார். இப்படி பைத்தியக்காரனாய் ஒரு வக்கீல் இருந்தால் யார் அவரிடம் கேஸ் கொண்டு வருவார்கள்?
 “தவறான வழக்கை ஏன் எடுத்த்க்கொண்டு வாதாடுகிறீர்கள்?” என்று அண்மையில் தொலைக்காட்சிப் பேட்டியில் ஒரு வழக்கறிஞரைக் கேட்டார்கள். அதற்கு அவர் சொன்ன பதில்: “என்ன செய்வது? இல்லாவிட்டால் அவர் வேறு வக்கீலிடம் போய் விடுவாரே?” நீயாயமாகத்தான் படுகிறது.

ஆனால் காந்திஜியின் விஷயத்தில் நடந்தது வேறு. நியாயமான கட்சிக்காரர்கள் அனைவரும் காந்திஜியை நாடி வந்தார்கள். நீத்பதிகளுக்கும் காந்திஜி ஏற்று நடத்தும் வழக்குகள் நேர்மையானவை என்று தெரிய வந்ததால் அவரது வெற்றி விகிதம் அபரிமிதமானது. வழக்குகள் மேலும் தேடி வந்தன. வருவாய் கொழித்தது.