Friday, 2 January 2026
விரஜா நதி
விரஜா நதி.
உடற்கூட்டை விட்டெனது
உள்ளிருந்து ஏதொன்றோ
தடைகடந்து செல்கிறது!
சஞ்சாரம் தொடர்கிறது,
காரிருளின் உள்ளுக்குள்
காற்றிலொரு தூசியென.
வாரியெனை எடுத்து
வழி செலுத்தும் புதிரொன்று!
இருள்கண்டு அஞ்சுகையில்
இரு; கொஞ்சம் பொறு என்னும்.
இல்லாத கரம்கொண்டு
இங்கிதமாய் அணைத்தேகும்!
சற்றே தொடர்ந்தவுடன்
ஜாஜ்வல்யப் பெரு வெளிச்சம்!
கற்றைகளாய் வந்தென்னைக்
களிகூரச் சூழ்கிறது!
கரைகண்ணில் தெரியாத
கடல்போன்ற நதி முன்னே
என்னை நிறுத்தி வைத்து
இனிமையெனத் தான்பேசும்.
விரஜா நதியிதுதான்;
விரைந்ததனுள் மூழ்கிக்கொள்!
சிரஞ்சீவி என்றும் நீ!
சிறு மாற்றம் அவ்வளவே!
புதியதொரு நகர் ஏகிப்
புது வாழ்வு அமைத்துக்கொள்!
புன்மையெலாம் தீர்த்துக்கொள்!
புண்ணியங்கள் சேர்த்துக்கொள்!
“வாழி!” எனச் சொல்லி
வந்தவிதம் தான் மறையும்!
***************************************************
நதிச் சுழிப்பில் மூழ்கிவிட
ஞாபகங்கள் தான் கரையும்!