Sunday, 4 January 2026

வெற்றியாளன்

 வெற்றியாளன்-தோல்வியாளன்—பாரதியார் என்ன சொல்கிறார்?


மனதில் எதைப்பற்றித் தீவிரமாகச் சிந்தித்து விரும்புகிறோமோ அது நிச்சயமாக நிறைவேறும். (Intense longing).

வெற்றியாளனின் செயல்பாடு இத்தகையதே.


தோல்வியாளன் கதை எப்படி?


ஏப்போதும் தாழ்வான சிந்தனை, மனச்சோர்வு, ஒரு நிலையான இலட்சியத்தில் உறுதியில்லாமல் மாறி மாறி அலைபாய்வது, ஒரு வேலையை எடுத்துக்கொள்ள முனையுமுன்னே, இடையூறுகளை எண்ணிக் கைவிட்டு விடுதல்,-இப்படியானவர்கள் குறிக்கோளை அடைய மாட்டார்கள்.


அவர்களது செயல்பாடு எப்படி இருக்கும்? 


“என் விதி” என்று நொந்து கொள்வார்கள். “அவன் பேச்சைக் கேட்டதனால்தான் இப்படி நடந்தது“ என்று நண்பர்கள் மீது குற்றம் சுமத்துவார்கள்.


அவன் எனக்குப் பரம விரோதி. சதி செய்து எனக்குத் தீங்கு செய்து விட்டான்” என்று இன்னொரு பலிகடாவைத் தெடுவார்கள்.


யாரைக் கெடுத்தாவது தன் வெற்றி பெற வேண்டும் என்று சூழ்ச்சிகளில் இறங்குவார்கள்.


வாயால் வடை சுட்டுக்கொண்டு காரியத்தில் இறங்காததற்கு  ஏதாவது நொள்ளை சாஸ்திரத்தை ஆதாரம் சொல்வார்கள் 


 தினம் தினம் ஜாதகக் கட்டைத் தூக்கிக்கொண்டு எந்த நேரத்தில் தொடங்கினால் காரியம் வெற்றி பெறும் என்று ஆராய்ந்து கொண்……..டே,,,,, இருப்பார்கள்.



 ‘கடவுள் என்று ஒருவர் இல்லவே இல்லை. நான் மூன்று வேளை ஸ்நானம் செய்கிறேன்; நாலு வேளை பூஜை செய்கிறேன்;அபிஷேகம் பூஜை என்று வாரி இறைக்கிறேன்; ஒரு பலனும் இல்லை. அவனைப் பாருங்கள் ;ஸ்வாமி நினைப்பே இல்லை. வெற்றி மீது வெற்றியாக வாரிக் குவிக்கிறான் என்று அங்கலாய்த்துக் கொள்வார்கள்.


ஒன்றை மட்டும் அவர்கள் மறந்து விடுகிறார்கள்.


ஒருமித்த சிந்தனை ,சோர்வு வாராத மனத்திட்பம்தான் வெற்றிக்கனியைத் தரும் என்பது புரியாமல் கண்ணிழந்தவன் காட்டில் திரிவதுபோல,அலைந்து அலமருகிறார்கள்.


பாரதியார் பாடலைப் பார்ப்போம்;


..சூழு மாய வுலகினிற் காணுறும்

தோற்றம் யாவையும் மானத மாகுமால்

ஆழு நெஞ்சகத் தாசையின் றுள்ளதேல்,

அதனு டைப்பொருள் நாளை விளைந்திடும்.

தாழு முள்ளத்தர், சோர்வினர், ஆடுபோல்

தாவித் தாவி பலபொருள் நாடுவோர்

வீழு மோரிடை யூற்றினிக் கஞ்சுவோர்

விரும்பும் யாவும் பெறாரிவர் தாமன்றே.


விதியை நோவர்,தம் நண்பரைத் தூற்றுவர்,

வெகுளி பொங்கிப் பகைவரை நிந்திப்பர்,

சதிகள் செய்வர்,பொய்ச் சாத்திரம் பேசுவர்

சாத கங்கள் புரட்டுவர் பொய்ம்மைசேர்

மதி யினிற்புலை நாத்திகங் கூறுவர் ;

மாய்ந்திடாத நிறைந்த விருப்பமே

கதிகள் யாவும் தருமென லோர்ந்திடார்;

கண்ணி லாதவர் போலத் திகைப்பர்காண்!


(கனவு-12,13)

ஜ!ப்பா

 ஜிப்பாவும் வேட்டியுமே சீருடையாய் நானேற்றேன்

ஜிப்பெங்கும் சிக்காது தொந்திபட்டன்---டப்பென்(று)

உடைந்து தெறிக்காது சௌகரியம் ஆதலினால்

உடையென்று கொண்டு விட்டேன்.

வேள்வி

 வேள்வி

உமா-60கள்

நிற்க நிதானிக்க

நினைவென்னும் தவம் புரியச்

சற்றும் இடமில்லாச்

சந்தடியில் சிறுபொழுது.


பரபரப்பு  மற்றுமொரு

பரபரபரப்பை விழுக்குமுனர்

பெருமூச்சாய்ச் சிந்தனையைப்

புரட்டிடவோர் அவகாசம்.


ஊணுறக்கம் சப்பென்ற

உத்தியோகம் நெறியென்றால்

மானுடத்துக் கென்னபயன்

மாபாவி வாழ்க்கையினால்?


ஒருகணம் இவ்வேதனைதான்

உலுக்கும்;மற்றோர் எண்ணம்

புரளும்;புது உற்சாகம்

பூரிப்புக் கரைகாணும்!

இன்பதுன்பச் சுவைமிக்க 

இவ்வுலகப் பூரனத்தில்

என்பங்கோ கர்மமெனும் 

ஏகாந்தப் பெருவேள்வி! 

கவிஞர் திருலோக சீதாராம் இந்தக்கவிதையைத் தன் கணீர்க் குரலில் பாடிச் சிறப்பித்தது பெருமையுடன் நினைவுக்கு வருகிறது. 

கவிதை எழுதிக் கிறுக்கு

 வேலைக்குப் போகாமல் வேலைவெட்டி இல்லாமல்

காலத்தைப் போக்குவது கண்டிப்பாய்-ஏலாது

நண்பாஉன்  சிந்தனைக்கு ஓர்வார்த்தை ஈற்றடிக்கு

வெண்பா எழுதிக் கிறுக்கு. 

வீண் அவஸ்தை

 வீண் அவஸ்தை

(திருச்சித் தமிழ் எழுத்தாளர் சங்க ஆண்டுமலர்-1960)

எடுத்தெறிந்தும் உறுத்துகிற

முள்ளைப்போல

அடிமனத்துப் பரப்புக்குள்

அரிக்கிறது;நினைவில்லை;

நினைப்பென்று சொல்லும்

நிலையில்லை;பூர்வ ஜன்மம்;

அதன்முன்னால்,

அதற்கும் முன்னால்,

நினைத்துத் தொடராமல்

நிர்க்கதியாய் விட்டதொரு

கருத்துத் துணுக்கொன்று

கரிக்கிறது.

கண்டுமறந்த பழங்

கனவுக்குள் வந்திட்ட

காட்சியைப்போல்.

கசக்கிப் பிழிவதனால்

கண்டெடுக்க முடிவதில்லை.

வேதனைதான்.

நைந்தமனச் சிக்கெடுத்து

நினைவுக்கு நுனிகாண

முயல்கின்றேன்.

இயலவிலை.

வீண் அவஸ்தை.

Friday, 2 January 2026

 

விரஜா நதி

  விரஜா நதி.


உடற்கூட்டை விட்டெனது

உள்ளிருந்து ஏதொன்றோ

தடைகடந்து செல்கிறது!

சஞ்சாரம் தொடர்கிறது,

காரிருளின் உள்ளுக்குள்

காற்றிலொரு தூசியென.

வாரியெனை எடுத்து

வழி செலுத்தும் புதிரொன்று!

இருள்கண்டு அஞ்சுகையில்

இரு; கொஞ்சம் பொறு என்னும்.

இல்லாத கரம்கொண்டு

இங்கிதமாய் அணைத்தேகும்!

சற்றே தொடர்ந்தவுடன்

ஜாஜ்வல்யப் பெரு வெளிச்சம்!

கற்றைகளாய் வந்தென்னைக்

களிகூரச் சூழ்கிறது!


கரைகண்ணில் தெரியாத

கடல்போன்ற நதி முன்னே

என்னை நிறுத்தி வைத்து

இனிமையெனத் தான்பேசும்.

விரஜா நதியிதுதான்;

விரைந்ததனுள் மூழ்கிக்கொள்!

சிரஞ்சீவி என்றும் நீ!

சிறு மாற்றம் அவ்வளவே!

புதியதொரு நகர் ஏகிப்

புது வாழ்வு அமைத்துக்கொள்!

புன்மையெலாம் தீர்த்துக்கொள்!

புண்ணியங்கள் சேர்த்துக்கொள்!

“வாழி!” எனச் சொல்லி 

வந்தவிதம் தான் மறையும்!

***************************************************

நதிச் சுழிப்பில் மூழ்கிவிட

ஞாபகங்கள் தான் கரையும்!