Monday, 3 July 2017

பணியின் மூலம் பேரானந்தம்

பணியின் மூலம் பேரானந்தம்
(Work as a source of joy.)
(சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டது.)
1.   பணி பணிக்காகவே!
கடமையாவன: தன்னைக் கட்டுதல்
பிறர்துயர் தீர்த்தல், பிறர்நலம் வேண்டுதல்..
                     பாரதியார்.
இன்பம் விழையான் வினைவிழை2வான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்.
                     திருக்குறள்
தனக்கு வரும் இன்பத்தை விரும்பாதவனாகி, செயல் முடித்தலையே விரும்புபவன் ,தன் உறவினர், நண்பர் சான்றோர் ஆகியோரின் துன்பத்தை அகற்றி அவர்களைத் தாங்கும் தூண் ஆவான்.
      ஒரு நொடி கூட யாரும் வேலை செய்யாமல் இருப்பதில்லை. பேசுவது, கேட்பது, மூச்சு விடுவது, நடப்பது எல்லாமே வேலைதான். மனத்தாலோ உடலாலோ நாம் செய்யும் எல்லாமே வேலைதான்.
நாம் இப்போது பேசுவது, சுபாவத்தாலோ, சமுதாயத்தில் நமக்கு அமைந்த இடத்தினாலோ, ஏற்பட்டுள்ள கடமைகளைப்பற்றி..
சான்றோர்கள் நாம் மேற்கொள்கிற வேலையை புத்திசாலித்தனமாகச் செய்ய வேண்டும் என்கிறார்கள். அதுவே ஒரு அறிவியலாம்..எப்படி வேலை செய்வது என்று கற்றுக்கொள்வதன் மூலம் மேலதிகப் பலன்களைப் பெறலாம் என்கிறார்கள் .நாம் நினவில் கொள்ள வேண்டியது, எல்லாப் பணிகளும் நமக்குள் இருக்கிற ஆற்றலை மேலும் வளர்த்துக்கொள்ள  உதவுகின்றன என்பதுதான்..
உழைப்பதன் நோக்கம் என்ன? மக்கள் பலரும் பலவிதமான லாபம் கருதி உழைக்கிறார்கள். பணம், புகழ், பதவி, இந்த உலகில் தங்கள் பெயரை நிலைநாட்டிவிட்டுச் செல்ல வேண்டும் என்ற பலன் கருதி உழைப்பவர்கள் இருக்கிறார்கள். நாம் செய்ய வேண்டியது பணிக்காகவே பணி. விசித்திரமாக இல்லை?
இப்படிப் பணியாற்றுபவர்கள் இல்லாமல் இல்லை. தன் நலத்துக்காகவே இல்லாமல், பிறர் நலத்தையே குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றுபவர்கள் இருக்கிறார்கள். அவர்களும் மேலானவர்களே. சொந்த நலமே கருதாமல் பணியாற்றுவது என்பது ஆரம்பத்தில் கஷ்டமான காரியம்தான். முயன்று பழகிக் கொள்ள வேண்டும். இதற்கு மிகுந்த சுய கட்டுப்பாடு தேவை.. தன்னலம் கருதிப் பணியாற்றும்போது ஆற்றல் விரயமாகிறது. பணியையே முன்னிறுத்திப் பணி புரியும்போது, சுய கட்டுப்பாட்டினால், மாபெரும் ஆற்றல்கள் வெளியாகின்றன. தீவிர சுய கட்டுப்பாடு என்பது மாபெரும் ஆற்றலின் வெளிப்பாடு ஆகும். நமது புறச் செயல்கள் அத்தனையையும் விட அதிகமான ஆற்றலை வெளிப்படுத்துவது சுய கட்டுப்பாடுதான். நான்கு குதிரைகள் பூட்டிய ஒரு வண்டி மலைச்சரிவில் கட்டுப்பாடின்றி வேகமாக வருகிறது. அல்லது வண்டியோட்டி குதிரைகளை அடக்குகிறான். இவற்றில் எது அதிக சக்தியின் வெளிப்பாடு? தறிகெட்டு ஓடுவதா? அடக்கி நிறுத்துவதா? ஒரு பீரங்கிக்குண்டு வான்வழியே நெடுந்தூரம் விரைந்து சென்று கீழே விழுகிறது. மற்றொன்று வழியில் சுவரில் மோதி அதன் விளைவாக அபரிமிதமான வெப்பத்தை உருவாக்குகிறது.
கட்டுப்பாடின்றி வெளியாகும் ஒவ்வொரு சக்தியும் விரயமாகிறது.    அது உங்களுக்கு ஆற்றலைத் தந்து பயன்படாது. ஆனால் அதையே அடக்கி ஆண்டால் அது ஆற்றலை வளர்க்கும். இத்தகைய சுய கட்டுப்பாடுதான் ஒரு மகத்தான, மனத்திட்பத்தை, சங்கல்பத்தை உருவாக்கும். இந்தப் பண்புதான் ஓர் இயேசுநாதரையோ புத்தரையோ உருவாக்க வல்லது.
தன்னலமின்றிப் பணி புரிவதனால் என்ன பயன் என்ற கேள்விக்குச்
சுருக்கமான பதில், சிறப்பாகப் பணி புரிய முடியும். நமது ஆற்றல் அபரிமிதமாக அதிகரிக்கும். நாடாவிட்டாலும், அத்தகைய பணிகளின் விளைவுகள் இயல்பாகவே நம்மை வந்தடையும் .நாள் பிடிக்கலாம். பலரும் இதைப் புரிந்து கொள்வதில்லை. பரபரக்கிறார்கள்.
தன்னலமின்றிப் பணியாற்றுவது சிறந்தது என்று புரிந்து கொண்டு விட்டோம் ஆனால், அது இலகுவாகக் கை கூடுவதில்லை. தன்னைக் கட்டுதல் அவ்வளவு எளிதில்லை..என்ன செய்வது? ஆரம்பித்து விடுவோம். அவ்வளவுதான். அவ்வப்போது வருகிற வேலையைச் செய்வோம் .ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னலமின்றி இருக்கப் பயில்வோம் .நம்மை வேலை செய்யத் தூண்டும் உந்து சக்தி எது என்று அவ்வப்போது சிந்தித்துப் பார்ப்போம். ஆரம்ப வருஷங்களில் ,விதிவிலக்கில்லாமல் நமது நோக்கங்கள் எல்லமே தன்னலமாக இருப்பதைக் காண்போம். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக, விடாமுயற்சியினால், இந்தத் தன்னலம் கரைந்து போகும். நிறைவாக உண்மையில் தன்னலக் கலப்பே இல்லாமல் நாம் பணிபுரியக்கூடிய அந்த நாள் வரும். ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் வாழ்க்கைப்பாதையில் முட்டி மோதிக்கொண்டு செல்கையில் நாம் துளிக்கூட சுயநலக் கலப்பு இல்லாதவர்களாக மாறும் வேளை வரும் என்று நம்புவோம். அந்த நிலை வரும் தருணம் நமது அத்தனை ஆற்றல்களும் ஒருமுகப்படும். நமக்கே உரிய ஞானமும் வெளிப்படும்.




Friday, 30 June 2017

மனக்குழந்தை.

மனக்குழந்தை.
அத்துமீறுகிறான்
அடித்துநொறுக்கிடினும்
அடங்க மறுக்கிறான்.
அவன்போக்கில் விட்டுவிட்டு
கவனம் மட்டும் வைத்திருந்தால்
கட்டின பசுப்போல
கிட்டவந்து நிற்கின்றான்.


Monday, 26 June 2017

உள்மனதின் சந்நிதியில்..


அத்தனையும் விட்டுவிடு; ஆன்ம விசாரம்செய்;
      அதுவொன்றே உன்றனக்குப் பேரமைதி தந்து விடும்!
அத்துவிதம் சித்திக்கும்; ஆனந்த மோனலயம்!
      ஆங்கேயோர் தத்துவரின் அழுத்தக் குரல்கேட்கும்!
பஜனையொரு நெறியுண்டு; பரவசத்தின் எல்லைக்குப்
      பக்தியினால் சேர்த்துவிடும்; பாவனைகள் மேலோங்கும்!
நிஜமிதுவே பற்றிக்கொள்; நித்தநித்தம் சந்தோஷம்!
      நினைப்பதற்கு வேறேன்ன? நடமிட்டோர் குரலிசைக்கும்!
சந்திஜப தபங்களினும் பிரமயக்ஞம் தினவேள்வி
      சாத்திரங்கள் சொன்னபடி செய்தாயா? அதனோடு
நிந்தையென விலக்கிவைத்த நிஷித்தகர்மம் விட்டாயா?
      நிச்சயமாய் நரகம்தான்; நிலைiகுலைத்தோர் குரல்கேட்கும்!
சுத்தியுள்ள எத்தனைபேர் தத்தளித்துக் கிடக்கின்றார்?
      சிறிதேனும் அவருக்குச் சேவைசெய  நினைத்தாயா?
பித்தாக அலைபவனே! அதுதாண்டா செயல்வேள்வி
      பிடித்துக்கொள்; மோட்சம்தான்; பேசுமிங்கே ஓர்கொள்கை!
மூக்கைத்தான் பிடித்தேநீ மூச்சடக்கக் கற்றாயா?
      மூழ்கியே நெஞ்சுக்குள் முத்துக் குளித்தாயா?
சீக்கிரத்தில் முத்திபெற இதுவன்றோ ஏற்றவழி?
      சிந்தனைதான் கலங்குவதேன்? தொடங்கிடெனும் குரலொன்று!
வாயினால் பாடியே மனத்தினால் சிந்திப்பாய்
      வாழ்நாளில்,முன்பிறப்பில் செய்தபிழை அத்தனையும்
தீயினில் தூசாகும் என்றவளின் பாசுரத்தை
      சிலநூல்கள் எடுத்தோதும்; சின்னமனம் ஏற்பதற்கு!
இறைவனைநாம் நேராகப் பற்றுவதா? இது விந்தை!
      ஏற்றுவிடு குருஒருவர்! அவர்தானே நல்வழியில்
நெறிப்படுத்தி ஈசனிடம் சேர்க்கத் திறம் வாய்ந்தார்?
      நேசமுடன் குரலொன்று மேலுமெனைக் குழப்பிவிடும்!
ஒற்றையாய்க் குரலொன்று உள்மனதின் சந்நிதியில்;  
      உனக்கென்றே ஓர்வழியை உளமாரச் சொன்னேனே?
மற்றவர்கள் சொல்வதனை உள்வாங்கிக் கொண்டாலும்
      மனம்காட்டும் வெளிச்சத்தில் நடைபோடு ஈசனிடம்!
அவரவர்தாம் அறிவகையில் அடைந்திடலாம் பரம்பொருளை!
      ஆயிரமாம் கோடிப்பேர் அத்தனைபேர் இருந்தாலும்
அவரவர்க்குத் தனிவழியே; அவரவர்க்கே ஏற்றபடி!
      ஆரம்பி சாதனையை; ஆண்டவனே துணைநிற்பார்!




Monday, 22 May 2017

ஜில்காட்டுச் செம்மல்களே!

ஜில்காட்டுச் செம்மல்களே!
எல்.ஐ.சி. திருச்சி கிளையில் பணி ஆற்றியபோது  இளம் நண்பர்கள் ஒன்று சேர்ந்து JILLKOT SOCIETY என்று முறைப்படுத்தப் படாத ஒரு அமைப்பை இயக்கி வந்தோம். (Jollity,Integrity,Liveliness,liberality,kindliness,Optimism  Team spirit என்பதன் Acronym)   இது.எஸ்.செளந்தரராஜன், ஏ,குப்புஸ்வாமி என்ற நண்பர்கள் மதுரைக்கு மாற்றலாகிச் சென்றபோது(ஜூலை1959) வாசித்த கவிதை.
தெய்வநகர் மீனாட்சித்
      திருமதுரைப் பதியிருந்து
செய்தவத்தின் மேன்மையினால்
      சீலத்தால் அன்பினுடன்
சிலகாலம் எங்களுடன்
      சிரித்து மகிழ்ந்துறவாடி
பலநாளின் கேண்மையினைப்
      பயிர்செய்த பேரன்பீர்!
உற்சாகம்,நேர்மை,
      உயிர்த்துடிப்பு,தாராளம்,
நற்கனிவு, எதிர்நோக்கும்
      நம்பிக்கை,ஒத்துழைப்பு
எல்லாமாய் இணைந்திருக்கும்
      இங்கிதத்துச் செல்வர்காள்!
ஜில்காட்டுச் செம்மல்களே!
      சிந்தனையின் தூய்மையரே!
சீலத்தைக் கேண்மையினைச்
      சிதைத்து இரு உருவாக்கி
மேலுக்கு இரண்டான
      மெய்யாக்கி ஒன்றிவிட்ட
உயிர் உண்டு என்றுவிடில்
      உண்மையென நம்பிடுவோம்!
உயர்குப்பு ஸ்வாமியுடன்
      உத்தமராம் செளந்தரராஜ்!
இரவெல்லாம் தண்மதியம்
      இருளகற்றிப் பகல் வரவும்
இரவிக்கு வழிவிட்டு
      ஏகுதல்போல் செல்கின்றிர்!
அன்பாலிவ் வையகத்தில்
      அத்தனையும் ஆகுமெனில்
வன்கடமைக் கட்டளையை
      உடைக்கமட்டும் ஆவதில்லை!
கண்ணறியா இடமொன்றில்
      கவின்மலரை வைத்தாலும்
வண்ணப்பூ வாசனையை
      மறைத்திட யார் வல்லவர்கள்?
நெடுந்தொலைவில் நின்றாலும்
      நினைவுக்குள் நீர் இருப்பீர்!
தடைசெய்ய இதயத்தைத்
      தொலைவுக்குச் சக்தியிலை!
எந்தநகர் சென்றாலும்
      எப்பதவி ஏற்றிடினும்
செந்தூர்வேல் துணையிருக்கும்;
      சேமமுறப் போய்வாரும்!
(செளந்தரராஜன் இளவயதிலேயே மறைந்துவிட்டார்; குப்புஸ்வாமி நான் தொலைத்த நண்பர்களில் ஒருவர்.)



Sunday, 21 May 2017

எங்கள் ஊர்!

எங்கள் ஊர்!
(சிவாஜி-1954)
காவிரி பாயுமூர்; கன்னலாம் செந்தமிழின்
காவலர்கள் பல்லோர் செறிந்தஊர்;-தாவினொடு
தீதிலார் சேர்ந்தவூர்; திண்மை மிகுந்தவூர்
ஓதுமூர் எம்திருச்சி யூர்.

குன்றம் விளங்குமூர்; குன்றா எழிலுடைய
இன்றமிழர் நற்கலைகள் காணுமூர்;-பொன்னியாள்
சீரங்கன் பொன்னடியைப் போற்றுமூர்; ஈசனுறை
சீரியவூர் நற்றிருச்சி யூர்.

பாரசம் தோய்ந்தவூர்; பண்பார்ந்த செந்தமிழின்
சீரதிகம் பெற்றுச் சிறந்தவூர்;-கண்டறிந்தார்
காவியத்தில் போற்றும் கவினுறுமூர்; சீரென்றும்
மேவியவூர் எம்திருச்சி யூர்.

“சோழ வளநாடு சோறுடைத்து” அந்நாட்டில்
வேழக் கரும்பினொடு செந்நெல்லும்;-மற்றெல்லா
நல்லனவும் ஓங்கச் செழித்த பெருந் திருவூர்
தொல்பெருமை நற்றிருச்சி யூர்.

கல்வி கமழும் ஊர்; காண்கின்ற திக்கெல்லாம்
சொல்லும் எழுத்தும் செழிக்குமூர்-நாவிலுறை
சொல்மகளே சோதிதரப் பாங்குடனே சீரியநற்
கல்வி ஒளி பெறுமூர் காண்.



Sunday, 26 March 2017

சென்னி நிமிர்ந்திடும் சீர்மிகும் பாரதம்

சென்னி நிமிர்ந்திடும் சீர்மிகும் பாரதம்!
Quit India தீர்மானத்தை ஒட்டிய காந்திஜியின் 1942 பேச்சிலிருந்து சில பகுதிகள்.
இங்கிலாந்திலிருந்து இருங்கடல் தாண்டி
இந்தியா வந்து இன்றெமை ஆளும்
ஆங்கிலேயனை விட்டு விலகென
அடித்துச் சொல்லும் அண்ணலே நீங்கள்
இருபதில் இருந்த அந்த காந்தியா?
இன்னமும் அஹிம்சை உண்டே அன்றோ?
….     ---------  0000000-------
அந்த காந்திதான்; அதே காந்திதான்!
அடிப்படைக் கொள்கையில் மாற்றம் இல்லை!
அஹிம்சையில் நாட்டம் அன்றும் இன்றும்!
அழுத்தமும் கூட! அதிமிகத் தீவிரம்!
ஆண்டவன் தந்த அருட்கொடை அஹிம்சை!
அதற்கும் எனக்கும் வந்தது சோதனை!
இம்சையில் பூமி பற்றி எரியுது!
எங்கணும் அவலக் கூக்குரல் கேட்குது!
இறைவன் அளித்தான் திறமை எனக்கு.
முறையாய்ச் செலுத்தி முனையா விட்டால்.
வரத்தைப் பெற்றும் வாளா இருந்தால்
தரணியும் தூற்றும்; தலைவனும் நோவான்!
வரலாறு பலவும் விடுதலைப் போர்களை
வரைந்தது உண்டு; அவற்றில் தூயதாம்
மக்கள் இணைந்த மாசெதும் அற்ற
வீரப் போரெனில் இதுதான் அஃது!
விடுதலைப் போரில் வெற்றியைப் பெற்றிட
உபாயம் ஒன்றினை உரைக்கின்றேன் நான்!
“இப்போ திங்கே இந்தக் கணம் முதல்
விடுதலை பெற்றோம்; சுதந்திர புருஷர்!
ஏகாதி பத்தியம் எம்மை நசுக்கி
ஏறி மிதித்த நிலை இனியில்லை”
இந்த உறுதி பூணுவீ ரானால்
இந்த நிமிஷமே சுதந்திரக் காற்று!
“சுதந்திர வேட்கையைத் தந்தனன் இறைவன்!
சும்மா இருக்கும் சுகம் இனி இல்லை!
உணவு உடைக்கு இருப்பதற் கினிநான்
உம்மைச் சார்ந்திரேன்; உறுதியாய்ச் சொல்வேன்!
விரும்பினால் எமைநீர் கொல்லவும் கூடும்!
மரணம் தப்பினால் மாண்புடன் வாழ்வேன்!”
அடிமை இப்படித் துணிந்து சொல்வானேல்
படீரெனத் தெறிக்கும் பாவ விலங்கு!
----------------------00000000000-----------------
சின்ன மந்திரம் செப்பி வைக்கின்றேன்!
‘செய்க அல்லது செத்து வீழ்ந்திடுக!’
இதயப் பேழையில் இவ்வரு மந்திரம்
செதுக்கி வைத்திடுக! சீரிய போரில்
அடிமை விலங்கை அறுத்தே எறிவோம்!
அல்லது இந்தப் புனித முயற்சியில்
அழிந்தே போவோம்! அடிமையாய் வாழும்
அவலம் என்பது இனிமேல் இல்லை!
உயிரை இழந்தவன் உயிர்பெறு கின்றான்!
மயர் வுறுபவனோ மரணமே அடைகிறான்!
பயந்து நடுங்கிப் பலமுறை சாபவன்
உயர்வுறு சுதந்திரம் உறுவது எங்ஙனம்?

ஊடகத் தாரே! உமக்கொரு வார்த்தை!
இன்னதான் எழுது; இதைஎழு தாதே!
என்றெலாம் துரைத்தனம் இதழ்களை ம்ரட்டும்!`
எத்தனை துன்பம் ஏற்க மறுத்தால்!
அச்சகம், உடைமைகள், அனைத்தும் பறிமுதல்!
இந்தத் துன்பம்நீர் ஏற்றிடல் வேண்டா1
எளிதாய் ஒருவழி சொல்வேன்; கேண்மின்!
அரசு வெளியிடும் அறிக்கைப் பொய்களை
பிரசுரம் செய்திட மறுத்து நில்லுங்கள்!
தேனெனும் சுதந்திரம் பெற்றதன் பின்னரே
பேனா பிடிக்கப் பிரதிக்ஞை பூணுங்கள்!

மன்னர் வர்க்கமே! உங்களுக்கும் தான்!
மண்டியிட் டந்நியன் முன்னிற் காதீர்!
அரசர்கள் மக்கள்தாம்! அதை உணருங்கள்!
அரசுக்கு இதுபோல் அறிக்கை விடுங்கள்!
“பனியின் பாறை சரிந்துவீழ்ந் தாற்போல்
பாரத மக்கள் வெகுண்டெழுந் தார்கள்!
மக்கள் சக்திமுன் மாபெரும் ஆட்சிகள்
மடிந்து போனதை மனக்கொளல் வேண்டும்!
வாழ்ந்தோ மெனினும் வீழ்ந்தே போயினும்
மக்கள் எவ்வழி மன்னர்யாம் அவ்வழி!

அரசுப் பணியில் அமர்ந்திருப்போரே!
விடுத்திடல் வேண்டாம் விலகல் கடிதம்!
நீதி அரசர் ரானடே காட்டிய
நேரிய பாதையைக் கைக்கொள் வீர்கள்!
ஏற்றுள பாதை காங்கிரஸ் பாதை!
இரகசிய ஆணைகள் எதனையும் ஏற்கோம்
என்பதை மட்டும் எடுத்துரை யுங்கள்!
என்னதான் செய்யும் இங்கிலாந் தரசு?

போர்ப் படையாரே! பொங்கி எழுந்து
புரட்சிகள் எதுவும் செய்திடல் வேண்டாம்!
ஆணை இடட்டும்; நியாயமாய் இருந்தால்
அடிபணி யுங்கள்; அட்டிஒன் றில்லை!
ஒப்புதற் கில்லா ஒரேஓர் ஆணை
துப்பாக்கி ஏந்துதல் சோதரற் கெதிராய்!

மாணவ மணிகாள்! நீவிரென் செய்கிறீர்<
பேராசிரியப் பெருந்தகை யாரிடம்
சென்றிவ் வார்த்தை செப்பி நில்லுங்கள்!
“நாங்கள் காங்கிரஸ்; நீங்கள் எவ்வழி?
காங்கிரஸ் எனினும் பணிவிடல் வேண்டா;
கற்பித் திடுங்கள்; கற்கிறோம் நன்றாய்!
முன்னே  நின்று சுதந்திரப் போரை
முன்னெடுக் கின்றோம்; வாழ்த்துக என்றே!

இத்தனை பேர்களும் இந்த வழிகளை
இன்னல்கட் கிடையிலும் ஏற்று நடந்தால்
அன்னியர் ஆட்சி சீக்கிரம் விலகும்!
சென்னி நிமிர்ந்திடும் சீர்மிகும் பாரதம்!


Sunday, 12 February 2017

ஊஞ்சலாடிகள்

ஊஞ்சலாடிகள்
(70களில் எழுதியது.)
ஊரெங்கும் பார்க்கிறேன் ஊஞ்சலாடிகள்.
உண்மைக்கும் பொய்க்குமிடை ஊஞ்சலாடிகள்.
வீறுகொண்டு கொள்கை ஒன்றை முழங்கி வந்தபேர்
மாறுபட்டு இன்று பேசும் ஊஞ்சலாடிகள்.
எதிரி என்று ஊழலென்று எதிர்த்த பேர்களை
பதவி கண்டு பல் இளித்துப் பாதம் தாங்குவார்.
மந்தையாக எண்ணி நம்மை மேய்க்க வந்தபேர்
விந்தை எங்கள் தலைவர் எல்லாம் ஊஞ்சலாடிகள்.
அச்சமில்லை புரட்சி என்று அறுதி இட்ட பேர்
அடிக்க ஓங்கும் கையைக் கண்டு அஞ்சி ஓடுவார்.
தத்துவங்கள் கொள்கை என்று கோஷமிட்டவை
தனக்கு என்று வந்தபோது தப்பி ஓடிடும்!!
போரெடுக்க ஓங்கியகை பூவை எடுக்கும்1
வீரநெஞ்சம் பகைவனுக்கு வீசும் சாமரம்.
நெஞ்சுக்குள்ளே வஞ்சம் என்னும் வாளும் இருக்கும்!
நேரம் பார்த்து வீசிவிடக் காத்துக் கிடக்கும்!
ஊரெங்கும் பார்க்கிறேன் ஊஞ்சலாடிகள்
உண்மைக்கும் பொய்க்குமிடை ஊஞ்சலாடிகள்!

.