Sunday, 12 February 2017

ஊஞ்சலாடிகள்

ஊஞ்சலாடிகள்
(70களில் எழுதியது.)
ஊரெங்கும் பார்க்கிறேன் ஊஞ்சலாடிகள்.
உண்மைக்கும் பொய்க்குமிடை ஊஞ்சலாடிகள்.
வீறுகொண்டு கொள்கை ஒன்றை முழங்கி வந்தபேர்
மாறுபட்டு இன்று பேசும் ஊஞ்சலாடிகள்.
எதிரி என்று ஊழலென்று எதிர்த்த பேர்களை
பதவி கண்டு பல் இளித்துப் பாதம் தாங்குவார்.
மந்தையாக எண்ணி நம்மை மேய்க்க வந்தபேர்
விந்தை எங்கள் தலைவர் எல்லாம் ஊஞ்சலாடிகள்.
அச்சமில்லை புரட்சி என்று அறுதி இட்ட பேர்
அடிக்க ஓங்கும் கையைக் கண்டு அஞ்சி ஓடுவார்.
தத்துவங்கள் கொள்கை என்று கோஷமிட்டவை
தனக்கு என்று வந்தபோது தப்பி ஓடிடும்!!
போரெடுக்க ஓங்கியகை பூவை எடுக்கும்1
வீரநெஞ்சம் பகைவனுக்கு வீசும் சாமரம்.
நெஞ்சுக்குள்ளே வஞ்சம் என்னும் வாளும் இருக்கும்!
நேரம் பார்த்து வீசிவிடக் காத்துக் கிடக்கும்!
ஊரெங்கும் பார்க்கிறேன் ஊஞ்சலாடிகள்
உண்மைக்கும் பொய்க்குமிடை ஊஞ்சலாடிகள்!

.

Thursday, 12 January 2017

துறவினிலே புதியநெறி மலரும்!

துறவினிலே புதியநெறி மலரும்!
பரமாத்மப் பெருவெளியில் நிரந்தரமாய் லயிப்பதற்குப்
      பரமஹம்ஸர் நாள்குறித்த வேளை!
நரேந்திரச் சீடரவர் நண்பர்களைத் தானழைத்து
      நடைபயிலத் தோளிணைந்து சென்றார்!
உரைசெய்வார்: சோதரரே! உணர்வீர்கள் குருநாதர்
      உடல்நிலையோ மிகமோச மாச்சு!
பருவுடலைத் தான்விடுத்துப் பெருமகனார் ஏகியபின்
      பரிதவிக்கும் நேரம்வந் தாச்சு!

இருக்கின்ற பொழுதுகளை வீணாகப் போக்காமல்
      இறையுணர்வை தியானத்தைக் கொள்வோம்!
சுருக்கென்று அவர்சென்ற அந்நொடியின் பின்னாலே
      சிந்தைமிக நொந்துபயன் என்ன?
கருத்தெல்லாம் உலகியலின் காரியங்களின்மேல் வைத்துக்
      கடவுளைத்தான் பின்வணங்க எண்ணம்!
சுருக்கிட்டுச் சங்கிலியாய்ப் பிணைக்கின்ற இச்சைகளைச்
      சீக்கிரமே நாம்அறுக்க வேண்டும்!

நட்சத்திரம் வான்வெளியில்; நடுக்குகின்ற குளிர்வேறு!
      நடுவினிலே சருகுசத்தை காணும்!
”பற்றற்ற முனிவரெலாம் துனியென்னும் அக்கினியைப்
      பற்றவைத்துத் தாம்வணங்கும் நேரம்!
உற்றவரே1 நாமுமிங்கு உணர்வொன்றித் தூயோமாய்
      உறுதிபடச் சங்கல்பம் செய்வோம்!”
சுற்றிஅவர் தீமூட்டிச் சுட்டெரித்தார் மாசுகளை!
      துறவினிலே புதியநெறி மலரும்!


Saturday, 7 January 2017

நாகரத்னத்தின் கபடம்.

நாகரத்னத்தின் கபடம். (1960ல் சுதேசமித்திரனில் வந்தது. கொஞ்சம் தூசுதட்டிப் புதுப்பித்திருக்கிறேன்.)
நான் திருச்சி எல்.ஐ.சியில்  குமாஸ்தாவாகப்பணியாற்றிக்கொண்டிருந்தேன்.
அப்போது நாகரத்னம் என்றொரு அதிகாரி. (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) அந்தக் காலத்தில் ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூச் சர்க்கரையாக, நான் தமிழில் நன்கு எழுதுவேன்,பேசுவேன் என்றெல்லாம் பெயர் பெற்றிருந்தேன். அதிகாரிகளுக்கு சொற்பொழிவு எழுதிக்கொடுக்கும் பேய் எழுத்தாளர். நான் தான். இப்படி இருக்க எனக்கு நன்றிக் கடன் செலுத்துவதற்காகவோ என்னவோ, நாகரத்னம், அவர் காரியதரிசியாகப் பதவி வகித்த கல்லுக்குழிப் பிள்ளையார் கோவில் சத்சங்கத்துக்குப் பேச வரவேண்டும் என்று என்னை அழைத்தார். கொஞ்ச நேரம் பிகு செய்து கொண்டபின், அவர் மேலும். வற்புறுத்தமாட்டார் என்ற நிலையில்”அரை மனத்துடன்” சம்மதித்தேன்.
தத்துவார்த்தமாகப் பேச வேண்டும் என்றார். என்ன தலைப்பு என்று கேட்டதற்கு ‘பேசாத பேச்சு” என்ற தலைப்பில் பேசுகிறேனே என்றேன்.(தட்சிணாமூர்த்தியைப் பற்றிக் கைவசம் குறிப்புகள் இருந்தன.) அதெல்லாம் சரிவராதுப்பா! எல்லாருக்கும் புரியறமாதிரி தலைப்பு வேணும் என்றார். நெடுநேர ஆலோசனைக்குப் பிறகு ”வள்ளி திருமணம்’ என்ற தலைப்பில் பேசேன்” என்று அவரே தலைப்புக் கொடுத்து விட்டார் நான் என்ன பாகவதரா, வள்ளி திருமணம் கதாகாலக்‌ஷேபம் பண்ண?. ”கந்தசாமியைக் காதலித்தவள்” என்று புதுமையாகத் தலைப்புக் கொடுக்கலாம் என்ற என் யோசனையை  நிர்த்தாட்சண்ணியமாக நிராகரித்துவிட்டார். நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. என் பிரமோஷன் அவர் கையில்.
”சிவ.வேங்கடரமணி என்று போடுங்கள். எம்.ஏ. ”செஞ்சொற்செம்மல்” என்ற என் பட்டம் எல்லாம் போட வேண்டும் என்பது அவ்வளவு அவசியமில்லை. தேவை என்று பட்டால் போட்டுக் கொள்ளுங்கள். எனக்கு ஆட்சேபணை இல்லை” என்று சொல்லி வைத்தேன்.
சம்பவ நாளைக்கு மூன்றே நாட்கள்தான் இருந்தன. ஆபீசுக்கு லீவு போட்டு விட்டு, வாரியாரிலிருந்து வாண்டுமாமா வரை அத்தனை பேரும் வள்ளி முருகன் என்று எங்கு எழுதி இருந்தாலும் அதை எல்லாம் வாங்கிப் படித்தேன். (அந்த நாளில் இண்டெர்நெட் எல்லாம் கிடையாது.) “வள்ளிக் கணவன் பேரை” (’க்’ உண்டோ?) என்று யாராவது பாடிக்கொண்டு போனாலோ, வள்ளிக் கிழங்கு என்று யாராவது கூவி விற்றுக்கொண்டு போனாலோ கூட நின்று குறிப்பு எடுத்துக் கொள்வேன்.(அந்த அளவுக்கு முற்றிவிட்டது.)
வள்ளி திருமணம் பற்றி இதுவரை யாருமே பேசியிருக்காத அளவு விஷயங்களைச்  சேகரித்துக் கொண்டு போனேன் . ஒருமணி நேரப் பேச்சுக்கான சரக்கு என்னிடம் இருந்தது.(நாகரத்னம் தந்த கால அளவு அதுதான்.) என் பேச்சைக் கேட்டுவிட்டு எல்லாரும் எங்கள் சங்கத்துக்கு வாருங்கள் எங்கள் சங்கத்துக்கு வாருங்கள் என்று வருந்தி அழைக்க வேண்டாமோ?
சம்பவதினம் வந்தது. முதலில் கடவுள் வாழ்த்து. ஒரு மாமி தலைப்பை இழுத்துப் போர்த்துக்கொண்டு எம்.எஸ். என்ற நினைப்பில் ராக ஆலாபனை,பல்லவி,ஸ்வரம்,நிரவல் ஐந்தாறு சரணங்கள் என்று அரைமணி நிரப்பி விட்டார். ஏதோ போட்டியில் பரிசு பெற்ற குழந்தைகள் பரிசு வழங்கல் தாமதமாகிறதே என்று சங்கடப்பட்டுக் கொண்டிருந்தார்கள். பெற்றோர்கள் எழுந்து எழுந்து தவித்தபடி நின்று கொண்டிருந்தார்கள். அடுத்தபடி பரிசு வழங்கல். கல்லுக்குழியில் உள்ள அத்தனை குழந்தைகளுக்கும் பரிசு கொடுத்திருப்பார்கள் போல.
கசமுச என்ற சப்தம் மாண்டபத்தை நிறைத்துக்கொண்டிருந்தது. ஒரு உச்சிக்குடுமி மாமா என்னை அறிமுகம் செய்து வைத்தார். “இன்றைய பேச்சாளரைத் தமிழகத்தில் அறியாதவர்கள் இருக்க முடியாது” (உங்கள் பேர் என்ன சார்?) அடுத்து ’சிறப்பு சொற்பொழிவாளரைப் பேச அழைக்கிறேன்’ என்ற வார்த்தைகள் செவி நுகர் கனிகளாய் விழுந்தன.
பரிசு வழங்கிய குழப்பம் இன்னும் அடங்கவில்லை. மேடைக்குப்போய் மெல்ல நின்றேன். மூலைக்கொருவராக எழுந்து நின்றார்கள். எனக்கு மரியாதை செலுத்துவதற்காக எழுந்து நின்றார்களா, அல்லது வெளியே போகத் தயார் நிலையில் இருந்தார்களா என்று எனக்குப் பிடிபடவில்லை. ”ஆராவமுது பிள்ளை ப்ரைஸ் வாங்கியிருக்கானே? என்ன, புஸ்தகமா? எட்டணாத்தான் இருக்கும்! மணி ஒம்பதாச்சுடீ, மாமா கோச்சுப்பார்” என்ற ஒலிக் கலவைகளில் அரங்கம் மூழ்கியிருந்தது.
கர்மவீரனாக ‘மெய்யன்பர்களே!” என்று என் உரையைத் துவக்கினேன் .தலைவர் கல்குழி சுப்ரஹ்மண்ய சாஸ்திரிகளைப் பற்றி நாலு வார்த்தை புகழ்ச்சியாகப் பேசி வைப்போமே !”கல்லும் குழியும் நிறைந்த நெடுஞ்சாலை இவ்வாழ்க்கை. இதைக் கடக்க தலைவரைப் போன்ற….”  வார்த்தையை நான் முடிக்கவில்லை .”முதலில் இதில் உள்ள கல்லை எண்ணிக்கொள்ளுங்கள்” என்று ‘எங்கிருந்தோ ஒரு குரல்’ வந்தது. தொடர்ந்து ஏழெட்டுக்கற்கள் வந்து விழுந்தன.
அந்தப் பேச்சை அப்படியே விட்டு விட்டேன். “பெரியவர்கள், அனுபவம் நிறைந்தவர்களுக்கு  நான் என்ன சொல்லப்போகிறேன்? லௌட் திங்க்கிங்  என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்களே, அதுபோல சில கருத்துகளை உரக்கச் சிந்திக்கப்போகிறேன்” என்றேன். முன் வரிசையிலிருந்து ஒரு (அழகான) பெண் “மனசுக்குள்ளேயே சிந்தியுங்களேன் மாமா!” என்று வெடுக்கென்று கூறினாள்.
இதற்குள் பிள்ளைகள் சப்தம் அதிகமாயிற்று .”பிள்ளைகளே! சப்தம் போடாதீர்கள்” என்றேன் .விளைவு: சப்தம் அதைவிட அதிகமாயிற்று. “குழந்தைகளே! சப்தம் போடாதீர்கள். நான் மேஜிக் வித்தைக்காரன். சப்தம் போடாமல் இருந்தால் கடைசியில் மேஜிக் வித்தை காட்டுவேன். சப்தம் போட்டீர்களோ, வால் முளைத்து விடும்” என்றேன். “ நீங்கள் மட்டும் சப்தம் போடுகிறீர்களே? உங்களுக்கு வால் முளைத்திருக்கிறதோ?” என்றான் ஒரு குட்டிச்சுட்டி.
மேஜிக் மேஜிக் என்று குழந்தைகள் அலறின. அஜந்தாக்கொண்டை பற்றியும் அசோக சக்ரம் பார்டர் புடவை பற்றியுமான பெண்களின் உரையாடலும் என் குரலோடு சேர்ந்து ஒலி பரவியதாகப் பின்னர் கேள்விப்பட்டேன்.
“அன்பர்களே! வள்ளி ஜீவாத்மா.முருகன் பரமாத்மா” என்று ஆரம்பித்தேன். “இந்த இரண்டு சீட்டை மட்டும் படித்து விடுங்களேன்” என்று தந்தார் செக்ரட்டரி.
“ஆண்டார் வீதியைச் சேர்ந்த அலமேலு அம்மாள் கூட்டத்தில் இருந்தால் உடனே வீட்டுக்குப் போகவும். உறவினர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்” இதுபோல நான்கைந்து சீட்டுகள் வந்து விட்டன. கடைசியாக வந்த சீட்டுத்தான் என்னை அதிர்ச்சியில் உறைய வைத்தது ”சிவ.வேங்கட ரமணீ! தயவு செய்து கூட்டத்துக்கு வெளியே வரவும்.” கூட்டத்திலிருந்து வெடிச்சிரிப்புக் கிளம்பியது. தொடர்ந்து செயலாளர் வந்து,”கொஞ்சம் ஷார்ட்டா முடிச்சுக்குங்க!” என்றார். நான் ஆரம்பிக்கவே இல்லையே!  என்பதை எப்படி அவரிடம் சொல்வது?
”சரி” என்று சொல்லிவிட்டு ,’வள்ளீதேவசேனாகாந்தஸ்மரணம்” என்றேன் பஜனை பாணியில். “எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !ஹரஹர மஹாதேவா ஜேஜே சுப்ரம்மண்யம்! ஹரஹர சங்கர ஜெயஜெய சங்கர வாழ்க, ஒழிக என்ற குரல்கள் நாலாபக்கத்திலிருந்தும் வந்தன.
வேதனையோடு மேடையை விட்டு நகர்ந்தேன். ஐம்பது குழந்தைகள் “மாமா! மேஜிக் !மாமா மேஜிக் என்று பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன.

இதில் நாகரத்னத்தின் கபடமென்ன இருக்கிறது என்கிறீர்களா? சொல்கிறேன் .இவ்வளவும் ஆன பிறகு மறுநாள் காலை ஆபீசுக்கு வந்ததும் கொஞ்சம் கூடச் சிரிக்காமல்,”நேத்திக்கு ரொம்பப் பிரமாதமாப் பேசிட்டேப்பா!” என்கிறாரே! இவரை விடக் கபடஸ்தர் யார் இருக்க முடியும்?

Monday, 21 November 2016

நாயகன்

நாயகன்
கூட இருந்தவர்கள் கிசுகிசுத்துக் கொண்டிருந்தார்,
சுற்றி இருந்தவர்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
என்ன விஷயமென்று இவனுக்குப் புரியவில்லை.
முன்னுள்ள பணியொன்றே முக்கியமாய்த்தான் கருதி
முழுமூச்சாய் முனைந்தான்; முடித்து விட்டான் வெற்றியுடன்!
செயல் முடித்த காரணத்தால் ஜெயக்கொடியை ஏந்தி வந்தான்.
பார்த்திருந்தோர் இப்போது பரபரப்பாய்ச் சூழ்ந்தார்கள்!
முடியாத செயலாச்சே? முன்னெவரும் செய்ததில்லை!
எப்படி நீ சாதித்தாய்? என்ன மர்மம் என்றார்கள்.
மந்திரம்தான் அறிவாயா? மாயம் எதும் செய்தாயா?
அரை நிமிஷம் சிந்தித்தான்; அலட்டலின்றித் தான்சொன்னான்.
மந்திரமும் தெரியாது; மாயம் எதும் செய்யவில்லை!
தொடங்கினேன்; தொடர்ந்தேன்; முடித்து விட்டேன் அவ்வளவே!
முடியாது எனும் சேதி முன்பெனக்குத் தெரிந்திருந்தால்
ஒருவேளை தொடங்காமல் ஓய்வாகக் கிடந்திருப்பேன்!
சிரித்துக் கொண்டிருந்தவர்கள் சிலிர்த்தெழுந்து நின்றார்கள்!
நகையாட வந்தவர்கள் நாயகனே என்றார்கள்!


Monday, 14 November 2016

ஓதப் புறப்பட்டார் வேதத்தை!

ஓதப் புறப்பட்டார் வேதத்தை!
ஆயிரம் ஐந்நூற்றுக் கற்றைகள்-பே(ர்)
      ஆசையோ டடுக்கிப் பதுக்கினர்!
நாயகன் ஆணையைக் கேட்டதும்
      நடுங்கிக்    கலங்கித் துடித்தனர்!
தீயினில் ஆகுதி செய்தனர்;-சிலர்
      திருப்பதி உண்டியல் சேர்த்தனர்!
தூயநீர்க் கங்கை நீராட்டினர்;-சிலர்
      தூக்கி எறிந்தனர் குப்பையில்!
கள்ளப் பணத்துக்கு நாணியே
      கண்ணைப் புதைத்தவர் தேம்பினார்!
வள்ளலெனச் சிலர் மாறினர்!
      வாரி வழங்கினர் ஏழைக்கு!-மழை
வெள்ளத்திலே நனை ஆடுகள்-கண்டு
      வேதனை வார்த்தைகள் கொட்டினர்!
உள்ளத்தை விற்றிட்ட சாத்தான்கள்
      ஓதப் புறப்பட்டார் வேதத்தை!




      

Friday, 4 November 2016

பேணி வளர்ப்போம் பூச்சிகளை! நாணி ஒளிக மதிகெட்டோர்!

புதியதாக ஒரு கருத்தை முன்வைக்கிறோம். முதலில் மக்கள் அதை அலட்சியப்படுத்துவார்கள்; அடுத்து அதை எள்ளி நகையாடுவார்கள்; அடுத்த கட்டத்தில் அதைத் தீவிரமாக எதிர்ப்பார்கள். நிறைவுக் கட்டத்தில் நம்மை வியந்து பாராட்டி  நம்மோடு சேர்ந்து கொள்வதில் பெருமைப் படுவார்கள். அத்தகைய கருத்தைத்தான் முன்வைக்கத் துணிகிறேன்.
மனித உரிமைக்காரர்கள் மிகத் தீவிரமாக, மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்படுகிறார்கள். என்னதான் மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்திருக்கட்டுமே, ரயில்களைக் கவிழ்த்திருக்கட்டுமே, வெடி வைத்திருக்கட்டுமே, குற்றம் இழைத்தவர்களுடைய  மனித உரிமைதான் முக்கியம் என்று செயல்படுகிறார்கள். பாராட்டத் தக்கதுதான். அதே போல், விலங்குகள் நல அமைப்புகள் இருக்கின்றன.   தெருநாய்கள் நூற்றுக் கணக்கானவர்களைக் குதறி சதையைப் பிடுங்கி, ஏன், கொல்லவேதான் செய்யட்டுமே, அவற்றினுடைய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது “நாய”மானதே.
எனது பிரச்சினை எல்லாம் ஏன் இந்தக் கரிசனம் பூச்சிகளுக்குக் காட்டப்படுவதில்லை என்பதே. பொழுது விடிந்தால் பொழுது போனால் அரசாங்கம் கொசுக்களின் பிறப்பையே தடுப்பதற்காகப் பிரசாரம் செய்கிறது. நமக்கு டெங்கு வருமாம். காய்ச்சல் வருமாம். நமது நலத்துக்காக பூச்சிகளின் நலத்தைக் காற்றில் பறக்கவிடுவது என்ன நியாயம்? டி.வி.விளம்பரங்களைப் பாருங்களேன்.”ஏன் ச்சுன்ன ச்சுன்ன கொசுவெல்லாம் உன்னைக்கண்டு பயப்படமாட்டேங்குது?” என்று ஒரு சிறுவன் தந்தையைக் கேட்கிறான். இன்னொரு சிறுவனுக்கு கணக்குப் போட கஷ்டமாக இருக்கிறதாம். அதற்காக கொசு கொல்லி அட்டையை வைக்கிறாள்.தாய். இளம் வயதிலிருந்தே,”பூச்சி விரோத” மனோபாவத்தை சிறுவர்களிடையே வளர்த்து விடுகிறார்கள்? என்ன சுயநலம்? என்ன கொடுமை? அவை வாயில்லாப்பூச்சிகள் என்பதால்தானே இப்படி எல்லாம் நடக்கிறது? கொசு, மூட்டைப்பூச்சி, கரப்பான் பூச்சி எல்லாம் உடன் உறை உயிரிகள்தாமே? இதை ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்?
என்னுடைய கோரிக்கை உடனடியாக பூச்சிகள் நல வாரியம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். பூச்சிகள் நலத்துக்கான சட்டம் இயற்றப்பட வேண்டும். பூச்சி வதை, அல்லது வன்கொடுமை மிகக் கடுமையாகக் கருதப்பட்டு புகாருக்குள்ளானவர்கள் உடனடியாகச் சிறையில் அடைக்கப்பட வேண்டும்-விசாரணை ஏதும் இல்லாமல். அந்தச் சிறைகளில் பூச்சிகள் ஏராளமாக வளர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் யாரும் ’”பாளையங்கோட்டை சிறையிலே பாம்புகளுக்கும் பல்லிகளுக்கும் துணையாக என்று பெருமையாகப் பேசிக்கொள்ள முடியாது. பூச்சிகள் நலத்துக்காக 15000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட வேண்டும் இதில் பெருச்சாளி நலன்களும் அடங்கும். இங்கே எங்கே பெருச்சாளி வந்தது என்று கேட்காதீர்கள். வேண்டுமானால் இலாக்காவின் பெயரை பூச்சி மற்றும் எலி, பெருச்சாளி நல இலாக்கா என்று வைத்துக்கொள்ளலாம். பெருச்சாளி மந்திரி என்று சொன்னால் யாரும் கோபித்துக் கொள்ளப்போவதில்லை. இந்த 15000 கோடி ரூபாயில் பெருச்சாளி வளர்ப்பு மற்றும் நலனுக்காக கணிசமான தொகை ஒதுக்கப்பட வேண்டும்.. (இதில் ஊழல் பெருச்சாளிகள் தங்களுக்குப் பங்கு கேட்காமல் கவனமாக இருக்க வேண்டும்.) எலிகளின் பாதுகாப்பைப் பொருத்தவரை, அவை முன்னெச்சரிக்கையாக இருப்பதற்காக, நாட்டில் உள்ள அத்தனை பூனைகளுக்கும் மணி கட்ட வேண்டும். (Jobless barber shaving the cat  என்ற பழமொழி உங்களுக்கு நினைவுக்கு வந்தால் நான் என்ன செய்யமுடியும்?) இதற்கான பணியாளர்கள் தனியாக நியமிக்கப்பட வேண்டும் 100 நாள் திட்ட பணியாளர்களை இதற்குப் பயன்படுத்திக்கொள்ளக்கூடாது. (அது வேறு; இது வேறு!)
இதற்கான ஒரு பெட்டிஷனை இணையத்தின் மூலம் பிரதமருக்கு அனுப்பலாம் என்று இருக்கிறேன். 1கோடி கையெழுத்துகள் தேவை. ஆதரவு தருவீர்கள்தானே? பூச்சி பூச்சி என்றால் யாரும் பயப்பட மாட்டார்கள். நமது ஒன்றுபட்ட வலிமையைக்காட்டியே ஆக வேண்டும்.
பேணி வளர்ப்போம் பூச்சிகளை!

நாணி ஒளிக மதிகெட்டோர்! 

Thursday, 3 November 2016

யானடி வீழ்ந்தேன்!

யானடி வீழ்ந்தேன்!
(ஹி..ஹி..1962லே எழுதினது.)
பாலாவி என்னமெலி நூலாடை தரிக்கின்ற
      பாவை உனதடியேன்; எழிற்பார்வைக்கும் அடியேன்!
காலேஜு சென்றிடநீ காலெடுத்து வைக்கின்ற
      கவர்ன்மெண்ட்டு பஸ்ஸுக்கும் கண்டக்டர்க்கடியேன்!
சீரான பாதமலர் படுமுன்றன் எழிலான
      ஸ்லிப்பருக்கும் அடியேன்; ஷிஃபானுக்கடியேன்!
வாராமல் வாரிவிட்ட கூந்தலுக்கும் பூவிற்ற
      மலர்க்காரப் பாட்டிக்கும் பேரனுக்கும் அடியேன்!
தித்திக்கும் மாலா உன் பேர்சொல்லும் பிச்சம்மாத்
      தோழிக்கும் அடியேன்; அவள் தம்பிக்கும் அடியேன்!
கத்தியைப்போல் பிரம்புசுற்றிக் கனல்கக்கி வருகின்ற
      காலனுன்றன் அப்பாவின் கைத்தடிக்கும் அடியேன்!
இனியகரம் சுமக்கின்ற புத்தகத்துக் கட்டுக்கும்
      எழுதியபே ராசிரியர் எல்லார்க்கும் அடியேன்!
மனமுவந்து சொன்னாயே ‘இடியட்டு’ என்கின்ற
      வார்த்தைக்கும் அடியேன்; வாய்மலர்க்கும் அடியேன்!