Monday, 5 February 2018

தெரிய வந்தது

தெரிய வந்தது
அடுக்ககத்தில்
அடுத்த இருப்பில்
சிவராம் என்பவர்
தவறிப் போனார்.
இருந்தார் என்பது

தெரிய வந்தது.

Wednesday, 31 January 2018

மனத்துக்கண் மாசு

மனத்துக்கண் மாசு.
மனதுக் குள்ளே கடகட சப்தம்;
மௌனம் காப்பேன்  வாயைப் பூட்டி.
கனவுக் கன்னியர் நர்த்தனம் நெஞ்சில்
காமம் காப்பேன் ஊருக் கஞ்சி!
சினமும் வெறுப்பும் சிந்தை நிறைய;
சிரிப்பாய் மலரும் முகத்துப் பூச்சு!
அனைத்துக் கும்பேர் அறிவோ மாகில்

அதுதான் பொய்ம்மை ஒழுக்கம் என்பது!

Thursday, 11 January 2018

எல்லாரும் சமமென்பதுறுதியாச்சு!

எல்லாரும் சமமென்பதுறுதியாச்சு!
பதவி உயர்வு கொடுத்து அந்த அலுவலகத்துக்கு தலைமைப் பொறுப்பேற்க என்னைப் பணித்த போதே எல்லாரும் என்னை எச்சரித்தார்கள். ‘ரவுசு பிடித்தஆபீசாயிற்றே! நிறைய க்ரூப்! எல்லாரும் தலைவர்கள்! எல்லாரும் புத்திசாலிகள்!” என்று. என் நேர்மையின் மேல் எனக்கு நல்ல நம்பிக்கை. “ Do the right thing! Be fair to all!”அப்புறம் என்ன பிரச்சினை வரப்போகிறது?
நான் பதவி ஏற்றுக்கொண்ட அன்றைய தினமே, மனமகிழ் மன்றக் காரியதரிசி என்று ஓர் இளைஞன் வந்தான். அறிமுகம் செய்து கொண்டு,”சார்! மன்ற ஆண்டு விழா (பத்து நாட்கள் கழித்து ஒரு நாளைக் குறிப்பிட்டு) அன்று வருகிறது. Ex-officio தலைவர் என்ற முறையில் நீங்கள் தலைமை வகித்து நடத்தித் தரவேண்டும்” என்று வினயமாகக் கேட்டுக்கொண்டான். .முகத்தில் தொலைக்காட்சிப் புன்னகையை வரவழைத்துக்கொண்டு, “ஆஹா! ரொம்ப சந்தோஷம்!~ எனக்கும் கலை இலக்கியம் எல்லாவற்றிலும் ரொம்ப ஆர்வம். இன்னும் நிறைய நிகழ்ச்சிகள் நடத்துவோம்” என்று உற்சாகமாகச் சொன்னேன். ‘” அன்று நான் ஜாய்னிங் டைம் முடிந்து வந்து சேர்ந்து விடுவேன்” பாத்ரூம் போகும் அவசரம். எழுந்திருந்தேன். “ இல்லை சார்! நீங்களும் ஏற்பாடுகளின் போது கூட இருந்தால் நல்லது” என்றான்.  “அதெல்லாம் வேண்டாம். உன்னால் முடியும் தம்பி! நீ சிறப்பாகச் செய்வாய்” என்று விட்டு அவசரத்தின் நிமித்தம் எழுந்தேன். “இல்லை சார்! போன வருஷம் ஒரு சிக்கல் வந்து விட்டது” என்றவனை அடக்கி, மன்மோகன்சிங் ராஜாவைத் தட்டிக்கொடுத்தது போல் தட்டிக்கொடுத்து, ‘ஜமாய் ராஜா!’(Not intended usage!) என்று நகர்ந்தேன். அப்போதுதான்   Management Training centreல் பயிற்சி பெற்று வந்திருந்தேன், ( Leadership, delegation, authority and responsibility, A leader is one who develops leaders  என்றெல்லாம் சொல்லிக்கொடுத்திருந்தார்கள். தவிர கொஞ்சம் உதயமூர்த்தியையும் படித்து வைத்திருந்தேன்!)  அவனை மேற்கொண்டு பேச விடவில்லை.  முட்டிக்கொண்டு வந்த அவசரத்தில் உள்ளே பாய்ந்துவிட்டேன்.
நிகழ்ச்சி தினத்தன்று வந்து சேர்ந்து விட்டேன். தலைமைப் பீடம். அருகில் காரியதரிசி இளைஞன்.
முதலில் ஒரு பெண் வந்து ‘கஜவதனா கஜானனா” என்று ஒரு பஜனைப்பாட்டை மெள்ள, நிதானமாக, துரிதகதி என்று மூன்று முறையும் ஒவ்வொரு அடியையும் பாடி முடித்தார். மரியாதைக்கோசரம் கைதட்டி வைத்தேன் .”நிகழ்ச்சி ஆரம்பிக்கலாமா?” என்று காரியதரிசியைக் கேட்க அவன் சமிக்ஞையாகக் கை காட்டினான். அடுத்து ஒரு பெண் “வெள்ளைத்தாமரை” என்ற பாரதியார் பாடலை ,80 வரிகளையும் ஆலாபனையோடு பாடி முடித்தாள். பரிதாபமாக காரியதரிசியைப் பார்த்தேன். அவர் ”பொறுமை” என்று எச்சரித்தார். பிறகு சிவன், விஷ்ணு ,லக்ஷ்மி, முருகன், இப்படி சைவ-வஷ்ணவ பேதமில்லாமல் எல்லாக்கடவுளர்களின் மீதும் பாடல்கள் பாடப்பட்டன. நான் அத்தனை கடவுளர்களின் மேலும் பாரத்தைப் போட்டு விட்டு உட்கார்ந்திருந்தேன். கூட்ட நேரத்தில் பாதிக்குமேல் ஆகி விட்டது. எல்லாம் ஓய்ந்தது என்று நான் நினத்த நேரத்தில் ஒரு கோஷ்டி ‘சாமியேய் ஐயப்பா!” என்று குரல் எழுப்பியபடி மேடையை நிறைத்தது. “  தொடர்ந்து,”இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை” என்ற நாகூர் ஹனீஃபா பாடலும் (நம்ம விட்டல்தாஸ் கூடப் பாடியிருக்கார்!) “இயேசுராஜன் வருவான் இன்னும் கொஞ்சம் நேரத்தில்” என்ற கிறிஸ்தவப் பாடலும் ஒலித்தன. “ஏன்ப்பா! இந்த ஆஃபீசில்,”புத்தமதம்,சமணமதம்,பார்ஸிமார்க்கம்,யூதம்,சீனத்துத் தாவு மார்க்கம் கண்பூசி மதம் எல்லாம் இல்லையே?” என்று  கேட்டு நிச்சயப்படுத்திக்கொண்டு , பிரதான நிகழ்ச்சிக்காக ஆவலுடன் காத்திருந்த போதுதான் அது நிகழ்ந்தது. கஞ்சி மடிப்புக் கலையாத கறுப்புச்சட்டையுடன் நாலு பேர் மேடையில் வந்து நின்று, ‘கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை; கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி” என்று முழக்கம் எழுப்பி விட்டுக் கீழிறங்கினார்கள்.
தொடர்ந்து சில நிமிஷங்கள் ஆண்டுவிழா பிரதான நிகழ்ச்சி இனிதே நடந் முடிந்தது.. இவ்வாறாக யாருக்கும் மனக்கசப்பில்லாமல் நிகழ்ச்சியை நடத்தி முடித்து விட்டோம்.. “ The Most secular Branch office of the country” என்று எங்கள் ஆஃபீசுக்கு ஏதோ விருது தரப்போவதாகப் பேசிக்கொள்கிறார்கள்.

Thursday, 21 December 2017

தெய்வத்தின் குரல்

தெய்வத்தின் குரல்
கஷ்டம் வந்தது; இறைவனிடத்தில்
கண்ணீர் விட்டுக் கதறி அழுதேன்.
துன்பம் தீர்ந்தது; எனினும் அந்தோ!
தொடர்கதையாகப் புதுப்புதுத் துன்பம்!
தொழுதேன்;அழுதேன்: துடைத்தனன் இறைவன்!
சொல்லி அழுது சலித்துப்போச்சு!
தெளிவு பிறந்தது; எதிர்மறைப் பிரார்த்தனை
தேவை இல்லாதது; சுருங்கச் சொன்னால்
சந்தோஷம்தான் தேவை; அதற்குத்
திட்டம் தீட்டினேன்,இதுஇது வேண்டும்
பட்டியலிட்டுப் பிரார்த்தனை புரிந்தேன்
சட்டென அனைத்தும் தந்தான் இறைவன்
எனினும் ஏதோ நிம்மதி இல்லை
என்ன்ன செய்வது நிம்மதி பெற்றிட?
இப்படி இப்படி நடந்துகொள் என்று
இறைவன் எனக்குக் குருமுகம் சொன்னான்.
சத்சங் பிரார்த்தனை தியானம் நற்செயல்
புத்தகம் மூலம்,பிரவசனமாக
பஜனை என்று பலப்பல சொன்னான்.
அட்டவணைபோல் அடுக்கி எழுதினேன்
இதுவே எனக்கொரு தளை என ஆச்சு!
இறைவன்கூட மீட்பதற்கில்லை!
என்னை உன்னிடம் ஒப்படைத்திட்டேன்!
எதுவும் நானினி முயலவே மாட்டேன்!
சொன்னது நாவு; நெஞ்சம் மட்டும்
என்னவோ இதனை ஏற்றிடவில்லை.
அவன்பாடென்று அக்கடாவென்று
சிவனே என்று சோம்பலே மிச்சம்!
’தெய்வத்தின் குரல்’  திருவாசகமாய்த்
தெளிவைத் தந்தது!நச்சென ஒருசொல்!
பக்தி வேணுமெனப் பிரார்த்தித்துக்கொள்;
மத்தவை எல்லாம் அவன் பொறுப்பாகும்!





Monday, 11 December 2017

காந்திஜியின் உண்ணாவிரதங்கள்-தன்னைத்தான் கட்டுதல்

காந்திஜியின் உண்ணாவிரதங்கள்-
தன்னைத்தான் கட்டுதல்.
காந்திஜி உண்ணாவிரதங்களை ஓர் அறிவியல் தத்துவமாக வகுத்ததை முன்னொரு பதிவில் பார்த்தோம். அந்த வெளிச்சத்தில் அவரது உண்ணாவிரதங்களை நிகழ்வு -ஆய்வு செய்வோம். அறிவுபூர்வமான ஆய்விலிருந்து அவருக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டாம்.
காந்திஜியின் உண்ணாவிரதங்கள், சத்தியாக்கிரக வரலாற்றுக் காலத்துக்கு முன்பே துவங்கிவிட்டன.. சின்ன வயதில் அன்னை புத்லிபாயுடன் சேர்ந்து ஏகாதசி மற்றும் சமயரீதியான உண்ணாவிரதங்கள் இருந்திருக்கிறார். டால்ஸ்டாய் பண்ணை  காலத்தில், ரம்ஜான் நோன்பின்போது இஸ்லாமியருடன் சேர்ந்து இந்து, கிறிஸ்துவ, பார்சி நண்பர்களும் நோன்பு இருந்திருக்கிறார்கள்.  இது பண்ணையில் வசித்த அனைத்துச்  சமயத்தினரிடமும் தோழமை உணர்வை உருவாக்கியது..
சரியான புரிதலுடனும், அந்தரங்க சுத்தியுடனும் இருக்கும் உண்ணாவிரதம், புலனடக்கத்துக்குத் துணை நிற்கும் என்பது காந்திஜியின் கருத்து.. பாரதி சொன்ன ”தன்னைத்தான் கட்டுத”லுக்கு உண்ணாவிரதம் ஒரு சாதனம்.
1913 முதல் 1948 வரை காந்திஜி 17 உண்ணாவிரதங்கள்-140 நாட்கள் இருந்திருக்கிறார். 10 நாட்கள் இருந்த 8 உண்ணாவிரதங்கள் குறித்து சரியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

அவர் மேற்கொண்ட உண்ணாவிரதங்கள் பெரும்பாலும்-அன்பு கொண்டவர்களின் மன மாற்றத்துக்காக, செய்த தவற்றுக்கு பிராயச்சித்தமாக, வன்முறைக்கு எதிராக, ,கோரிக்கைகளை முன்வைத்து, அமைந்தவை. அவற்றைக் கால வரிசைப்படி தொடர்ந்து பார்ப்போம்

Sunday, 10 December 2017

மன்னார்குடியில் சுந்தரராமையர்

மன்னார்குடியில் சுந்தரராமையர்.
 வ.வே.சு.ஐயர் இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்குத் திரும்பி விட்டார். தலைமறைவு வாழ்க்கைக்காக புதுச்சேரியை நோக்கி ரயிலில் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறார். அவருடன் அதே பெட்டியில் சில துப்பறியும் அதிகாரிகள் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள். சீக்கியத் தலைப்பாகையுடனும் தாடியுடனும் கறுப்புக்கண்ணாடியுடனும் இருக்கும் வ.வே.சு. மீது அவர்களுக்கு ஒரு கண். பெட்டியில் இருக்கும்  V.V.S என்ற முன்னெழுத்துகளைப் பார்த்து விட்டார்கள். அவரும் இதைக் கவனித்து விட்டார். யதேச்சையாய்க் கேட்பது போல் “உங்கள் பெயர் என்ன சார்?” என்று கேட்டார்கள், சமயோசிதமாக Vir Vikram Singh என்று சொல்லித் தப்பித்துக்கொண்டு புதுச்சேரி வந்தடைந்து விட்டார் ஐயர்.
இது குறித்து கொடியாலம் ரங்கசாமி ஐயங்காருக்கு அவர் மீது அபார மரியாதை. ஐயங்கார் புதுச்செரியில் வசித்து வந்தார்.  . சிறந்த தேச பக்தர்.. பாரதியாரிடம் அவருக்கு நிறைந்த அன்பு உண்டு. ஆனால் கவிதை கிவிதை சமாசாரம் எல்லாம் அவருக்கு விளங்காத விஷயங்கள். தவிரவும் அவருக்கு பாரதியார், வ,வே.சு போல சாமர்த்தியமும் துணிச்சலும் உடையவரில்லை என்று ஓர் அபிப்பிராயம் இருந்தது.
அவருக்கு மன்னார்குடியில் ஒரு பெரிய வீடு இருந்தது. அங்கு அடிக்கடி சென்று ஓய்வெடுத்துக் கொண்டு விடுவார். அப்படித்தான் ஒருநாள். மன்னார்குடியில் வெற்றிலை பாக்கு குதப்பியபடி திண்ணையில் உட்கார்ந்து நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார். பகல் 11 மணி. அப்போது ஜல் ஜல் என்று ஒரு குதிரை வண்டி அவர் வீட்டு வாசலில் வந்து நிற்கிறது. அப்போது, கோட்டும் பஞ்சகச்சமும், தலைப்பாகையும் மழுங்கச் சிரைத்த பளபள முகமுமாக  ஒருவர் வந்து இறங்குகிறார். ”யாரது?” என்று பார்க்க, திண்ணையிலிருந்து இறங்கி, வண்டியை நெருங்கி விட்டார், உற்றுப் பார்த்தபோதுதான் தெரிந்தது-அடட!  நம்ம பாரதி!. தனியாக அழைத்துச் சென்று விளக்கினார் பாரதி. ”புதுச்சேரியில் கூட்டுக்குள் அடைபட்டதுபோல் இருந்து சலித்து விட்டது. வெளிக்காற்றை சுவாசிக்க விரும்பினேன்! உங்களோடு கொஞ்ச நாள் இருக்கப்போகிறேன்”. கொடியாலம் ரங்கசாமி ஐயங்காருக்கு ரொம்ப சந்தோஷம். தம் நண்பர்களுக்கெல்லாம், ”இவர் என் நெடுநாள் சிநேகிதர். சுந்தரராமையர் என்று பேர். ஒரு வாரம் என்னோடு தங்கியிருப்பதற்காக வந்திருக்கிறார்.” என்று அறிமுகம் செய்து வைத்தார். ஒரு வாரம் வேகமாகக் கழிந்து விட்டது. பாட்டும் கூத்தும் அரட்டையும்தான். கடைசிவரை யாராலும் அவர் பாரதியார் என்று கண்டு பிடிக்க முடியவே இல்லை. பிரியாவிடை பெற்று புதுச்சேரி சென்றார் பாரதி.
கொடியாலம் ஐயங்கார் தம் கருத்தை மாற்றிக்கொண்டார். வ.வே.சு ஐயரை விடக்கூட சாமர்த்தியமும் துணிச்சலும் உடையவர்தான் பாரதியார் என்று ஏற்றுக்கொண்டார்.
(ஆதாரம்: வ.ரா.எழுதிய “மகாகவி பாரதியார்”)

டிசம்பர் 11 பாரதி பிறந்ததினம்

Saturday, 9 December 2017

குறையொன்றுமில்லை

குறையொன்றுமில்லை!
அவர்  கோவிந்தன் மீது மாறாக் காதல் கொண்டவர். வாழ்நாளில் ஒருமுறையாவது திருமாலைத் தரிசித்துவிட வேண்டுமென்பது அவரது வாழ்வின் குறிக்கோள். அதற்குத் தடையாக நின்றது ஆங்கில அரசின் சட்டம். அவர் ஆலயத்துக்குள் நுழைந்தால் புனிதத்தன்மை  கெட்டு விட்டதென்று சொல்லி கைது செய்து சிறையில் அடைத்து விடுவார்கள். என்ன ஆனாலும் சரி, ஒருமுறை இறைவனைத் தரிசித்து விடுவது என்று தீர்மானித்து விட்டார். புலால் உணவை விலக்கினார். தூய நீரில் முழுக்காடினார். திருமண் தரித்துக்கொண்டார். நன்கு துவைத்த ஆடையை உடுத்திக்கொண்டார். கோவிலுக்குள் நுழைந்து இறைவனைக் கண்குளிரத் தரிசித்துக்கொண்டிருந்தார். அவரது யோக நிலையைக் கலைப்பதுபோல் ஓர் இரும்புக்கரம் அவர் கழுத்தைப் பற்றியது. ”நடடா, ஸ்டேஷனுக்கு!” என்று அங்கிருந்த பக்தி அலையை மிஞ்சி நாராசமாக ஒலித்தது.
அவரது நண்பர்கள் .”சட்டம் அப்படி இருக்கிறது. நல்ல வக்கீலை வைத்து வாதாடினால் நீ விடுவிக்கப்படலாம்” என்றார்கள். அங்கேதான் சிக்கல். அந்த ஊரில் இருந்தவர்கள் பெரும்பாலானவர்கள் சாதிப்பற்றாளர்கள். ”தீண்டாதவனுக்கு வாதாடினால் தெய்வ குத்தம் ஆகாதோ?”” எஞ்சியிருந்தவர்கள் காங்கிரஸ்காரர்கள். காந்திஜியின் ஆணைக்குக் கட்டுப்பட்டு நீதிமன்றப் புறக்கணிப்பில் இருந்தார்கள்.
இந்த நிலையில் ஒரு வக்கீல் அவருக்காக இலவசமாக வாதாட முன்வந்தார். இதில் வேடிக்கை என்ன என்றால், அவர் பழுத்த ஆசாரசீலர். தீவிர காங்கிரஸ்காரரும் கூட..
நீதிமன்றம். அன்பர் நடுங்கி விதிர்விதிர்த்துக் கொண்டிருந்தார். வக்கீல் கேள்விகளைத் தொடுத்தார்.
“நீ கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டது உண்மையா?”
“ஆமாம்.”
“என்ன உணவு உட்கொண்டாய்?”
“கொஞ்சம் கஞ்சி மட்டுமே குடித்தேன், அரிசிக்கஞ்சி.”
கோவிலுக்குப் போகுமுன் என்னவெல்லாம் செய்தாய்?”
”நீரில் முழுகிக் குளித்தேன். துவைத்து வைத்திருந்த உடைகளைப் போட்டுக் கொண்டேன். நெற்றியில் திருமண் தரித்துக்கொண்டேன்.”
சரி. எவ்வாறு சாமி கும்பிட்டாய்? உனக்கு திவ்யப் பிரபந்தம் தெரியுமா? வேறு ஏதாவது பாசுரங்கள் தெரியுமா?’
“அதெல்லாம் தெரியாதுங்க!.. கோவிந்தா1கோவிந்தா!” என்று சொல்லியபடியே சாமியைப் பார்த்துக்கொண்டிருந்தேன்”
வக்கீல் நீதிபதியின் பக்கம் திரும்பினார். “கனம் கோர்ட்டார் அவர்களே! கைது செய்யப்பட்டவரின் வாக்குமூலத்தின்படி எந்த வகையிலும் அவர் கோவிலின் புனிதத்துவத்தைக் கெடுக்கவில்லை” என்று சொல்லி முடித்தார். நீதிபதி வக்கீலின் வாதத்தை ஏற்று கட்சிக்காரரை விடுதலை செய்தார்.
அப்படி வாதாடிய வக்கீல் வேறு யாரும் இல்லை. ராஜாஜி அவர்கள். இன்று, டிசம்பர் 10 அவரது பிறந்தநாளாகக் கொண்டாடப்படுகிறது.
கதை இதோடு முடியவில்லை. உள்ளூர் காங்கிரஸ்காரர்களுக்குப் படுகோபம். கட்சிக்கட்டுப்பாட்டை மீறிவிட்டாரே இந்த வக்கீல்? விஷயம் காந்திஜியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. காந்திஜி  ராஜாஜியின் செயலைப் பராட்டினார். எந்த விஷயத்தையும் வார்த்தை அளவில் எடுத்துக்கொள்ளாமல், அதனது உட்கருத்தைப் புரிந்து கொண்டு செயல்படவேண்டும். ராஜாஜி அந்த அன்பருக்காக வாதாடாமல் இருந்திருந்தால் அவர் சிறைக்குப் போயிருப்பார். அப்போது நாம் ஆங்கிலேயரின் அக்கிரம சட்டத்துக்கு ஒத்துழைப்புக் கொடுத்ததாக ஆகும். ஒத்துழையாமை இயக்கத்துடன் அது எப்படிப் பொருந்தும்?
ராஜாஜி “குறையொன்றுமில்லை’ என்று ஒரு பாட்டு எழுதினார். எம்.எஸ். அம்மாவால் பிரபலமானது அது.
“திரைக்குப்பின் நிற்கின்றாய் கண்ணா. மறையோதும் ஞானியர்கள் மட்டுமே காண்பார்கள் என்றாலும்.. குறையொன்றும் இல்லை கண்ணா” என்று வரும். ராஜாஜி இந்த நிகழ்வை மனத்தில் வைத்துக்கொண்டுதான் அந்தப் பாட்டை எழுதினார் என்கிறார்கள். நமக்குத் தெரியவில்லை.. நாமென்ன, ராஜாஜியின் ஆன்மாவிடமா சென்று விளக்கம் கேட்க முடியும்?

(இந்த நிகழ்ச்சியை விரிவாக எழுத எனக்கு விளக்கம் தந்து உதவியவர் நண்பர்-ராஜாஜியின் அன்புக்குப் பாத்திரமான கே.வேதமூர்த்தி.) :‘