Wednesday, 9 August 2017

அப்போதைக்கிப்போதே..


அப்பாதான் விழித்துவிட்டார் கேட்போ மென்று
     அருகில்வந்து பிள்ளையெல்லாம் சுற்றி நின்று
தப்பாமல் சொல்லிடுங்கள் எங்கே வைத்தீர்
     சற்றேதான் நினைவுகொண்டு சொல்லும் என்ன
செப்புதற்கு நாவருமோ சித்த மும்தான்
     தெளிவாக இருந்திடுமோ தெரிய வில்லை;
அப்போதைக் கிப்போதே சொல்லி வைத்தேன்
     ஆதார்கார்ட் பீரோவில் வெச்சிருக்கேன்!

     

Tuesday, 8 August 2017

விதி

விதி
(திருச்சி தேசியக்கல்லூரி ஆண்டுமலர்-1957)
(மொழிபெயர்ப்புக் கவிதை)
பிறவி உயர் பதவி தரும் பெருமிதங்கள் யாவும்
மறைந்து விடா உண்மையல; மாயை எனும் சாயை;
விதியிதனை வெல்லுபடை வையகத்தில் ஏது?
நிதிமிகுந்த செல்வரெனின் நின்றிடுமோ காலன்?
     மன்னர்முடித் தலையும் மண்ணில் விழுந்துருளும்!
     உன்னதங்கள் யாவும் உயிர்விலகின் ஏது?
நிலம் உழுது நீர்பாய்ச்சும் நல்லுழவரேனும்
விலைகூறிப் பொருள்விற்கும் வாணிகர்களெனும்
இலமென்று மனம்நொந்து இரப்பார்களேனும்
குலம்சாதி உயர்பெருமை கூறுபவரேனும்
     சரணுற்று விதியைச் சார்ந்திடுதல் திண்ணம்;
     மரணத்தில் ஒன்றாய் மங்கிடுதல் உண்மை!

எனதெனது;நான் என்று ஏதேதோ பேசி
மனதிந்த மண்வெளியில் மயங்கியதன்பின்னர்
தனதென்று சொல்வதெல்லாம் தானெடுத்தேகாதும்
கனவிந்தப் பாழ்வெளியைக் கைவிடுவர் அம்ம!

     வாடிடினும் வாசம் வீசுமலர் போல
     நாடிஅவர் செய்த நன்மை மணம் வீசும்!


பணியின் மூலம் பேரானந்தம் (15)


விட்டு விடுதலையாகி நிற்போம்!
இதுவரை நாம் பார்த்து வந்த விஷயங்களைத்தான் நமது மரபில் கர்மயோகம் என்கிறார்கள். ஸ்வதர்மம்,  சமநிலையே யோகம், , கடமையில் செம்மையே யோகம் என்றெல்லாம் கீதை கூறுகிறது.,
சந்தோஷத்தை  நோக்கித்தான் நாம் அனைவரும் பணி புரிந்து கொண்டிருக்கிறோம் .இந்த சந்தோஷம் வெளிப் பொருள்களில், சூழ்நிலையில், பிறரின் நடத்தையில் இருக்கிறது என்று எண்ணிக் கானல் நீரை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையான சந்தோஷம்-பரமானந்தம்- பேரானந்தம் என்பதெல்லாம் நமக்குள்ளேயே இருக்கிறது. அதை உணர்ந்து அனுபவிக்க முயல்வதே நமது பணி. இதை எல்லாப் பெரியவர்களும் நூல்களும் சொல்லி இருப்பதால் நாம் மேலும் விரித்துரைக்க முனைவது, தெரிந்த விஷயத்தையே திருப்பிச் சொல்வதாகும்.
பந்தபாசங்கள் என்ற எந்தச் சங்கிலிகளின் பிணைப்பும் இல்லாமல் நாம் ஆனந்தமாக வாழ்வதே முக்தி நிலை. இந்த நிலையை மரணத்துக்குப் பின் தான் வேறு ஏதோ லோகத்துக்குச் சென்றுதான் அடையவேண்டுமென்பதில்லை. இருந்த இடத்திலேயே அனுபவிக்க  வேண்டிய நிலை இது. பாரதியார் இந்த முக்தி நிலையைத்தான் விட்டு விடுதலை ஆகி நிற்றல் என்பார். இந்த நிலையில்தான் “எத்தனை கோடி இன்பம்!” என்று ஆனந்திக்க முடியும்.

நிறைநிலை அடைந்த இலட்சிய மனிதன் எப்படி இருப்பான்? தீவிரமான செயல்பாடுகள் இடையேயும் பாலைவனத்தின் அமைதியையும் ஏகாந்தத்தையும் காண்பான். ஆழ்ந்த அமைதியிலும் ஏகாந்தத்திலும் தீவிரமான செயல்பாட்டைக் காண்பான்.பெரிய நகரத்தின் ஆரவாரமும் சந்தடியும் நிறைந்த வீதிகளில் போய்க்கொண்டிருந்தலும் எந்த சப்தமும் நுழையாத குகைக்குள் அமர்ந்திருப்பது போன்ற பேரமைதியில் அவன் மனம் ஆழ்ந்திருக்கும். அதன் இடையேயும் அவன் தீவிரமான செயலிலும் ஈடுபட்டிருப்பான்.. மனதின் சமநிலை குன்றாமல் இருப்பான். இந்த நிலையை அடைய நமது நூல்கள் மூன்று வழிகளைச் சொல்கின்றன. தத்துவ விசாரம் (ஞான யோகம்),இறைவனிடம் அன்பு (பக்தியோகம்)  கர்ம யோகம் ஆகியன. கர்மயோகத்தைப் பற்றித்தான் நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம்..

அன்னையேநான் உன்னிடத்தில் சிலவார்த்தை பேசிடணும்;

அன்னையேநான் உன்னிடத்தில் சிலவார்த்தை பேசிடணும்;
     அவகாசம் தரமுடியுமா?
அன்னமுடன் சொன்னமுமாய் அன்புமிக்க சந்ததியும்
     அதிலேதும் குறைச்சலில்லை!
சொன்னபடிக் கேட்கின்ற உடல்நலமும் அறிவுநலம்
     சீரான  வாழ்க்கையுண்டு!
என்னதுதான் குறையென்று ஏனிந்தப் பாழ்மனதில்
     ஏதேதோ ஆரவாரம்?

சின்னமனச் செருக்காலே சீற்றத்தால் ஆசையினால்
     செய்துவிட்ட பாவமதிகம்!
இன்னொருவ ராயிருந்தால் இழித்துரைத்துப் போயிருப்பேன்;
     இதுஎனக்கு நன்குதெரியும்!
என்னவொரு காரணத்தால் என்னிடத்தில் சினவாமல்
     காருண்யம் காட்டுகின்றாய்?
கன்னல்மொழிக் காஞ்சிமுனி சொன்னதுபோல் இதுவுன்றன்
     அவ்யாஜ கருணையன்றோ?

பட்டகட்டை போலிருக்கப் பரமனருள் நிறைந்திருக்கப்
     பலவழிகள் சொல்லுகின்றார்!
நிட்டையுடன் நியமங்கள் சாத்திரங்கள் ஜெபதபங்கள்
     நேரியதோர் குருபார்வையாய்!
கெட்டமனப் பாவியற்கு ஒருசிறிதும் இவற்றிலெலாம்
     நாட்டமில்லை; என்னசெய்வேன்?
திட்டமிட்டுத் திடமாக உன்பாதம் சரணடைந்தேன்;
     எனைநீதான் ஏற்கவேணும்!


Thursday, 3 August 2017

பணியின் மூலம் பேரானந்தம் (14)

பணியின் மூலம் பேரானந்தம் (14)
 நாமே நமக்கு எஜமானர்!
சுவாமி விவேகானந்தர் சொல்லுவார், எஜமானனைப் போல வேலை செய்ய வேண்டும்; அடிமையைப் போலச் செய்யக்கூடாது என்று.
அதென்ன, எஜமானனைப் போல வேலை செய்வதாவது? அடிமையைப் போல வேலை செய்வதாவது?
ஒரு முதியோர் இல்லம் இருக்கிறது. ஆதரவற்ற முதியவர்களுக்கான இலவச இல்லம். அங்கு பணியாற்றுபவர்களில் மூன்று வகையினர் இருக்கிறார்கள் .”பெரிசுகள். சரியான ரவுசுகள். இங்கே வந்து மாட்டிக் கொண்டோம். என்ன செய்வது? வயிற்றுப்பாடு இருக்கிறதே?” என்பவர்கள் ஒரு வகை..” நமக்கு இந்த ட்யூட்டி கொடுத்திருக்கிறார்கள்” என்று கொடுத்த வேலையைச் செய்பவர்கள் ஒரு வகை. மூன்றாவது வகையினர் ,”பாவம்! ஆதரவற்ற நிலையில் வந்திருக்கிறார்கள். நம் பொறுப்பில் இருக்கிறார்கள். அவர்களைச்  சந்தோஷமாக  வைத்துக் கொள்வது நம் கடமை” என்று கனிவோடு பணி புரிகிறார்கள். முதல் வகையினர் அடிமையைப் போல் பணி புரிபவர்கள். .கொல்லப் பயன்படும் கீழ். இரண்டாவது வகை சொல்லப் பயன்படும் சான்றோர் என்பதில் தவறில்லை. நல்லபடி உற்சாகப்படுத்தினால் அவர்கள் தாமாகவே பொறுப்புணர்ந்து செயல்படும் வாய்ப்பு இருக்கிறது. மூன்றாவது வகையினரே எஜமானரைப் போல் பணியாற்றுபவர்கள். பிறர் கண்காணிக்கிறார்கள் என்பதற்காக இல்லாமல்,,கடமை என்பதற்காக மட்டுமே இல்லாமல் பொறுப்பைத் தம் தோள்களில் சுமந்து செயலாற்றுபவர்களே எஜமானர்கள் போல் உழைப்பவர்கள். நிர்வாக இயலில் இதை ownership” என்பார்கள்.
எஜமானரைப் போல் பணி செய்வது  அன்பு கலந்து பணி செய்வது. பொறுப்பைத் தம் தோள்களில் சுமந்து பணி செய்வது. .பிரதிபலன் எதிர்பாராது பணி செய்வது. இது பற்றி சுவாமிஜி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்:
“சுதந்திரமாக வேலை பாருங்கள். அன்புடன் வேலை பாருங்கள். அன்பு என்ற வார்த்தை புரிந்துகொள்ளக் கஷ்டமானது. சுதந்திரமானவர்களுக்கன்றி அன்பு வராது. அடிமையிடம் தூய அன்பு இருப்பது சாத்தியமில்லை. ஓர் அடிமையை விலைக்கு வாங்கி சங்கிலியால் பிணைத்து  வேலை செய்யக் கட்டளை இட்டால் மங்குமங்கென வேலை செய்வான். ஆனால் அவனிடம் அன்பு இருக்காது. தன்னலம் கருதிச் செய்யும் எந்த வேலையும் அடிமை வேலையே. நம்மை நாமே சோதித்துப் பார்த்துக் கொள்ளலாம். அன்போடு செய்யும் எந்த வேலையும் அமைதியையும் ஆனந்தத்தையும் தராமல் இருக்காது. உண்மை அன்பு கொடுப்பவருக்கோ பெறுபவருக்கோ துன்பம் தராது. ஒரு காதலன். காதலி தனக்கே தனக்காக வாழவேண்டும் என நினைக்கிறான். அவளது ஒவ்வொரு செயலையும் கண்காணிக்க முயல்கிறான். வேறு யாருடனோ பழகினால் பொறாமைப் படுகிறான். தன் பக்கத்திலேயே இருக்க வேண்டும், தான் சொல்லும்போதுதான் சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறான். அவன் அவளுக்கு அடிமை. அவள் தனக்கு அடிமையாய் இருக்க வேண்டும் என்று நினைக்கிறான். இது உண்மை அன்பு அல்ல: ஏனெனில் இது உளைச்சல் தருகிறதே? இது அன்பு என்று பெயர் சூட்டிக்கொண்ட ஏதோ ஒன்று.
உங்கள் கணவரை, மனைவியை, குழந்தைகளை, இந்தப் பரந்த உலகத்தை ,ப்ரபஞ்சத்தை எந்தவிதமான துன்பமோ, பொறாமையோ சுயநல சிந்தனையோ இல்லாத வகையில் நேசிப்பதில் வெற்றீ பெற்று  விட்டீர்கள் என்றால் பற்றற்ற நிலைக்கு நீங்கள் தயாராகி விட்டீர்கள் என்று அர்த்தம்.
உண்மை அன்பு பந்தப் படுத்துவதில்லை. எங்கு பந்தம் இருக்கிறதோ,அங்கு நிலவுவது உடலின் வேட்கைதான். உண்மை அன்புடையவர்கள் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் துன்பப்பட மாட்டார்கள். அன்பு நிலைத்திருக்கும்.
உங்கள் குழந்தைகளுக்கு ஏதாவது செய்வதற்கு பிரதியாக நீங்கள் எதையும் எதிர்பார்க்கிறீர்களா,என்ன?  தனி நபருக்கு, நகரத்துக்கு, நாட்டுக்கு எது செய்தாலும் இவ்வாறே பிரதிபலன் எதிர்பாராதிருங்கள் .உலகத்துக்காக நீங்கள் செய்வது எதுவும் பலன் கருதாது செவது என்றால் உங்களிடம் பற்று எதுவும் இருக்காது. பலனை எதிர்பார்ப்பதாலேயே பற்று உண்டாகிறது.
அடிமையாய் உழைப்பது, தன்னலத்தையும் பந்தத்தையும் உருவாக்குகிறது என்றால்,நம் மனத்துக்கு நாமே தலைவராக இருந்து கொண்டு பணி புரிவது பற்றின்மை என்னும் பேரானந்தத்தைத் தருகிறது

செய்கிற வேலைக்கு முழுப் பொறுப்பையும் நாமே ஏற்றுக் கொள்கிற போதுதான் நம்மால் சிறப்பாகப் பணி புரிய இயலும். சின்ன குழந்தை ஒன்றை உங்கள் கையில் கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த வினாடியே உங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றம் காண்பீர்கள். மற்றபடி நீங்கள் எப்படி இருந்தாலும்,அந்த வினாடியில் உங்களிடம் தன்னலம் என்பது எள்ளளவும் இருக்காது. உங்கள் மனத்தில் எந்தக் கிரிமினல் எண்ணங்கள் இருந்தாலும்  அவை மறைந்து விடும். பொறுப்பு உங்கள் மீது சுமத்தப் பட்டவுடன்  உங்கள் குணமே மாறி விடும். இப்படித்தான் முழுப் பொறுப்பையும் நம் தோள்களில் சுமந்து விட்டால் நாம் யாரிடமும் எதுவும் கேட்டுக் கொண்டிருக்க வேண்டியதில்லை. நமது பாரங்களைச் சுமத்தி வைக்க “சாமி” யாரும் இல்லை. நாமேதான் நமது பணிக்கு முழுப் பொறுப்பு என்னும்போது நமது உச்சகட்ட சிறப்பு நிலையில் பணி புரிவோம்!

Wednesday, 2 August 2017

பணியின் மூலம் பேரானந்தம் (13)


இரண்டு சின்ன, பெரிய விஷயங்கள்.

கடமையில் வெற்றி பெற சுவாமிஜி இரண்டு  “சின்ன” விஷயங்களைச் சொல்வார். அவை மிகவும் முக்கியமானவை.
“நன்றே செய்க; இன்றே செய்க!” என்பது ஒன்று.
நல்லது, சரி, செய்யவேண்டும் என்று நமக்குத் தோன்றுகிற விஷயத்தை உடனே செய்து விட வேண்டும். தள்ளிப்போடல் காலத்திருடன் என்று சொல்லக் கேட்டிருக்கிறோமல்லவா?
இதனால்  என்ன பலன் கி.டைக்கும் என்று யோசித்து யோசித்துச் செயல் படுபவன் ஒரு காரியத்தையும் சாதிக்க மாட்டான். இது நல்லது உண்மையானது என்று ஒரு காரியத்தைப் புரிந்து கொண்டால் அதை உடனே செய்து முடித்து விட வேண்டும். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்றெல்லாம் கணக்குப் போட்டுக் கொண்டிருப்பதில் என்ன லாபம்? இதை Analysis Paralysis என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.
கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய இன்னொரு விஷயம் ,நாம் நல்லதொரு பணியை எடுத்துச் செய்யும்போது, எதிர்மறையாகப் பேசி நம்மைத் தடுமாற வைக்கும் சக்திகள் நம்மைச் சுற்றியே நிறைய இருக்கும்.  “வெட்டி வேலை; உன்னால் முடியுமா? ஆழம் தெரியாமல் காலை விடாதே! உன்னை விடப் பெரிய பெரிய பிரஹஸ்பதிகள் எல்லாம் முயன்று தோற்றுப் போன விஷயம்” என்று பலகுரல் மன்னர்களாக இந்த எதிர்மறை உணர்வுகள் வடிவெடுக்கும். முதலில் ஏளனம்; பின்னர் எதிர்ப்பு; காரியம் முடிந்ததும் “செம அதிர்ஷ்டம்” என்று. இவையெல்லாம் வெற்றியாளர்கள் எல்லாரும் சந்திக்கிற விஷயம்தாம். சர்ச்சில் சொன்னது போல,”Never Never Never Give up!” நாமாக சுதந்திரமாகச் சிந்தித்து முடிவெடுத்து ஒரு காரியத்திலிருந்து விடுவித்துக்கொள்வது வேறு விஷயம்.
இதுபோலப் பல தடைகளையும் சந்தித்து, எதிர்ப்புகளையும் கடந்து, நெருப்பாறுகளை நீந்தித்தான் சுவாமிஜி அரும்பணி ஆற்றியிருக்கிறார்.
இந்த தலைப்பை ஒட்டி நான் எழுதிய கவிதை ஒன்றை இங்கே பதிவு செய்யும் சபலத்தை என்னால் தவிர்க்க முடியவில்லை
. நாயகன்
கூட இருந்தவர்கள் கிசுகிசுத்துக் கொண்டிருந்தார்,
சுற்றி இருந்தவர்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
என்ன விஷயமென்று இவனுக்குப் புரியவில்லை.
முன்னுள்ள பணியொன்றே முக்கியமாய்த்தான் கருதி
முழுமூச்சாய் முனைந்தான்; முடித்து விட்டான் வெற்றியுடன்!
செயல் முடித்த காரணத்தால் ஜெயக்கொடியை ஏந்தி வந்தான்.
பார்த்திருந்தோர் இப்போது பரபரப்பாய்ச் சூழ்ந்தார்கள்!
முடியாத செயலாச்சே? முன்னெவரும் செய்ததில்லை!
எப்படி நீ சாதித்தாய்? என்ன மர்மம் என்றார்கள்.
மந்திரம்தான் அறிவாயா? மாயம் எதும் செய்தாயா?
அரை நிமிஷம் சிந்தித்தான்; அலட்டலின்றித் தான்சொன்னான்.
மந்திரமும் தெரியாது; மாயம் எதும் செய்யவில்லை!
தொடங்கினேன்; தொடர்ந்தேன்; முடித்து விட்டேன் அவ்வளவே!
முடியாது எனும் சேதி முன்பெனக்குத் தெரிந்திருந்தால்
ஒருவேளை தொடங்காமல் ஓய்வாகக் கிடந்திருப்பேன்!
சிரித்துக் கொண்டிருந்தவர்கள் சிலிர்த்தெழுந்து நின்றார்கள்!
நகையாட வந்தவர்கள் நாயகனே என்றார்கள்!



Tuesday, 1 August 2017

பணியின் மூலம் பேரானந்தம் (12)


 வெற்றிக்கு வழிகள் நேர்மையும் உண்மையும்

”நிச்சயம் வெல்லலாம் நேரான பாதையில்”
—சேவாலயா வெளியிட்டுள்ள புத்தகத்தின் தலைப்பு
-www.sevalaya.org இணைய தளத்திலிருந்து இலவசமாகத் தரவிறக்கிக் கொள்ளலாம்.

சுவாமிஜியின் கருத்துகள்:
வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களைப் பார்க்கும்போது அவர்கள் அனைவரிடமும் ஒரு தனித்தன்மையைக் காணலாம். வெற்றி பெற்ற ஒவ்வொரு தனிமனிதனிடமும் அவனது வெற்றிக்குப் பின்னால் அசாதாரணமான நேர்மை, அளவிட்டுச் சொல்லமுடியாத உண்மைப்பற்று இருப்பதைக் காண முடியும். அத்தகையவர்கள் வெற்றி பெறுவதற்குக் காரணம் இந்தத் தனித்தன்மையே.
துளிக்கூடத் தன்னலமே இல்லாதவர்கள் என்று அவர்களைக் கூற முடியாவிட்டாலும் கூட, அந்தப் பாதையில் அவர்கள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நிச்சயம் சொல்ல முடியும். துளிக்கூடத் தன்னலக் கலப்பு இல்லாமல் இருந்தால் அவர்கள் புத்தர் அல்லது இயேசுவின் நிலைக்கு உயர்ந்திருக்க முடியும்.
உண்மையும் நேர்மையும் நிச்சயம் வெற்றி பெறும் என்றாலும் அதற்குக் காத்திருக்க வேண்டும். பொறுமை வேண்டும். பொறுமை இல்லாததால் பலரும் குறுக்கு வழியில் வெற்றியைத் தேடி அலைகிறார்கள். இதனால் அறநெறியிலிருந்து விலகித் தீயவர்கள் ஆகியவர்கள் பலர். இது நமது பலவீனம்; சக்தியின்மை..
வணிகத்தில்,தொழிலில்,நேர்மையாக இருந்தால் “கதைக்காகாது” என்று நம்மில் பலரும் நினைக்கிறோம். சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
காந்திஜியின் வாழ்க்கையிலிருந்து ஒரு பக்கத்தைப் புரட்டிப் பார்ப்போம்.
அவர் தென்னாப்பிரிக்காவில் மிக அதிக வருவாய் ஈட்டிய வெற்றிகரமான பாரிஸ்டர். இந்த வெற்றிக்குக் காரணம், அவர் திறமை மட்டுமல்லாது,அவர் கடைப்பிடித்த நேர்மையும் உண்மையும் கூட. கட்சிக்காரர் பக்கம் நியாயம் இருக்கிறது என்று தெரிந்தால் ஒழிய அவர் எந்த வழக்கையும் எடுத்துக் கொள்ள மாட்டார் பொய்ச்சாட்சி அழைக்கும் வழக்கமே கிடையாது. சாட்சிகளுக்கு இப்படிச் சொல்லு அப்படிச் சொல்லு என்று சொல்லிக் கொடுப்பதில்லை. தமது அத்யந்த நண்பரானாலும் தவற்றை ஒத்துக்கொண்டு தண்டனையை ஏற்றுக்கொள்ளும்படிச் சொல்வார்; என்றாலும் முழு முயற்சி எடுத்து மன்னிப்போ குறைந்த தண்டனையோ பெற முனைந்து செயல்படுவார். ஒருமுறை வழக்கு பாதி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தமது கட்சிக்காரர் பொய் சொல்லுகிறார் என்று தெரிய வந்ததும் வழக்கிலிருந்து விடுவித்துக் கொண்டு வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டார். இப்படி பைத்தியக்காரனாய் ஒரு வக்கீல் இருந்தால் யார் அவரிடம் கேஸ் கொண்டு வருவார்கள்?
 “தவறான வழக்கை ஏன் எடுத்த்க்கொண்டு வாதாடுகிறீர்கள்?” என்று அண்மையில் தொலைக்காட்சிப் பேட்டியில் ஒரு வழக்கறிஞரைக் கேட்டார்கள். அதற்கு அவர் சொன்ன பதில்: “என்ன செய்வது? இல்லாவிட்டால் அவர் வேறு வக்கீலிடம் போய் விடுவாரே?” நீயாயமாகத்தான் படுகிறது.

ஆனால் காந்திஜியின் விஷயத்தில் நடந்தது வேறு. நியாயமான கட்சிக்காரர்கள் அனைவரும் காந்திஜியை நாடி வந்தார்கள். நீத்பதிகளுக்கும் காந்திஜி ஏற்று நடத்தும் வழக்குகள் நேர்மையானவை என்று தெரிய வந்ததால் அவரது வெற்றி விகிதம் அபரிமிதமானது. வழக்குகள் மேலும் தேடி வந்தன. வருவாய் கொழித்தது.