Wednesday, 30 August 2017

ஒரு சாமான்யனின் கீதை--3.

ஒரு சாமான்யனின் கீதை—3.
வேள்வி.
நமக்கு வாய்த்த கடமைகளைச் சிரத்தையுடன் செய்யவேண்டும். பிறரையும் அவர்கள் செய்கிற பணிகளையும் பார்த்து ஒப்பிட்டுக்கொண்டு மனத்தைச் சிதறவிடவேண்டாம். நமது பணியை  முழுக் கவனத்தையும்  செலுத்தி. முழுத் திறமையையும் கொண்டு சிறப்பாகச் செய்வோம்.
இன்னொரு முக்கிய விஷயம் இருக்கிறது அர்ப்பணிப்பு உணர்வுடன் பணி ஆற்ற வேண்டும். .சமுதாய நலனுக்கான அர்ப்பணிப்பு. இதுவே ஒரு வேள்வி. ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவிக்கிறோம்; வேள்வி .நமது அறிவையும் அனுபவத்தையும் பிறருக்குப் பயன்படும் வகையில் பகிர்ந்து கொள்கிறோம்; வேள்வி. செல்வத்தை வறியவர்களுக்குப் பயன்படும் வகையில் கொடுக்கிறோம்; வேள்வி.. . பேரறிவாளன் திருவாக நமது செல்வம், ஊருணி நீர் நிறைந்தாற்போல் பலருக்கும் பயன்படுகிறது. இரைக்கிற கிணறு மேலும் மேலும் சுரக்கிறது. நம்மிடமுள்ள செல்வத்தையும்,ஆதாரங்களையும் கொண்டு சமுதாயத்தில் புதிய செல்வம் உருவாக்கப் பணி புரிகிறோம்; வேள்வி. இப்படி முனைந்து செயல்புரிகையில், தெய்வமே நமது பணிகளுக்குத் துணை நிற்கும்  ” மடி செற்றுத் தான் முந்துறும்”.
இப்படி அர்ப்பணிப்புடன் செய்யும் வேள்வியினால், நமக்கு நலம் பெருகுகிறது;. ஈத்துவக்கும் இன்பம் என்னும் பேரின்பம் கிடைக்கிறது. நமது அறிவும், திறமைகளும் வளர்கின்றன. நமது இதயம் புனிதமாகிறது. இறைவனுக்கு நெருங்கி வருகிறோம்  பெறுகிறவனை விடக் கொடுக்கிறவனே பாக்கியவான்.
சமுதாயத்திலிருந்து பலவகையிலும் பலவும் பெற்றுக் கடன் பட்டிருக்கிறோம். பெற்றதற்குமேல் திருப்பிக் கொடுத்தாக வேண்டும் . கூட்டிக் கழித்துக் கணக்குப் பார்க்கையில் நாம் சமுதாயத்துக்கு கடனாளியாக இருக்கக்க் கூடாது. கொடையாளியாகத்தான் இருக்க வேண்டும்.

இப்படி இல்லாமல், நான் எனக்கு என்றே நினத்தவாறு எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டு தனக்காக மட்டுமே வாழ்கிறவன் சமுதாயத் திருடன். அவன் பிறந்ததும் வாழ்வதும் வீண்.,

Monday, 28 August 2017

ஒரு சாமான்யனின் கீதை--2

 ஒரு சாமான்யனின் கீதை—2
(பகவத் கீதையிலிருந்து நான் எடுத்துக் கொண்டவை)
நமக்குப் பிறப்பினாலே, சமுதாயத்தில் வாய்த்திருக்கிற இடத்தினாலே, சந்தர்ப்பத்தினாலே ஏர்பட்டுள்ள கடமைகளைச் சரிவரச் செய்ய வேண்டும். அவற்றைச் செய்வதனால்,போரில் கொலை செய்வதானால் கூட (ஏன் சமூக வாழ்வில் கசாப்புத் தொழிலானாலும் கூட) பாவம் நேராது. கடமையைச் செய்யாமல் விடுவதுதான் பாவம். கடமையைச் செய்யாதவனுக்கு சமூகத்தில் பழிச்சொல்லே  விளையும்
.ஏற்றுக்கொண்ட காரியத்தில்  மன உறுதியோடு இருக்க வேண்டும். வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம். இப்ப்படி மன உறுதியைக் குலைப்பதற்குள்ள காரணிகளில், சுற்றியிருப்பவர்கள், பலவாறாகப் பேசி மனத்தைக் குழப்புவதும் ஒன்றாகும்..
காரியத்தைத் தொடங்கியபின் கருமமே கண்ணாக இருக்கவேண்டும். தோல்விகள் நம்மைத் துவளவிடக்கூடாது. வெற்றிகள்  மிதமிஞ்சிய உணர்ச்சிகளாக நம்மை ஆகாசத்தில் பறக்க விடக்கூடாது. இப்படி சமநிலையுடன் பணி புரிவதைத்தான், எவ்வளவு சாதாரணப் பணியாக இருந்தால் கூட ‘யோகம்’ எனக் கூறுகிறார்கள்.
மனதில் எதிர்மறையான எண்ணங்கள் தோன்றி நம்மை அலைக்கழிக்கத்தான் செய்யும். அவற்றை மாற்ற என்ன வழி? அவற்றுக்கு எதிரான நேர்மறையாண எண்ணங்களை உருவாக்கிக்கொள்வதுதான். நேர்மறையில் எல்லாம் மிகச் சிறந்த நேர்மறை இறவனைப்பற்றிய சிந்தனைதான். தனியாக அமர்ந்து  இறைச் சிந்தனையில் ஆழ்வது பயனுள்ள பயிற்சியாகும்.
முன்னேற்றத்துக்குப் பயிற்சி செய்து கொண்டிருக்கிறோம் என்பதை நினைவு கொள்ள வேண்டும். அவசரப்பட்டு, முன்னேறி நாம்”ஸ்திதப் பிரக்ஞன்” ஆகிவிட்டோம் என்றெல்லாம் கற்பனை செய்து கொண்டு, மனதை நிலைப்படுத்தாமல் புலனடக்கத்துக்கான கடுமையான பயிற்சிகளில் ஈடுபடுவது ஆபத்தானது. பிறர் நம்மைப் பொய்யொழுக்கவாதி என்று பழி சொல்லவே ஏதுவாகும். மனக்கட்டுப்பட்டுக்காக விடாது முயன்றுகொண்டே இருக்க வேண்டும். அதன் ஒரு பகுதியாகவே புலனடக்க முயற்சிகள் இருக்க வேண்டும்.

நிறைவாக, அவசியம் தேவைப்படுவது, தன்னைத்தாள் ஆளும் சமர்த்து. இதுவே அமைதி தரும்.. இப்படிக் கஷ்டப்பட்டு அமைதி தேடாவீட்டால் என்ன மோசம்? நிரந்தரமான சுகத்துக்கு, நாம் அனைவரும் நாடும் சந்தோஷத்துக்கு அடிப்படையான தேவை-- அமைதி; சாந்தம். சாந்தமுலேகா சௌக்யமுலேது!.

Sunday, 27 August 2017

பகவத் கீதையிலிருந்து நான் எடுத்துக்கொண்டவை--1

பகவத் கீதையிலிருந்து நான் எடுத்துக்கொண்டவை-1
( Takeaways from the Bhagavad  Gita)
ஒரு பிரச்சினையைச் சமாளிக்க இதுதான் வழி  என்று தீர யோசித்து ஒரு முடிவை எடுக்கிறோம். Hard decisionதான். வேறு வழியில்லை. முடிவெடுத்ததும் மனது தெளிவாகிறது. செயல்படுத்த அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுகிறோம். உற்சாகத்துடன் செயற்களத்தில் நுழைகிறோம். ஆனால் சூழ்நிலையை நேருக்கு நேர் சந்திக்கும்போது  பிரச்சினை நமக்கு அப்பாற்பட்டதாகத் தோன்றி விடுகிறது. தளர்ச்சி ஏற்பட்டு விடுகிறது. மனமும் உடலும் சோர்ந்து போகின்றன. எல்லாவற்றையும் விட்டு ஓடிவிட்டால் தேவலாம் போலத் தோன்றுகிறது..மூளை அதற்குத் தோதான வாதங்களை logical ஆக ஒன்றொன்றாக எடுத்துக் கொடுக்கிறது.
என்றாலும் நமக்கு ஒரே குழப்படியாக இருக்கிறது. நமக்கு உற்ற நண்பன், நல்லவன், நாலும் தெரிந்தவனிடம்,” எனக்கு ஒண்ணும் புரியலேப்பா!” என்னதான் செய்யணும், எது சரி தப்பு, , நீயே சொல்லு என்று பொறுப்பை அவனிடம் ஒப்படைத்து விடுகிறோம். (தள்ளி விடுகிறோம்?)

ஆலோசனை சொல்கிறவனாகப்பட்டவன் என்ன செய்ய  வேண்டும்?  அனுதாப வார்த்தைகள் சொல்லக்கூடாது., அவனோடு ஒத்துப்போவது போல ஒத்துப்போய் பிறகு அவனை நம் வழியில் திருத்தலாம் என்று “Yes,but” உத்தியை எல்லாம் கையாளக் கூடாது. ஒரே சம்மட்டி அடியாக அடித்துவிடவேண்டும்—மோகமுத்காரம் என்பது போல! ,”அடட! நமது எண்ணத்தில் தவறு இருப்பது போல இருக்கிறதே!” என்று சிந்தனை திசை திரும்ப ஆரம்பிக்கும். தொடர்ந்து ஒரு புன்னகையும் பூத்தால் (Disarming Smile) பிரச்சினை  நாம் நினைக்கிறாற்போல்அவ்வளவு ஒன்றும் பெரிது இல்லை போல இருக்கிறதே! இது ச்சும்மா ஜுஜுபி என்பது போல சிரிக்கிறானே என்று ஒரு re-assurance ஏற்படும் .Counselling  செய்கிறவன் அடுத்து தன் பணியைத் தொடரலாம்..

பணியின் மூலம் பேரானந்தம் (19)


பணியின் மூலம் பேரானந்தம் (19)
செயல்கள் பிரார்த்தனையாக! பலன்கள் பிரசாதமாக!
கர்ம யோகிக்கு கடவுள் நம்பிக்கை அவசியமா? அவசியமில்லைதான்.  ஆனாலும் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் நாம் முன்பு சொன்ன அத்தனை வழிகளிலும்-குறிப்பாக-பற்றற்றுப் பணி புரிய நிறைய –முயற்சி எடுத்துக்கொண்டு பிரயாசைப்பட வேண்டும். உண்மையான கடவுள் நம்பிக்கையுள்ளவனுக்கு அந்த சிரமமே இல்லை! அவனது மனோபாவம்,அனைத்து செயல்களையும் கடவுளுக்கு சமர்ப்பணம் என்று செய்து விடுவது. நமக்கு இந்த வேலையைச் செய்ய வேண்டுமென்று பணித்திருப்பது அவன் ஆசியாகும். நம் பணியை நாம் செய்கிறோம். பலன் அவனுக்கே உரியது!

செய்யும் வேலையை பிரார்த்தனை மனோபாவத்துடன் செய்ய வேண்டும். பலனை இறைவனின் பிரசாதமாக ஏற்க வேண்டும். இதுதான் பணியின் மூலம் பேரானந்தம் எய்துவதற்கான சூட்சுமம். “கவலைப்படுவது கடவுளின் வேலை” என்பார் கண்ணதாசன்!
(பேரானந்தம் நிரம்பியது.)

Friday, 25 August 2017

பணியின் மூலம் பேரானந்தம் (18)

பணியின் மூலம் பேரானந்தம் (18)
 காரியத்தில் பதறார்…..
 கர்மயோகம் சொல்வது செயல் ஆற்றியே தீர வேண்டும். ஆனால் அதன் பதிவுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பற்றற்றுப் பணி புரிந்தால் நமது செயல்கள் நம்மைப் பந்தப் படுத்தா. இந்தக் கருத்தை சுவாமிஜி விரிவாகவே வீளக்குகிறார்.
பற்றற்றுப் பணியாற்றுவது என்ற கருத்து சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. சுவாமிஜியிடமும் நிறையப் பேர் கேட்டிருக்கிறார்கள்..பற்றற்றுப் பணி புரிவது என்பது ஏனோ தானோ என்று அசுவாரஸ்யமாகப் பணியாற்றுவதாகாதா? சுவாமிஜி இது பற்றி நிறையவே சிந்தித்திருக்கிறார். அவர் சொல்வதன் சாரம் இதுதான்.
வேலை செய்யும்போது அதில் ஒரு தீவிர வெறி, வேகம் இல்லாவிட்டால் செய்யும் பணி எப்படிச் சிறக்கும் என்ற சந்தேகம் எழும். உண்மையில் வெறியும் வேகமும் எந்த அளவுக்குக் குறைவாக  இருக்கிறதோ அந்த  அளவுக்குச் சிறப்பாக வேலை செய்ய முடியும்..எவ்வளவுக்கு எவ்வளவு அமைதியாக இருக்கிறோமோ அந்த அளவுக்கு நமக்கும் நல்லது ;நாம் செய்யும் காரியத்துக்கும் நல்லது. அமைதியான மனம் இருந்தால் நிறைய வேலை செய்ய முடியும். நன்றாகவும் செய்ய முடியும். உணர்ச்சிகளுக்கு வழி விடும்போது நமது நரம்பு பதறுகிறது. மனது கிடந்து தவிக்கிறது. ஆற்றல் விரயமாகிறது. காரியத்துக்காகச் செலவிட வேண்டிய ஆற்றல்,பதற்றத்தில் வீணாகிறது. பதறாத காரியம் சிதறாது. நமது பூரண ஆற்றலையும் செய்யும் காரியத்தில் முனைப்பாக்க வேண்டும். உலகின் மிகப் பெரிய தலைவர்களை எல்லாம் பார்த்தீர்களானால் அவர்கள் அசாதாரண அமைதி படைத்தவர்களாக இருப்பார்கள். எதனாலும் அவர்கள் சமநிலை இழக்க மாட்டார்கள். கோப வசப்பட்டவன்  அதிக வேலைகள் செய்ய முடியாது. சீற்றமே அடையாமல் இருப்பவர்கள் நிறைய சாதனை புரிவார்கள். அமைதியான சமநிலை கொண்ட மனதே நிறைந்த பணி செய்ய உகந்தது.
செய்யும் தொழிலில் ஈடுபாடு என்பது வேறு. பற்று என்பது வேறு. என்பது. பற்று வெறியையும் உணர்ச்சிகளையும் கொண்டு வரும். மனதின் சமநிலை இழக்கச் செய்யும்.
மிகத் திறமையான மருத்துவர்கள் கூட, தங்கள் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வதென்றால், அந்தப் பணியை வேறு மருத்துவர்களிடம் ஒப்படைக்கிறார்களாமே? ஏன்?
”காரியத்தில் பதறார், …மிகுந்த பொறுமையுடன் வித்து முளைக்கும் தன்மை போல் மெல்லச்செய்து பயனடைவார்” என்பான் பாரதி. 

Tuesday, 22 August 2017

பணியின் மூலம் பேரானந்தம் (17)

பணியின் மூலம் பேரானந்தம்  (17)

முப்பது நாளும் ஞாயிற்றுக்கிழமை!

நல்ல எண்ணங்கள், செயல்களின் மூலம் நல்ல பதிவுகளை உருவாக்கிக் கொள்ளலாம்.  நம் எதிர்காலத்தை நாமே வடிவமைத்துக்கொள்ளலாம்; மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்..சரிதான்.
நாம் இப்போது பணியின் மூலம் பேரானந்தம் பெறுவது பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்..
நல்ல பதிவோ, கெட்ட பதிவோ இரண்டும் விலங்குதான்; பந்தத்தை உருவாக்குபவைதாம். . பேரானந்தம் பெற, பந்தங்கள் நீங்க, விட்டு விடுதலையாகி சிட்டுக்குருவியைப்போல வானில் பறக்க வேண்டும்; பதிவுகள் கூடாது. பணியாற்றாமல்  சும்மா இருந்தால், இமய மலையில் ஒரு குகையில் ஒண்டிக்கொண்டிருந்தால் கூட பதிவுகள் இல்லாமல் போகாது… மனம் எண்ண அலைகளை உருவாக்கிக் கொண்டிருக்குமே? அவற்றின் பதிவுகள்/?
பணியாற்ற வேண்டும். பற்றுகள் இல்லாமல் பணியாற்ற வேண்டும்..
பணியாற்றுகிறேன் பேர்வழி என்று கடமைக்கே அடிமையாகிவிடும் பலரைப் பார்க்கிறோம். கடமை என்பதே பல பேருக்கு மன உளைச்சல் தரும் காரியம்  ஆகி விடுகிறது. நம்மை அது பிடித்து இழுத்துக்கொண்டு சென்று வாழ்க்கை முழுவதையுமே ஒரு தவிப்பாக மாற்றி விடுகிறது. கோடைகால வெயில் மாதிரி நம்மைச் சுட்டெரிக்கிறது. கடமையின் பரம அடிமைகளைக் கவனியுங்கள். குளிக்க நேரமில்லை. சாமி கும்பிட நேரமில்லை. எப்பவும் ட்யூட்டிதான். வெளியே போய் வேலை பார்க்கிறார்கள். வீட்டுக்கு வந்ததும் அடுத்த நாள் வேலையைப் பற்றி யோசித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள்.. கடமை அவர்கள் மீது ஏறி உட்கார்ந்துகொண்டு பிசாசு போல அமுக்குகிறது. அவர்கள் கடமைக்கு அடிமை. ஓடிக் களைத்த குதிரை தெருவில் விழுந்து மடிவதுபோல வேலையிலேயே மரித்தும் விடுகிறார்கள். பெரும்பாலானவர்கள் கடமை என்பதைப் புரிந்து கொண்டிருப்பது இந்த லட்சணத்தில்தான்.
கர்ம யோகத்தின் அடிப்படை நோக்கம் சுதந்திரமாக இருப்பதே. அதற்குத்தான் கடமை உணர்வு துணை புரிகிறது. ஆனால் தவறான புரிதலால், பலர் அதற்கு நேர்மாறாக அடிமைகளாய் மாறி விடுகிறார்கள். அந்தோ பரிதாபம்!
சுவாமிஜி குறிப்பிடுவது போன்ற இது போன்ற “கடமைக் குடியர்களை” நிறையவே சந்திக்கிறோம்! அவர்களுக்காக ”வாழ்க்கை- வேலை சமநிலை பெறுவது எப்படி?”  என்று பயிற்சி வகுப்புகள் கூட நடத்துகிறார்கள்.
மனதில் சமநிலை இருந்தால் இதற்கெல்லாம் அவசியமே இல்லை .” ஏன்  எப்போதும்  வேலை பார்த்துக்கொண்டே இருக்கிறீர்கள்? ஞாயிற்றுக்கிழமைகளிலாவது ஓய்வு எடுத்துக் கொள்ளக்கூடாதா?”” என்று கேட்டதற்கு நடைமுறைக் கர்மயோகியான என் நண்பர் சொன்னார்: “ எனக்கு முப்பது நாளும் ஞாயிற்றுக்கிழமைதான்!”
சோர்வும் தளர்ச்சியும் ஏற்படுவது பணியினால் அல்ல பணியின் மீதுள்ள பற்றினால்..

வையம் வாழ்க! (சர்வோதயம்- 60 களில் ஒரு இதழ்)

வையம் வாழ்க!
(சர்வோதயம்- 60 களில் ஒரு இதழ்)
வாழ்க எங்கள் தேசம் என்றும்
     வாழ்க எங்கள் கொள்கைகள்;
வாழ்க நித்தமு முழைப்பினால்
     வருந்தினோ ரொடுங்கினோர்!
வாழ்க என்ற ஆர்வ கோஷம்
     வானமே நிறைந்தது!
வாழ வைக்கும் கொள்கையர்க்குள்
     வஞ்சனை பிறந்தது!
வாழ்ந்து விட்ட கொள்கை எங்கும்
     வளர வென்றே ஓர்வகை
சூழ்ந்த போது வையம் எங்கும்
     சூதும் குரோதம் சேர்ந்தன!
ஆழ்ந்த துவேஷம்,பகைமை இந்த
     அவனியைப் புகைத்தது!
‘வாழ்க’ என்ற குழுவினர்க்குள்
     வாழும் போட்டி மூண்டது!
புகைந்த நெஞ்சில் ஒளி பிறக்கப்
     புதிய வேதம் வந்தது!
இகலும் இல்லை; துன்பம் இல்லை;
     இன்பம் எங்கும் சேர்கெனப்
புகன்ற தூய முனிவன் நெஞ்சப்
     பொய்கை பூத்த தாமரை;
வகையில் இந்த ‘வையம் என்றும்
     வாழ்க என்ற பேருரை!