Tuesday, 30 December 2025

பொறந்த ஊரை..

 பொறந்த ஊரை நெனச்சுப் பாத்து

பொறப்பட்டு வாங்க!

(கொத்தமங்கலம் சுப்புவின் பழைய பாடல் ஒன்றைத் தழுவி எழுதியது.)

பொறந்த ஊரை நெனைச்சுப் பாத்து

பொறப்பட்டு வாங்க!

மறந்து போன ஜனத்தையெல்லாம்

வந்து பாருங்க!

கூவத்தூரு சொகுசு எல்லாம்

கலெஞ்சு போச்சுங்க!

பாவப்பட்ட மக்களையும் 

பாக்க வாருங்க!

நேரத்திலே தேர்தல் வரும்

சீக்கிரம் வாங்க!

ஆரத்தியைக் கரெச்சு வெச்சுக்

காத்திருக்கோங்க!


புரிவதில்லை காரணங்கள்

 புரியாத காரணங்கள்

(கவிதை உறவு)

ஆக்ரோஷம் மிக்கஒரு

அலைகடலின் மீதெழுந்து

ஆத்திரமாய் வருகிறது

அடர்நுரைகள் பலசேர்ந்து!

ஆனாலும் கரைதொட்ட

 அரைநொடியில்  அது ஓய்ந்து

அமைதியுடன் பின்வாங்கி

ஆழ்கடலில் சேர்கிறது!

என்னபயன் மீண்டுமது

இன்னுமொரு அலையாகும்

சொன்ன அதே ஆக்ரோஷம்.

தொடல்கரையை;ஓய்வடைதல்!

பிரஞ்சமெனும் கடல்முதுகில்

பிறைக்கிளிஞ்சல் நாமெல்லாம்!

பிறந்தோய்ந்து போவதற்குப் 

புரிவதில்லை காரணங்கள்!


பாரதி ஆக்கிய கவிதை

 பாரதி ஆக்கிய கவிதை

1951 செப்டம்பர் 11ம்தேதி சிவாஜி இதழில் வெளியான என் முதல் பிரசுரம்

நான்காம் படிவம் (9ம் வகுப்பு) படித்துக்கொண்டிருந்தபோது எழுதியது .சொற்குற்றம் பொருட்குற்றம் பொறுத்தருள்க!)

அடிமை வாழ்வில் திளைத்த மாந்தர் ஆண்மை பெற்று எழுந்திட,

துடித்து நின்று வீறுகொண்டு தூய்மை பெற்றெதிர்த்திட

கொடுமை செய்த வெள்ளையர்கள் கதிகலங்கி நடுங்கிட

விடுதலையின் வேட்கை பொங்கும் வீரக்கவிதை ஆக்கினாய்!

நெஞ்சகத்தில் ஈரமற்ற வஞ்சகர்கள் வீழவும்

பஞ்சமின்றி வாழமக்கள் பாடு பட்டுழைக்கவும்

தொழில்களோங்கி நாட்டில்மக்கள் திறமைபெற்று வாழவும்

எழில்மிகுந்த கவிதைகூறி இன்பமூட்டி விட்டனை!

தமிழகத்தின் பண்டைவீர உணர்வுதன்னை மீண்டுமே

நமக்களித்துப் புகழ்பெறவும் நலமுறவும் ஊக்கிய

இன்பக்கவிஞன் பாரதியின் இலக்கியங்கள் போற்றியே

அன்புகொண்டு யாவரும் அகமகிழ்ந்து வாழ்குவோம்!

Monday, 29 December 2025

பாதை ஒன்றில்..

 எப்படி நான் மறந்தேன்?




பாதை ஒன்றில் பரபரப்பாகப் பயணம் புறப்பட்டேன்! 

பாதி வழியில் திடுமெனநின்றேன்; எங்கே போகின்றேன்?

ஏதோ ஒன்றை நோக்கித்தானே  இவ்வழி நடக்கின்றேன்?

ஏதது என்பது ஞாபகம்இல்லை; எப்படி நான்மறந்தேன்?




வழியில் பலபல கோலகலங்கள்! வாண வெடிச்சப்தம்!

குழப்பக் குரல்கள் கூச்சல்நெரிசல் ஆங்காங் கிருக்கின்ற!!

விழவில் தவறிய குழந்தையைப்போலே அழுது தவிக்கின்றேன்!

“அழுகையை நிறுத்து; கையைப்பிடி”என ஆரிங் கழைப்பார்கள்?




வந்த வழியைத் திரும்பிப்பார்த்தால் கலக்கம் மலிகிறது!

எந்த இடத்தில் துவங்கியபயணம் என்பதும் மறந்தாச்சு!

சொந்த இடமென் றொன்றுஇருக்கணும்; அதுதான் தெரியவிலை!

நொந்து தவிக்கும் மனதுக்கமைதி எப்படிக் கிடைத்திடுமோ?


நெருடல்

 நெருடல்


 நெஞ்சுக்குள் ஏதொன்றோ 

நெருடிக்கொண்டிருக்கிறது.

என்னவென்றே தெரியாமல்

எனக்குள்ளே பரிதவிப்பு!

நுட்பமனச் சிக்கெடுத்து

நுனிகாண முயல்கின்றேன்!

சிக்கல் மிகச் சிக்குண்டு

சித்தமிகச் சோர்கிறது!

முன் ஜென்ம நித்திரையில்

முடியாத கனவொன்று

அடிமனத்தின் ஆழத்தை

அசக்கிவரப் பார்க்கிறதா?

என்னுள்ளே மூண்டு எழும்

இன்கவிதைக் கனல் ஒன்று

நெஞ்சைப் பிளந்தெழும்பி

நர்த்தமிடத் துடிக்கிறதா?

இனி நிகழ இருக்கின்ற

இன்னலுக்கு முன் நிழலாய்ச்

சோகம் ததும்புமொரு

சேதிசொல்ல வருகிறதா?

 நெஞ்சுக்குள் ஏதொன்றோ 

நெருடிக்கொண்டிருக்கிறது!

Sunday, 28 December 2025

நாவசைத்துச் சுட்ட வடு

 நாவசைத்துச் சுட்டவடு ஆறாது என்றுசெந்

நாப்போதான் சொல்லிவைத்தான்!

ஏவிவிட்ட நெஞ்சகமும் இழுக்குரைத்த தீநாக்கும்

எரிவதனைச் சொல்லவிலையே!

பூவனைய மனசுகளைப் புண்படுத்தி நானுரைத்த

புன்மொழிகள் நெஞ்சுசுடுமே!

தாவி இங்கு மீண்டுவந்து பிரம்மாஸ்திரமாகத்

தாக்கியெனைக் கொல்லவருமே!

Saturday, 27 December 2025

நரேந்திரரின் வீர உரை

                        நரேந்திரனின் வீர உரை

நாட்டினைக்காக்க நமக்கிறைஅளித்த

 நரேந்திரனின் வீரவுரை

பாட்டினில் விரிக்கும் பாங்கறியேன் எனின்

 பரிசோதித்துப் பார்க்கின்றேன்! 

பதினோராயிரம் அடி உயரத்தில் 

பாரதம் காக்கப் புறப்பட்டீர்!

இதயத்துறுதி இமயத்தினும் மிக

இன்னும் மிகமிக மேலதிகம்!

நெஞ்சு நிமிர்த்தி நிற்கும் பாரத

நேசம் உரிய வீரர்களே!

பஞ்சின் மெல்லடிப் பாவையர் அல்லாப்

பாரதம் காக்கும் படை மகளீர்!

தீக்கனல் தெறிக்கும் காய்சினம் கண்டு

தீயவர் அஞ்சித் துடிக்கின்றார்!

பார்க்கெலாம் நீர் ஓர் சேதியைச் சொன்னீர்,

பாரதபூமி விலைக்கில்லை!

சின்னக்கண்ணன் வேய்ங்குழல் கீதம்

சிலிர்ப்பை அளிக்கும் சாந்தி தரும்!

அன்னைக்கே ஒரு தீங்கு நேர்ந்திடில்

அவன்கைச் சக்கரம் சுழன்றுவரும்! 

சிந்தனைத்தெளிவுவீரமும் மானமும் 

செறுகளத் திறமை இவை சொன்ன

செந்தமிழ்ப்புலவன் திருவள்ளுவனின்

சீரியமொழியின் திருவுரு நீர்!

இந்தியம் காக்க இன்னுயிர் ஈந்த

இனிய நம் வீர்ர் போர்க்களத்தில்

சிந்திய ரத்தம் வீண்போகாது

சிரத்தினைத் தாழ்த்திச் சூளுரைப்போம்!

புண்ணியபாரத பூமியைக்காக்கப்

புரிந்திடும் உங்கள் சாகசங்கள்

விண்ணினும் உயர்ந்த; உங்கள் புகழ்

வீடுகள் தோறும் கதை சொல்லும்!

நாடுபிடிக்க நினைந்து முனைந்தவர்

நாசமடைந்தது வரலாறு!

பீடு நடையிடும் வீர்ர்களே!யாம்

பெருமிதம் கொண்டோம் உமைக்கண்டு!

அச்சம் இன்றி அனைவரும் வாழவும்

அன்னைபூமி நலம்பெறவும்

துச்சம் என்றுயிரைத் துணிந்தவர் உமது

தூயகதை ஓர் இதிகாசம்!